>>> 'இன்ஸ்பயர்' விருதுக்கு விண்ணப்ப பதிவு குறைவு..செப்டம்பர் 30க்குள் விருதுக்கு விண்ணப்பிக்க அறிவுறுத்தல்...

 புத்தாக்க அறிவியல் விருது விண்ணப்பங்கள் குறைந்த அளவே பதிவாகியுள்ளதால் அனைத்து பள்ளிகளில் மாணவர்களை பங்கேற்க செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பள்ளி மாணவ மாணவியர் இடையே அறிவியல் ஆர்வத்தை அதிகரிக்க ஆண்டுதோறும் புத்தாக்க அறிவியல்(இன்ஸ்பயர்) விருது வழங்கப்படுகிறது.

 இதற்காக தங்கள் அறிவியல் படைப்பு குறித்த விபரங்களோடு மாணவர்கள் இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

 தகுதியான படைப்புகளை தேர்வு செய்து கண்காட்சி நடத்த ஒவ்வொரு மாணவருக்கும் தலா 10000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது. 

மாவட்ட, மாநில அளவில் கண்காட்சி நடத்தி விருதுகள் வழங்கப்படுகின்றன.

நடப்பு கல்வியாண்டில் ஊரடங்கால் பள்ளிகள் திறக்கப்படவில்லை. கடந்த ஜூன் முதல் இந்த விருதுக்கு விண்ணப்பிக்க அறிவுறுத்தியும் போதுமான அளவில் விண்ணப்பங்கள் பெறப்படவில்லை.

விண்ணப்ப பதிவு மிக குறைவாக இருப்பதால் அனைத்து பள்ளிகளிலும் செப்டம்பர் 30க்குள் விருதுக்கு விண்ணப்பிக்க மாணவர்களுக்கு அறிவுறுத்தவும், நடவடிக்கை எடுக்கவும் வேண்டும் என சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திரு.கணேஷ்மூர்த்தி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.