தருமபுரி : பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாற்றுத்திறனாளி ஆசிரியையின் வகுப்பில் முதல் வரிசையில் அமர்ந்து பாடம் கவனித்துள்ளார்.
மேலும், வைரமுத்து கவிதைகளை நடத்திய அந்த மாற்றுத்திறனாளி ஆசிரியைக்கு ஒரு 'ஸ்வீட்' சர்ப்ரைஸையும் கொடுத்திருக்கிறார் அமைச்சர் அன்பில் மகேஷ்.
அமைச்சர் அன்பில் மகேஷின் செயலால், மகிழ்ச்சியில் திளைத்த அந்த ஆசிரியை, அமைச்சரின் செயலால் நெகிழ்ந்து அவரை மனம் திறந்து பாராட்டியுள்ளார். இந்நிகழ்வு பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருக்கும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழகம் முழுவதும் பல்வேறு பள்ளிகளுக்கும் சென்று அவ்வப்போது அதிரடி ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். மேலும், பள்ளிக் கல்வித்துறை சார்பில், மாணவர்களின் கல்வி நலனுக்காக பல்வேறு சீரிய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இன்று தருமபுரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. அப்போது மாற்றுத்திறனாளி ஆசிரியையான தமிழ்ச்செல்வியின் வகுப்பறைக்குச் சென்று முதல் பெஞ்ச்சில் பவ்யமாக அமர்ந்து, ஆசிரியை நடத்துவதை கவனித்தார் அன்பில் மகேஷ். மாணவர் போலவே அமர்ந்து ஆர்வமாக கவனித்தது அங்கிருந்தவர்கள் மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.
மாற்றுத்திறனாளி ஆசிரியை தமிழ்ச்செல்வி, அப்போது வகுப்பில் வைரமுத்து கவிதைகளை பிரெய்லி முறை மூலம் கற்பித்தார். அதனை, அருகில் இருந்த மாணவியின் புத்தகத்தில் பார்த்து ஆர்வமாகக் கவனித்தார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
இதையடுத்து, கவிஞர் வைரமுத்துவை போனில் அழைத்து, விவரத்தைச் சொல்லி, ஆசிரியை தமிழ்ச்செல்வியுடன் உரையாட வைத்தார். இதனால், மிகவும் மகிழ்ந்த ஆசிரியை, 'இன்று எனது வாழ்நாளில் மகிழ்ச்சிகரமான நாள்' என அமைச்சர் அன்பில் மகேஷிடம் நெகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார். இதனை ட்விட்டரில் பதிவிட்டுள்ள அமைச்சர் அன்பில் மகேஷ், "ஆம், எனது வாழ்நாளிலும் மகிழ்ச்சிகரமான நாள்தான்!" எனக் குறிப்பிடுள்ளார்.