கொரோனா - இரண்டாவது அலையில் அதிக பாதிப்புகளை எதிர்கொள்ளும் பிரேசிலின் மனவ்ஸ் நகரம் - Dr.A.B.ஃபரூக் அப்துல்லா...


 இரண்டாம் அலை குறித்த பேச்சுகள் கிட்டத்தட்ட இந்தியாவில் குறைந்து விட்ட சூழ்நிலையில் 

பொதுவெளியில் முகக்கவசம் அணிவது மிகவும் அரிதாகி விட்ட நிலையில் 

சிறு பெரு விழா மற்றும் வைபவங்களில் மக்கள் கூடுவது அதிகரித்து விட்ட சூழ்நிலையில் 

நாமும் ஒருவகை COVID COMPLACENCY எனும் மெத்தனப்போக்குக்குள் நுழைந்து விட்டோம். 

ஆனால் நேற்று 27.1.2021 லான்சட் மருத்துவ இதழில் வெளியாகியுள்ள மனவ்ஸ் ( Manaus)  நகரின் தற்போதைய நிலை  நமக்கு அச்சத்தை ஏற்படுத்துகின்றது 

ப்ரேசில் நாட்டில் உள்ள அமேசோனாஸ் மாகாணத்தின் தலைநகரம் தான் மனவ்ஸ் நகரம் 


20 லட்சம் மக்கள் வாழும் ஊர் 

கடந்த 2020 ஏப்ரல் மே மாதங்களில் கொரோனாவின் முதல் அலை வாரி அடித்துச்சென்ற ஊர் இது. 

கிட்டத்தட்ட 76% பேருக்கும் மேல் மக்களுக்கு தொற்று ஏற்பட்டு மந்தை எதிர்ப்பாற்றல்(Herd Immunity)  வந்து விட்டது என்று பேசப்பட்ட ஊர். 

கடந்த ஏப்ரலில் ஏற்பட்ட முதல் அலைக்குப்பிறகு  நவம்பர் மாதம் வரைஉள்ள

ஏழு மாதங்கள் அடுத்த அலையின் எந்த அறிகுறியும் இன்றி ஊர் அமைதியாகவே இருந்துள்ளது. 

இந்நிலையில் திடீரென்று 

டிசம்பர் மாதம் முதல் நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக கட்டுபாட்டை மீறிச் சென்றது. 

மே மாதம் - 338 மரணமடைந்தது தான் கொரோனா முதல் அலையில் ஏற்பட்ட அதிக பட்ச ஒரு மாத இழப்புக்கணக்கு 

ஆனால் 

ஜனவரி மாதத்தின் முதல் மூன்று வாரங்களுக்குள்ளாகவே 1333 பேர் கொரோனாவின் இரண்டாவது அலைக்கு இறந்துள்ளனர்.  

இழப்பு முந்தைய அலையை விட  மூன்று மடங்காக உயர்ந்துள்ளது 

மேலும் வெறும் ஒரு மாதத்திற்குள் திடீரென அங்குள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் சேர்த்த முப்பது மருத்துவமனைகளும் நிரம்பி விட்டன. 

ஆக்சிஜன் சிலிண்டர் சப்ளை செய்யும் கம்பெனி ஸ்தம்பித்து நிற்கிறது. 

மக்கள் தங்களது உறவினருக்கு வேண்டிய ஆக்சிஜனை நிரப்ப வரிசையில் காத்துக்கிடக்கின்றனர். 

இருப்பினும் ஆக்சிஜன் கிடைப்பது உறுதியற்ற நிலையிலேயே உள்ளது. 

அங்கே  முதல் லாக்டவுன் மார்ச் மாதம் போடப்பட்டது.  

ஜூன் மாதம் முதல் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டது .

பிறகு ஜூலை மாதம் முதல் மெல்ல மெல்ல தளர்வுகள் வழங்கப்பட்டன. 

நவம்பர் இறுதியில் உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. 

நவம்பர் இறுதியில் பொழுதுபோக்கு ஸ்தாபனங்கள் திறக்கப்பட்டன 

டிசம்பர் இறுதியில் இருந்து இரண்டாம் அலை ஆரம்பித்தது. 

ஜனவரி மாதம் மருத்துவமனைகள் ஸ்தம்பிக்கும் அளவு கொரோனா தொற்று அதிகரித்துள்ளது 

இது ஏதோ நானே எழுதும் கதை அன்று மக்களே.. 

பிரேசிலின் முக்கியமான நகரில் நிகழ்காலத்தில் நடக்கும் செய்தியை பகிர்கிறேன். 

இதற்கான காரணங்களாக  கூறப்படுவது

💮 முகக்கவசத்தை மக்கள் மறந்தது 

💮 அளவுக்கு மீறிய ஊரடங்கு தளர்வு 

💮 மக்களிடையே கோவிட் குறித்த 

அலட்சியம்

💮 ஆட்சியாளர்களிடையே ஒருங்கிணைப்பு இல்லாமை 

💮 கொரோனா வைரஸ் P.1 எனும் புதிய உருமாற்றம் அடைந்து வேகமாக பரவுவதும் வீரியத்துடன் இருப்பதும் ஆகும். 

இந்த செய்தியை நான் பகிர்வது 

மக்களை அச்சமூட்ட அன்று.

எச்சரிக்கை செய்வதற்கு மட்டுமே. 

மனவ்ஸ் நிலை நாளை நமது ஊருக்கு நேராமல் நாம் தான் காத்துக்கொள்ள வேண்டும். 

நிலைமை கைமீறும் முன் 

நிச்சயம் நாம் எச்சரிக்கை கொள்ள வேண்டும் 

💮முகக்கவசம் அணிவோம் 

💮தேவையற்ற பயணங்களை தவிர்ப்போம் 

💮தனிமனித இடைவெளியைப் பேணுவோம் 

💮கைகளை வழலை கொண்டு கழுவுவோம் 


Dr.A.B.ஃபரூக் அப்துல்லா 

பொது நல மருத்துவர் 

சிவகங்கை 


ஆதாரம் 

1. லான்சட் இதழ் 

https://www.thelancet.com/journals/lancet/article/PIIS0140-6736(21)00183-5/fulltext


2.https://www.cnn.com/2021/01/27/americas/manaus-brazil-covid-19-new-variant-intl/index.html


3.https://www.cnn.com/2021/01/25/americas/brazil-manaus-covid-second-wave-intl/index.html


4.https://www.bbc.com/news/world-latin-america-55670318