>>> சாகாவரம் பெற்ற மூன்றெழுத்து நீதி தேவதை (RBG - Ruth Bader Ginsberg) அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி - பெண்ணுரிமைக்காக ஓங்கி ஒலித்த குரல்....

 


அவர் மேடைக்கு வந்தால் கூட்டம் முழுதும் "ஆர்.பி.ஜி.' "ஆர்.பி.ஜி.' என்று கோஷிக்கும். அவர் முகமும் அந்த மூன்றெழுத்தும் போட்ட டீ ஷர்ட் அனைவரையும் அலங்கரிக்கும். அவர் குறித்த ஆவணப்படம், நெட் ஃப்ளிக்ஸில் போடு போடு என்று போடுகிறது. ஆர்.பி.ஜி ஒரு நிகழ்ச்சிக்கு வருகிறார் என்றால், 20,000 பேர் நிச்சயம் ஆஜராகி விடுவார்கள்.

 யார் அந்த ஆர்.பி.ஜி.? திரைப்பட நடிகரா? அரசியல்வாதியா? இல்லை இல்லை. அவர் அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி "ரூத் பேடர் கின்ஸ்பர்க்'. ஓர் ஆதர்ச நீதிபதி என்றால் நாம் எப்படி ஓர் ஆளுமையை உருவகம் செய்வோமோ அப்படியே அவர் இருந்தார். "ஆர்.பி.ஜி காலமானார்' என்ற செய்தியைக் கேட்டவுடன் உலகத்தில் இருந்து ஒளிக்கீற்று ஒன்று மறைந்தது போன்ற உணர்வு ஏற்பட்டது.
 அறுபது ஆண்டுகளுக்கு முன் அவர் அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் "கிளார்க்' பணிக்கு மனு கொடுத்தார். பெண் என்ற ஒரே காரணத்திற்காக அவர் மனு நிராகரிக்கப்படுகிறது. "கிளார்க்' என்றால் எழுத்தர் இல்லை. "லா கிளார்க்' என்றால் நீதிபதிகளுக்கு முன்கூட்டியே தீர்ப்புகள் எடுத்துக் கொடுத்து சட்ட நுணுக்கங்களை ஆராய்ச்சி செய்து நீதிபதி தீர்ப்பெழுத உதவுபவர். "க்ளார்க்'காக இருந்த பலர் பின்னர் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். நிராகரிப்புக்குப் பல ஆண்டுகள் பின், அதே ஆர்பி ஜி அமெரிக்காவின் இரண்டாவது பெண் உச்சநீதிமன்ற நீதிபதி ஆகிறார்.
 அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் ஒன்பது நீதிபதிகள்தான். ஒவ்வொரு வழக்கையும் ஒன்பது பேரும் ஒன்றாக அமர்ந்து விசாரிப்பார்கள். இங்கு போல இரண்டு பேர், மூன்று பேர் என்று அமர்வுகள் கிடையாது. அவர்களுக்குப் பணிமூப்பு கிடையாது. இறக்கும் வரை பணி புரியலாம்.
 "இதென்ன அநியாயம், சாகும்வரை நீதிபதியா' என்கிறீர்களா? ஆர்.பி.ஜி. போன்ற ஒருவர் நமக்கு நீதிபதியாக இருந்தால் அவருக்கு சாகாவரம் தர இறைவனை வேண்டிக் கொள்வீர்கள்.
 "எவ்வளவு பெண் நீதிபதிகள் உச்சநீதிமன்றத்தில் இருந்தால் சரியாக இருக்கும் என்று எண்ணுகிறீர்கள்' என்று அவரைக் கேட்டதற்கு, அவர் சொன்ன பதில்: "ஒன்பது பேரும் பெண்களாக இருந்தால் சரியாக இருக்கும்'.
 கேள்வி கேட்டவர் சற்று ஆடிப்போய் விட்டார். "அது எப்படி சரியாக இருக்கும்' என்று கேட்டதற்கு அவர் தந்த பதில்: "ஒன்பது நீதிபதிகளும் ஆண்களாக பல காலம் இருந்தார்களே, அப்போது ஏன் யாருக்கும் அது தவறாகத் தோன்றவில்லை?'
 ஆம், ஆர்.பி.ஜி.யின் பேச்சு வெட்டு ஒன்று துண்டு இரண்டுதான். பெண்கள் சமத்துவத்திற்கு கடைசி மூச்சு வரை (18 செப்டம்பர் 2020) அதாவது தனது 87 வயது வரை குரல் கொடுத்தவர். "நான் எங்களுக்காக (பெண்பாலருக்கு) தயவு ஒன்றும் கேட்கவில்லை. எங்கள் குரல்வளையின் மீது வைத்திருக்கும் உங்கள் காலை எடுங்கள். அது போதும்' என்றார் அவர். ஐந்து அடி உயரம்தான். ஆனால் அவரது ஆளுமை ஆகாய உயரம்.
 சட்டப் படிப்பு முடிக்கும்போதே அவருக்குத் திருமணமாகி, அவர் தாயும் ஆகி இருந்தார். பல சட்ட நிறுவனங்கள் அவரை வேலைக்கு ஏற்றுக் கொள்ளவில்லை. அதற்கு மூன்று காரணங்கள்: அவர் பெண், அவர் யூதர், அவர் ஒரு தாய்.
 அவர் வாழ்க்கை, ரோஜா மலர் தூவிய பாதையாக அமையவில்லை. கரடு முரடானதுதான். தன் கொள்கைகளில் துளியும் சமரசம் செய்து கொள்ளாமல், அமெரிக்க அரசியல் சாசனத்தை ஆதர்சமாகக் கொண்டு, அதில் பெண்களுக்கும், கருப்பர்களுக்கும் ஓரங்கட்டப்படும் உரிமைக்கும் குரல் கொடுத்தார்.
 தன் கணவரை கல்லூரியில் சந்தித்தார். அவரை மணந்து அவர் 2010}இல் புற்று நோயால் இறக்கும் வரை அந்நியோன்னிய வாழ்க்கை வாழ்ந்தார். நம் ஊர் போல (கரோனா வரும் வரை) உச்சநீதிமன்ற நீதிபதி வீட்டில் வேலைக்கு ஆட்கள் அங்கு கிடையாது. சமையலில் இருந்து அனைத்துப் பணிகளிலும் அவர் கணவர் சம பங்கு ஏற்றார். சொல்லப்போனால் அவரே முக்கால்வாசி நாள்கள் சமைத்து விடுவாராம். ஆர்.பி.ஜி. கூறினார்: "என் வாழ்க்கைத்துணை தன் வேலை எத்தனை முக்கியமோ அத்தனை முக்கியம் என் வேலையும் என நினைத்தார்'. கணவர் அமைவதும் பெரிய வரம் இல்லையா?
 திருமணத்திற்குப் பின்னர் அவர் மாமியார் அவரிடம் "உன் திருமண வாழ்வின் வெற்றியின் ரகசியம் என்ன' என்று கேட்டார். "சில சமயம் செவிடாக இருக்கவேண்டும்' என்றாராம் ஆர்.பி.ஜி. இதைப் பற்றி சொல்லிவிட்டு "எனது 56 ஆண்டு இல்லற வாழ்வில் மட்டுமல்ல என் வெளி வாழ்விலும் உச்சநீதிமன்றத்திலும் இதைப் பின்பற்றி இருக்கிறேன்' என்றார்.
 ஆர்.பி.ஜி.க்கு புற்று நோய் வந்தது.பெருங்குடல், கணையம், நுரையீரல் பகுதிகளில். போதுமா? "காலா உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன்; என்றன் காலருகே வாடா! சற்றே உனை மிதிக்கின்றேன்' என்று நம் மகாகவி பாடினார். ஆர்.பி.ஜி. அதை செய்து காட்டினார். புற்று நோய் ஒருநாள் கூட அவர் செய்ய வேண்டிய கடமையைச் செய்ய விடாமல் அவரைத் தடுக்கவில்லை.
 ஒருநாள் அவர் கணவர் "ரூத்! உன்னை பார்த்தால் வதை முகாமில் இருந்து வந்தவர் போல் இருக்கிறது. உடலைப் பேண ஏதேனும் செய்ய வேண்டும்' என்று சொன்னாராம். உடனே அவர் "வொர்க் அவுட்' பயிற்சியாளர் ஒருவரை வரவழைத்து வெயிட் தூக்குதல் முதலிய பயிற்சிகளைச் செய்யத் தொடங்கினார். அதை அவர் தவறாது செய்வாராம். அவர் வொர்க் அவுட் செய்வது பிரபலமாகிப் பலரையும் பின்பற்ற வைத்தது.
 பெண்களுக்கு வீடு}வேலை என்கிற கழைக்கூத்து நன்றாகத் தெரியும். அதை "பேலன்ஸ்' செய்து கொண்டே இருக்கவேண்டும். அவர் தனது முதல் குழந்தையை கருவுற்றிருந்தபோது, கணவர் கட்டாய ராணுவப் பணிக்குச் சென்று விட்டார். ஆர்.பி.ஜி. சட்ட கல்லூரியில் சேரவேண்டும். தன்னால் முடியுமா என்று தயக்கம்.
 அவர் மாமனார் சொன்னார், "ரூத், இந்த இக்கட்டில் நீ சட்டப் படிப்பைக் கைவிட்டால் அது புரிந்துகொள்ளக் கூடியது. யாரும் உன்னைக் குறைவாக நினைக்கமாட்டார்கள். ஆனால், உனக்கு உண்மையில் சட்டம் பயிலவேண்டும் என்ற வேட்கை இருந்தால், கவலையை விடு குழந்தையையும் படிப்பையும் எப்படி சமாளிக்கலாம் என்று யோசி' என்றார். தன் கணவருடன் கலந்து ஆலோசித்து அதையே செய்தார்; சட்டப் படிப்பைத் தொடர்ந்தார். முதல் மாணவராக வெற்றி கண்டார்.
 அவர் பெற்றோர் பணம் படைத்தவர்கள் இல்லை. கல்லூரிக் கட்டணம் கட்டக்கூட வசதி கிடையாது. அவர் உச்சநீதிமன்ற நீதிபதி பதவி ஏற்கும்போது, தன் வெற்றியைத் தன் தாயார் கால்களில் சமர்ப்பித்தார். தாயாரின் அறிவுரைப் பற்றியும் அவர் கூறியுள்ளார்.
 "உன் நேரத்தை கோபம், வெறுப்பு, வருத்தம், பொறாமை போன்ற வெற்று உணர்ச்சிகளில் வீணடிக்காதே. அவை உன் நேரத்தை உறிஞ்சி விடும். நீ செல்ல வேண்டிய இடத்திற்கு உன்னை அழைத்துச் செல்லாது'.
 அவருடைய தீர்ப்புகளில் தெளிவு, துணிவு இரண்டும் இருக்கும். "புஷ் எ கோர்' என்று ஒரு தீர்ப்பு. அதிபர் புஷ் பதவி ஏற்றதே அந்தத் தீர்ப்பின் அடிப்படையில்தான். வாக்குகளை மறு கணக்கெடுப்பு செய்ய வேண்டும் என்று ஃபுளோரிடா மாகாண நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதை எதிர்த்து புஷ் அமெரிக்க உச்சநீதிமன்றம் வருகிறார்.
 ஐந்து பேர் அவருக்கு சாதகமாக தீர்ப்பு, நான்கு பேர் அவருக்கு எதிராக. அந்த நான்கு பேரில் ஒருவர் ஆர்.பி.ஜி. பெரும்பான்மை (அதாவது ஐந்து பேரின்) தீர்ப்பு, அடிப்படை சட்ட தத்துவத்திற்கு முரணாக உள்ளது என்று அவர் தன் தீர்ப்பில் எழுதினார். ஆனால் ஐந்து நீதிபதிகள் புஷ்ஷுக்கு சாதகமாக இருந்ததால் அவர் வெள்ளை மாளிகையில் அமர்ந்தார்.
 "யுனைடெட் ஸ்டேட்ஸ் எதிர் விர்ஜினியா மிலிட்டரி இன்ஸ்டிடியூட்' என்ற வழக்கில் அவருடைய தீர்ப்பு அனைவரின் பாராட்டையும், கவனத்தையும் ஈர்த்தது. அந்த அமைப்பில் ஆண்களை மட்டும் அனுமதிக்கும் கொள்கை பல ஆண்டுகளாக இருந்து வந்தது. அதாவது, ஆர்.பி.ஜி.யின் தீர்ப்பு வரும் வரை. "பொதுப்படையாக இதுதான் பெண்களால் முடியும்; அவர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்று சொல்லி உயர் தகுதி கொண்டுள்ள பெண்களுக்கு வாய்ப்பளிக்காமல் இருப்பது இனிமேல் செல்லுபடியாகாது' என்று சொன்னார்.
 "ஓல்ட்மஸ்டட் எதிர் எல்சி' என்று ஒரு வழக்கு. மனநலம் குன்றியவர்களின் மனித உரிமைகளை நிலை நாட்டிய மிகப்பெரிய வழக்கு அது. "அரசு, மனநலக் குறைபாடு உள்ளவர்களை தனிமைப்படுத்தி அடைக்காமல் சமூக அமைப்புகளில் வைக்க முடியுமானால் அதை செய்யவேண்டும். அது அவர்களின் மனநலத்தை மேம்படுத்த உதவும்' என்றார். இது 1999}இல் சொன்ன தீர்ப்பு. ஆர்.பி.ஜி. யின் தொலைநோக்கு , மனித உரிமை சார்ந்த சமத்துவம், கோணாது நிற்கும் நீதி நிலை அனைத்தையும் கூறுகிறது அவரது அந்தத் தீர்ப்பு.
 அவர் வழக்குரைஞராக வாதாடிய ஒரு வழக்கு அவரது நடுநிலைமையை தெளிவுபடுத்தும். அதுதான் "வெய்ன்பெர்கர் எதிர் விசென்பெர்க்' வழக்கு. "பிரசவத்தில் மனைவியை இழந்து குழந்தையை கவனித்துக் கொள்ளும் தந்தைக்கும், தாயாருக்குக் கொடுக்கும் சலுகைகளைத் தரவேண்டும்' என்று வாதாடி வெற்றி பெற்றார் அவர்.
 சொல்லிக்கொண்டே போகலாம் அவரின் தீர்ப்புகளை; அவரின் பெருமைகளை. ராக் ஸ்டார் என்கிறார்களே அதுபோல ஒரு கவர்ச்சி ஆர்.பி.ஜி.க்கு எப்படி வந்தது? அவரின் தூய்மை, நீதி வழுவா நிலை, தளரா உழைப்பு, நேர்கொண்ட பார்வை } இவை அனைத்தும் தங்கள் நன்மைக்கே என்று மக்கள் உணர்ந்தார்கள்.
 "ஆர்.பி.ஜி.' என்கிற மூன்றெழுத்து நீதித்துறை வரலாற்றில் நிரந்தர இடம் பெற்றிருக்கிறது. அந்த நீதி தேவதைக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம்.
 
 கட்டுரையாளர்:
பிரபா ஸ்ரீதேவன் அவர்கள், நீதிபதி (ஓய்வு).

நன்றி: தினமணி நாளிதழ்