தேர்தல் பணிச்சுமையை சமாளிக்க ரூ.15 ஆயிரம் ஊதியத்தில் இளநிலை உதவியாளர் டைப்பிஸ்ட் - கலெக்டர்கள் நிரப்பிக் கொள்ள தேர்தல் ஆணையம் அனுமதி...

 தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. இதற்கான அறிவிப்பை கடந்த மாதம் 26. தேதி இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது.



இதனால் அனைத்து  மாவட்டங்களிலும் தேர்தல் நடத்தும் பணிகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன. வருவாய் துறை அலுவலர்கள் அனைவரும் சட்டமன்ற தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்.


இந்நிலையில் காலி பணியிடம், பணியாளர்கள் பற்றாக்குறை போன்றவாற்றல் தேர்தல் பணிகளில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே தேர்தல் பணிச்சுமையை சமாளிக்க தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ள எண்ணிக்கையில் ஒப்பந்த உதவியாளர்கள், டைப்பிஸ்டுகள், பதிவறை எழுத்தர்கள், அலுவலக உதவியாளர்கள் போன்ற பணியிடங்களை மாவட்ட தேர்தல் அலுவலர்களான கலெக்டர்கள்  நிரப்பிக் கொள்ள தேர்தல் ஆணையம் அதிகாரம் வழங்கியுள்ளது.


இவ்வாறு நியமிக்கப்படும் இளநிலை உதவியாளர்கள், டைப்பிஸ்டுகளுக்கு ரூ. 14 ஆயிரத்து 640ம், பதிவறை எழுத்தர்கள், அலுவலக உதவியாளர்கள் ரூ. 9,664ம் ஊதியமாக வழங்கலாம். இவர்களை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலங்கள் மூலமும், 2 முன்னணி நாளிதழ்களில் விளம்பரம் செய்து விண்ணப்பங்களை வரவேற்றும் தற்காலிக பணி நியமனம் செய்து கொள்ளலாம். 


இதற்கான ஊதியத்தை குறிப்பிட்ட தலைப்பின் கீழ் பெற்றுக் கொள்ளலாம். நிதித்துறையின் அனுமதி பெற்று இந்த உத்தரவு வெளியிடப்படுகிறது என  தலைமை தேர்தல் அலுவலர் சத்ய பிரதா சாகு உத்தரவிட்டுள்ளார்.