இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான வருமான உச்சவரம்பை உடனடியாக ரூ.25 லட்சமாக உயர்த்திட வேண்டும் என மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் தாவர்சந்த் கெஹலோட்டுக்கு திமுக பொருளாளரும், திமுக நாடாளுமன்ற குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள தகவல் குறிப்பு:
“மத்திய அரசின் இட ஒதுக்கீடு சலுகைகளைப் பெறுவதற்கு இதர பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர்களின் ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்குக் குறைவாக இருக்க வேண்டும். இந்த உச்சவரம்புத் தொகையை மத்திய அரசு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றி அமைக்க வேண்டும். அதன்படி 1.9.2020 முதல் மாற்றி அமைத்த புதிய உச்சவரம்பை மத்திய அரசு நிர்ணயித்திருக்க வேண்டும்.
ஆனால், இது தொடர்பாக மத்திய அரசு முடிவெடுக்காமல் காலம் தாழ்த்துவதால், திமுக பொருளாளரும், திமுக நாடாளுமன்ற குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு இன்று (3.12.2020) மத்திய சமூக நலம் மற்றும் அதிகாரப்படுத்துதல் அமைச்சர் தாவர் சந்த் கெஹலோட்டுக்கு அவசரக் கடிதம் எழுதியுள்ளார்.
வல்லுநர் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் வருமான உச்சவரம்பு மூன்று ஆண்டுக்கு ஒரு முறையோ, தேவைப்பட்டால் இன்னும் குறுகிய கால இடைவெளியிலோ, திருத்தி அமைக்கப்பட வேண்டும் என்று மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறை தனது 8.9.1993 தேதியிட்ட ஆணையைச் சுட்டிக்காட்டி, ஆனால் இதற்கு மாறாக மத்திய அரசு பல ஆண்டுகள் சென்ற பிறகே இந்த மாற்றத்தை நிர்ணயிக்கிறது என்று இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான நாடாளுமன்றக் குழு, மக்களவைத் தலைவரிடம் 25.7.2020 அன்று சமர்ப்பித்த தனது அறிக்கையில் கூறியுள்ளது குறித்தும், தனது கடிதத்தில் டி.ஆர்.பாலு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நாடாளுமன்றக் குழு, தனது அறிக்கையில் ‘கிரீமிலேயர்’ எனப்படும் பிற்படுத்தப்பட்டோரில் வசதியானவர்கள் யார் என்பதை மிகுந்த கவனத்துடனும் எதார்த்த நிலையைக் கருத்தில் கொண்டும் நிர்ணயிக்க வேண்டும் என்றும், இதனை நியாயமான வகையில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி (ஜி.டி.பி), பணவீக்கம், விலை உயர்வு, தனிநபர் வருமானம், மருத்துவம், போக்குவரத்து, கல்விக்கான செலவுகள் உயர்வு போன்றவற்றுக்கு ஏற்ப ஆண்டு வருமான உச்சவரம்பு, உரிய இடைவெளியில் உயர்த்தப்பட வேண்டியது அவசியமானது என்று கூறியிருப்பதையும், டி.ஆர்.பாலு தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் 2015ஆம் ஆண்டு மத்திய அரசுக்கு அளித்த அறிக்கையிலேயே வருமான உச்ச வரம்பு 15 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்ததைக் கருத்தில் கொண்டு நாடாளுமன்றக் குழுவின் உறுப்பினர்கள் அனைவரும் ஒருமனதாக வருமான வரம்பு 20 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்ததையும் மத்திய சமூகநீதி அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஏற்கெனவே இந்தக் கோரிக்கை தொடர்பாக 10.9.2020 அன்று அமைச்சர் தாவர் சந்த் கெஹலோட்டுக்குத் தான் எழுதிய கடிதத்தை நினைவூட்டி, மூன்று மாதங்கள் கழிந்த பின்னரும் மத்திய அரசு இந்த விஷயத்தில் முடிவு எடுக்காததை சுட்டிக் காட்டியுள்ளார்.
கால தாமதம் செய்யும் மத்திய அரசு:
“கிரீமிலேயர்” எனப்படும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பில் முன்னேறியவர்களைக் கண்டறியும் வகையில் வருமான உச்ச வரம்பினை நிர்ணயம் செய்வது பற்றி மத்திய அரசு அமைத்திட்ட வல்லுநர் குழு 1993 -ம் ஆண்டு அளித்த அறிக்கையின்படி குறைந்தபட்சம் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த வருமான உச்சவரம்பை மத்திய அரசு மாற்றி அமைத்திட வேண்டும். ஆனால், இதனை அரசு பின்பற்றவில்லை.
1993-க்குப் பிறகு, குறைந்தபட்சம் 9 முறையாவது இதர பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கான வருமான உச்சவரம்பை உயர்த்தி இருக்க வேண்டும். 1993-ல் ரூ.1 லட்சமாக இருந்த வருமான உச்சவரம்பு 9.3.2004ல் ரூ.2.5 லட்சமாகவும், 14.10.2008-ல் ரூ.4.5 லட்சமாகவும், 16.5.2013ல் ரூ.6 லட்சமாகவும், அதன்பின்னர் 1.9.2017-ல் ரூ.8 லட்சமாகவும், என நான்கு முறை மட்டுமே மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
3 ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது இந்த வரம்புத் தொகை உயர்த்தப்பட வேண்டும் என்பதை 1993-ம் ஆண்டே மத்திய அரசு ஏற்றுக் கொண்ட போதிலும் அதனைச் செயல்படுத்தவில்லை என்பதோடு அரசு தனது கொள்கைக்கு முரணாக பல ஆண்டுகள் தாமதத்துக்குப் பின் இந்த வருமான உச்சவரம்பை மாற்றி அமைப்பது கண்டிக்கத்தக்கது.
‘கிரீமிலேயர்’ முறையை நீக்கிடுக:-
இதர பிற்படுத்தப்பட்டோரின் நலனுக்கு எதிரான பரிந்துரைகளை உள்ளடக்கிய பி.பி.சர்மா கமிட்டி அறிக்கையை நிராகரிக்க வேண்டும், 14.10.2004 மற்றும் 6.10.2017 தேதியிட்ட மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறையின் ஆணைகள் திரும்பப் பெறப்பட வேண்டும், சம்பளம் மற்றும் விவசாய வருமானங்கள் வருமான உச்சவரம்பு கணிப்பதில் விலக்கப்பட வேண்டும்.
ஓ.பி.சி. சான்றிதழ் 3 ஆண்டுகள் வரை செல்லுபடியாகும் விதமாக வழங்கப்பட வேண்டும். அதற்குத் தேவையான அரசமைப்பு சட்டத் திருத்தங்கள் உடனடியாக இயற்றப்பட வேண்டும், எனவும் டி.ஆர்.பாலு வலியுறுத்தியுள்ளார்.
எனவே, இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு, தற்போதைய பொருளாதார நிலைமை, விலைவாசிகள், பணவீக்கம் போன்றவற்றையும் கணக்கில் கொண்டு வருமான உச்சவரம்பை ரூ.25 லட்சமாக உயர்த்தவும், இது தொடர்பான இக்கடிதத்தில் எடுத்து வைக்கப்பட்டுள்ள ஏனைய கோரிக்கைகள் மீதும் முன்னுரிமை அளித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்போது தான் தற்போது 16 சதவீதம் அளவில் மட்டுமே உள்ள இட ஒதுக்கீடு பெற்றுள்ள நிலை மாறி அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள 27 சதவீதம் ஒதுக்கீட்டை பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்த மக்கள் முழு அளவில் பெற்றுப் பயனடைய முடியும் என்று டி.ஆர்.பாலு தனது கடிதம் வாயிலாக மத்திய அமைச்சர் தவார் சந்த் கெஹலோட்டுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்”.
இவ்வாறு திமுக தலைமைக் கழகம் தெரிவித்துள்ளது.