வீட்டில் தனிமைப்படுத்தி கொள்வோருக்கு மருத்துவர்கள் கூறும் ஆலோசனைகள்...

 கொரோனா பாதிப்பு குறைவாக உள்ளவர்கள் மருத்துவமனைகளுக்கு செல்லாமல் வீடுகளிலேயே தங்களை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும்' என மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.




தமிழகத்தில் மூன்று வாரங்களாக கட்டுக்கடங்காத வகையில் கொரோனா தொற்று பரவி வருகிறது.நாள்தோறும் புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை உச்சம் தொட்டு வருகிறது. சுகாதாரத்துறை தகவலின்படி மாநிலம் முழுதும் 1.05 லட்சம் பேர் சிகிச்சையில்உள்ளனர்.இந்த எண்ணிக்கை ஓரிரு வாரங்களில் இரு மடங்காகும் எனஅஞ்சப்படுகிறது. அந்த அளவுக்கு மாநிலத்தில் உள்ள மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் வேகமாக நிரம்பிவருகின்றன.



இதனால் லேசான அறிகுறிகள் உள்ளவர்கள் தங்களை வீடுகளிலேயே தனிமைப்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.இதுகுறித்து மருத்துவ நிபுணர்கள் கூறியதாவது: தமிழகத்தில் கொரோனா பரவல் வேகம் கடந்தாண்டை விட 10 மடங்கு அதிகமாக உள்ளது.இதனால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதில் ஆறுதல் அளிக்கும் விஷயம் என்னவெனில் தொற்றால் பாதிக்கப்படுவோரில் ஐந்தில் நால்வருக்கு லேசான அறிகுறிகளே காணப்படுகின்றன.இதனால் அவர்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்தி கொள்ளலாம். 



சளி காய்ச்சல் குறைவாக உள்ளவர்களும் அறிகுறிகளே இல்லாமல் உள்ளவர்களும் மருத்துவ மனைகளை நாடத் தேவையில்லை.அதே நேரம் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், இதய நோய், நாள்பட்ட சிறுநீரகம், கல்லீரல் பாதிப்புடையவர்கள் டாக்டர்களின் அறிவுரை பெற்றுதான் வீடுகளில் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும்.அதற்கும் வீடுகளில் தனி அறை மற்றும் தனி கழிப்பறை வசதி இருத்தல் அவசியம்.


 


நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் புற்றுநோயாளிகள் எய்ட்ஸ் நோயாளிகள் உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொண்டவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் கட்டாயம் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.வீடுகளில் தனிமைப்படுத்தி கொள்பவர்களுக்கு ஆரோக்கிய உணவு அவசியம். அவர்களது அறைகளை துாய்மைப்படுத்த கிருமி நாசினிகள் கட்டாயம் இருக்க வேண்டும்.கொரோனா பாதித்தவர்களுக்கு தேவையான மருந்துகள் கைகளை சுத்தப்படுத்தும் கிருமி நாசினி முகக் கவசம் ஆகியவை போதிய அளவில் வைத்திருக்க வேண்டும்.



முககவசங்களை ஆறு மணி நேரத்திற்கு ஒருமுறை மாற்ற வேண்டும். பல்ஸ் ஆக்சி மீட்டர், தெர்மா மீட்டர் ஆகியவற்றை வைத்து அவ்வப்போது பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். நோயாளிகளுக்கு உதவியாக இருக்கும் குடும்ப உறுப்பினர்கள் கையுறைகள்; இரண்டு முக கவசங்கம் அணிவது அவசியம். நோயாளியின் அறையில் இருக்கும்போது கதவு ஜன்னல்களை திறந்து வைத்தல் அவசியம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.