வருமான வரி புதிய வலைதளம்: தொழில்நுட்பக் கோளாறுகள் நீடிப்பு...



 வருமான வரி கணக்கு தாக்கல்‌ செய்வதற்கான புதிய வலைத்தளம்‌ தொடங்கப்பட்டு ஒரு மாதத்துக்கு மேலாகியும்‌, அதில்‌ உள்ள தொழில்நுட்பக்‌ கோளாறு இன்னும்‌ சரி செய்யப்படவில்லை. இதனால்‌, அந்த வலைதளத்தைப்‌ பயன்டுத்துவதில்‌ சிரமம்‌ ஏற்பட்டுள்ளதாக, பட்டய கணக்காளர்கள்‌ கூறுகிறார்கள்‌.


வருமான வரி கணக்கு தாக்கல்‌ செய்வதற்கான புதிய வலைதளம்‌ கடந்த ஜூன்‌ 7-ஆம்‌ தேதி பயன்பாட்டுக்கு வந்தது. அதில்‌, சில தொழில்நுட்பக்‌ கோளாறுகள்‌ இருப்பது தெரியவந்ததால்‌, அதை வடிவமைத்த இன்‌ஃபோசிஸ்‌ நிறுவன நிர்வாகிகளுடன்‌ மத்திய நிதியமைச்சர்‌ நிர்மலா சீதாராமன்‌ கடந்த ஜூன்‌ 22-ஆம்‌ தேதி ஆலோசனை நடத்தினர்‌. வலைதளத்தில்‌ ஏற்பட்டுள்ள பிரச்னை ஒரு வாரத்தில்‌ சரிசெய்யப்படும்‌ என்று இன்‌ஃபோசிஸ்‌ நிறுவனம்‌ பதிலளித்திருந்தது. ஆனால்‌, இரண்டு வாரங்களாகியும்‌ தொழில்நுட்ப பிரச்னை சரி செய்யப்படவில்லை என்று பட்டய கணக்காளர்கள்‌ கூறுகிறார்கள்‌.


புதிய வலைதளத்தில்‌ முந்தைய ஆண்டுகளுக்கான வரி கணக்கை தாக்கல்‌ செய்ய முடியவில்லை; நிலுவையில்‌ உள்ள வரியைச்‌ செலுத்தி, வரி மற்றும்‌ அபராதம்‌ செலுத்துவதில்‌ இருந்து விலக்கு பெறும்‌ 'விவாத்‌ சே விஸ்வாஸ்‌' திட்டத்துக்கான படிவம்‌-3 வலைதளப்‌ பக்கத்தில்‌ காணப்படவில்லை. என்று அவர்கள்‌ கூறுகிறார்கள்‌.


இதுகுறித்து பிடிஓ இந்தியா பார்ட்னர்‌ எனும்‌ வரி ஆலோசனைக்‌ குழுமத்தைச்‌ சேர்ந்த அமித்‌ கனத்ரா கூறுகையில்‌, 'இன்‌ஃபோசிஸ்‌ நிர்வாகிகளுடன்‌ நிதியமைச்சர்‌ கடந்த 22-ஆம்‌ தேதி நடத்திய ஆலோசனைக்‌ கூட்டத்துக்குப்‌ பிறகு அனைத்து பிரச்னைகளும்‌ விரைவில்‌ சரியாகிவிடும்‌ என கருதினோம்‌. ஆனால்‌ தொழில்நுட்ப ரீதியில்‌ சில பிரச்னைகள்‌ தொடர்கின்றன என்றார்‌.


வரி செலுத்துவோருக்குப்‌ பல வசதிகளுடன்‌ புதிய வலைதளம்‌ வடிவமைக்க மத்திய நிதி அமைச்சகம்‌ திட்டமிட்டது. இந்தப்‌ பணி இன்‌ஃபோசிஸ்‌ நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. வழக்கமாக, வருமான வரி கணக்கைத்‌ தாக்கல்‌ செய்தால்‌, அதைப்‌ பரிசீலனை செய்து தொகையை வழங்குவதற்கு குறைந்தபட்சம்‌ 63 நாள்கள்‌ ஆகும்‌. அதை ஒரு நாளாகக்‌ குறைக்கும்‌ வகையில்‌ புதிய வலைதளம்‌ உருவாக்கப்பட்டுள்ளது.