🍁🍁🍁 ஜோ பைடன்: சொந்த வாழ்வில் சோகங்களை சந்தித்த மனிதர் மூன்றாவது முயற்சியில் அமெரிக்க அதிபராகிறார்...



  •  1900ம் ஆண்டுக்குப் பிறகு அதிக சதவீத வாக்காளர்கள் இந்த முறை வாக்களித்துள்ளனர். இதுவரை பைடன் 74 மில்லியன் வாக்குகளைப் பெற்றுள்ளார். இது வரலாற்றில் இதுவரை எந்த அதிபர் தேர்தல் வேட்பாளரும் பெற்றிராத வாக்கு எண்ணிக்கை இது.
  • 8 ஆண்டு காலம் அதிபர் பராக் ஒபாமாவின் துணை அதிபராக தாம் பணியாற்றிய வெள்ளை மாளிகைக்கு தற்போது அதிபராக திரும்பி வரவிருக்கிறார் பைடன்.
  • 78 வயதாகும் பைடன், அமெரிக்க வரலாற்றில் மிகவும் வயதான அதிபராகவும் இருப்பார்.
  • ஜோ பைடன், அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக ஒரு பெண் துணை அதிபரையும் (கமலா ஹாரிஸ்) தம்முடன் வெற்றிப்பாதையில் அழைத்து வந்திருக்கிறார்.

மூன்றாவது முயற்சியில் வெற்றி

இதற்கு முன்பாக இரண்டு முறை அதிபர் பதவிக்கு முயன்றிருக்கிறார் பைடன்.

1988ம் ஆண்டு பிரிட்டன் தொழிலாளர் கட்சித் தலைவர் நெயில் கின்னாக்கின் பேச்சை காப்பியடித்து பேசியதாக அவரே ஒப்புக்கொண்டு அதிபர் பதவிக்கான போட்டியில் இருந்து விலகினார்.

2008ல் ஜனநாயக கட்சியின் சார்பில் வேட்பாளர் ஆவதற்கு முயர்சி செய்தார். பிறகு அவரே அந்தப் போட்டியில் இருந்து விலகி ஒபாமாவின் துணை அதிபர் வேட்பாளராக நியமிக்கப்படுவதை ஏற்றுக்கொண்டார்.

8 ஆண்டு காலம் ஒபாமாவோடு துணை அதிபராக இருந்தது ஒபாமா ஆட்சியின் பெருமைகளில், அதன் மரபில் உரிமை கோர பைடனுக்கு உதவியாக இருந்தது.

ஜோ பைடனின் வாழ்வு தனி மனித சோகங்கள் நிரம்பியது என்பது பல அமெரிக்கர்களுக்குத் தெரியும்.

1972ல் நடந்த ஒரு கார் விபத்தில் அவர் தமது முதல் மனைவி நெய்லியா மற்றும் பெண் குழந்தை நவோமி ஆகியோரை இழந்தார். இந்த விபத்தில் உயிர் பிழைத்த தமது இளம் மகன்கள் பியூ மற்றும் ஹன்டர் சிகிச்சை பெற்றுவந்த மருத்துவமனை அறையில் இருந்து அவர் தமது முதல் செனட்டர் பதவிக்காலத்துக்கான பதவியேற்பு உறுதிமொழியை எடுத்துக்கொண்டார்.

2015ல் அவரது மகன் பியூ மூளை புற்று நோயால் தமது 46வது வயதில் இறந்தார். 2016ல் அதிபர் பதவிக்கான போட்டியில் ஈடுபடாததற்கு இது ஒரு காரணம் என்று பைடன் கூறியுள்ளார்.