கையறு நிலையில் ஆசிரியர்கள் - தினமணி தலையங்கம் (Teachers at nothing can be done position - Dinamani editorial)...

 


கையறு நிலையில் ஆசிரியர்கள் - தினமணி தலையங்கம் (Teachers at nothing can be done position - Dinamani editorial)...


அண்மைக்காலமாக, பள்ளி வகுப்பறையிலும்‌, பொது இடங்களிலும்‌ மாணவர்கள்‌ சிலரின்‌ செயல்பாடுகள்‌ நம்மை முகம்‌ சுளிக்க வைப்பது மட்டுமின்றி எதிர்கால இந்தியாவின்‌ நம்பிக்கை நட்சத்திரங்களாக மின்ன வேண்டிய மாணவர்கள்‌ இப்படி மோசமாக செயல்பட்டு வருகிறார்களே என்ற கவலையும்‌ ஏற்படுதியுள்ளன.


மாதா, பிதா, குரு, தெய்வம்‌ என்று முன்னோர்‌ பெருமைப்படுத்தி வைத்துள்ளனர்‌. அப்படிப்பட்ட குருவை, அலட்சியப்படுத்தும்‌ போக்கு இன்றைய மாணவ சமூகத்தில்‌ அதிகரித்து வருகிறது. பல ஆண்டுகளாகவே ஆசிரியர்களின்‌ கைகள்‌ கட்டப்பட்டு விட்டதால்‌ மாணவர்களின்‌ போக்கு திசைமாறி மோசமான பாதையில்‌ பயணிக்க தொடங்கி விட்டது.


இன்றைய சமூக ஊடகங்களின்‌ தாக்கத்தால்‌ மாணவர்களின்‌ மோசமான செயல்பாடுகள்‌ மிக வேகமாக பரவி பொதுமக்கள்‌ மத்தியில்‌ பேசுபொருளாக மாறிவிட்டன. மாணவர்களின்‌ இத்தகைய ஒழுக்கமற்ற போக்கிற்குக்‌ காரணம்‌ தவறு செய்யும்‌ மாணவர்களைக்‌ கண்டிக்கக்கூடிய அதிகாரம்‌ ஆசிரியர்களுக்கு இல்லாமல்‌ போனதுதான்‌.


தவறு செய்யும்‌ மாணவர்களைக்‌ கண்டிக்க முடியாத சூழல்‌ ஆசிரியர்களுக்கும்‌, தவறு செய்யும்‌ குற்றவாளிகளை தண்டிக்க முடியாத சூழல்‌ காவல்துறையினருக்கும்‌ என்று ஏற்பட்டதோ அன்றே மாணவர்‌ சமூகத்தின்‌ போக்கும்‌, சமூகத்தில்‌ குற்றம்‌ இழைப்பவர்களின்‌ போக்கும்‌ மாறிவிட்டன.


கடந்த சில ஆண்டுகளாக பள்ளிகளில்‌, வகுப்பறையில்‌ என்னவெல்லாம்‌ செய்யக்கூடாதோ அவற்றையெல்லாம்‌ சில மாணவர்கள்‌ பயமின்றி செய்து வருகின்றனர்‌. அதை அப்படியே கைப்பேசியில்‌ விடியோ எடுத்து சமூக ஊடகங்களில்‌ பெருமையாக வெளியிட்டும்‌ வருகின்றனர்‌.


நாம்‌ செய்தது தவறல்லவா, அதனை வீடியோ எடுத்து ஊடகங்களில்‌ பதிவிடுகிறோமே, அதனைப்‌ பார்க்கும்‌ நமது பெற்றோர்‌ நம்மைக்‌ கண்டிப்பார்களே என்ற சிந்தனையே இல்லாமல்‌ பெரும்‌ தைரியத்துடன்‌ உலா வரும்‌ மாணவர்களின்‌ எதிர்காலத்தை நினைத்தால்‌ அச்சம்‌ ஏற்படுகிறது.


முன்பெல்லாம்‌ சினிமாவில்‌ மட்டுமே ஆசிரியர்களை மாணவர்கள்‌ கேலி செய்யும்‌ காட்சிகள்‌ வரும்‌. ஆனால்‌, தற்போது நாள்தோறும்‌ இதுபோன்று ஆசிரியர்கள்‌ மாணவர்களால்‌ கேலி செய்யப்படுகிறார்கள்‌. கிராமப்புறம்‌, நகர்ப்புறம்‌ என எல்லா இடங்களிலும்‌ ஆசிரியர்‌-மாணவர்‌ உறவு இப்படி சீர்கெட்டுப்‌ போய்‌ விட்டதே நிதர்சனம்‌.


இதனைப்‌ பார்க்கும்போது நாம்‌ படித்த காலங்களில்‌ நமக்கும்‌, ஆசிரியருக்கும்‌ இடையிலான உறவு எவ்வளவு அற்புதமாக இருந்தது என்பது நினைவில்‌ வந்து செல்வதை தவிர்க்க முடியவில்லை. 'நீங்க சொன்னபடி கேக்கலைன்னா என்‌ பையனோட தோலை உரிச்சிடுங்க' என்று ஆசிரியர்களிடம்‌ சொல்லும்‌ பெற்றோர்‌ அப்போது அதிகம்‌. இப்போதோ, 'நீ எப்படி என்‌ பிள்ளையைக்‌ கண்டிப்பாய்‌' என ஒருமையில்‌ பேசி ஆசிரியர்களிடம்‌ சண்டை போடும்‌ பெற்றோரே அதிகம்‌.


வகுப்பறைக்குள்‌ மாணவர்கள்‌ கைப்பேசியை பயன்படுத்துவது, ஆசிரியரின்‌ நேருக்கு நேரே நின்று மாணவன்‌ தகாத வார்த்தைகளால்‌ ஆசிரியரைத்‌ திட்டுவது, பள்ளி சீருடையில்‌ மாணவர்கள்‌, மாணவிகள்‌ மது அருந்துவது போன்ற வீடியோக்கள்‌ சமூக ஊடகங்களில்‌ நாள்தோறும்‌ உலா வருவது வழக்கமாகிவிட்டது. அண்மையில்‌ பள்ளி வகுப்பறையில்‌ ஆசிரியரை மாணவன்‌ ஒருவன்‌ கத்தியால்‌ குத்திய சம்பவம்‌ வெளியாக பெரும்‌ அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


இப்படி நாளொரு மேனி பொழுதொரு வண்ணமுமாக மாணவர்கள்‌ சிலரின்‌ ஒழுக்க கேடான செயல்பாடுகள்‌ தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில்‌, கடந்த வாரத்தில்‌ தமிழகத்தின்‌ வெவ்வேறு இடங்களில்‌ நிகழ்ந்த சம்பவங்களைப்‌ பார்க்கும்‌ பொழுது மாணவர்களின்‌ மனம்‌ ஏன்‌ இப்படி மாறி வருகிறது என்ற கேள்வி சமூக ஆர்வலர்கள்‌ மத்தியில்‌ எழுந்துள்ளது.


கடந்த வாரம்‌ இருசக்கர வாகனத்தில்‌ பள்ளிக்கு வந்த 10-ஆம்‌ வகுப்பு மாணவனிடம்‌, அவனது பெறறோரை அழைத்து வரும்படி ஆசிரியர்‌ கூறினாராம்‌. அதன்படி, பள்ளிக்கு வந்த மாணவனின்‌ உறவினரும்‌ மாணவனும்‌ ஆசிரியரை பார்த்து கேட்கும்‌ கேள்விகள்‌ சமூக ஊடகத்தில்‌ வைரலாகி பார்ப்போரை அதிர்ச்சியடைய வைத்துள்ளன.


நம்முடைய நன்மைக்குதானே ஆசிரியர்‌ புத்திமதி சொல்கிறார்‌ என்பதை மாணவன்‌ புரிந்து கொள்ளாவிட்டாலும்‌ பரவாயில்லை. அதை அவனது உறவினர்‌ கூட புரிந்து கொள்ளாமல்‌ கடுமையாகப்‌ பேசுவதை பார்க்கும்‌ போது பிள்ளைகள்‌ நன்றாக ஒழுக்கத்துடன்‌ வளரவேண்டும்‌ என்ற சிந்தனையே இன்றைய பெற்றோரிடம்‌ இல்லையோ என்று எண்ணத்‌ தோன்றுகிறது.


அந்த வீடியோவில்‌ பேசும்‌ அந்த மாணவன்‌, 'ஆசிரியர்‌ பாடத்தை மட்டும்‌ சொல்லித்‌ தந்தால்‌ போதும்‌; ஒழுக்கத்தை சொல்லி தர வேண்டாம்‌' என அவனது மொழியில்‌ பேசுவதை கேட்கும்‌ ஒவ்வொருவருக்கும்‌ அந்த மாணவன்‌ மீது நிச்சயம்‌ எரிச்சல்‌ ஏற்பட்டிருக்கும்‌. வேறுவழியின்றி, அவன்‌ பேசுவதைக்‌ கேட்டுக்கொண்டிருக்கும்‌ ஆசிரியரைப்‌ பார்த்தால்‌ பரிதாபமாக உள்ளது.


கல்வி கற்றுக்‌ கொடுக்கும்‌ ஆசிரியர்களின்‌ கைகளை கட்டி போட்டு விட்டு, புள்ளிவிவரங்களை கைப்பேசியில்‌ தகவலாக அனுப்பச்‌ சொல்லும்‌ கல்வித்துறையை என்னவென்று சொல்வது? எதிர்கால இந்தியாவை தீர்மானிக்கும்‌ சக்தி வாய்ந்த இளம்‌ தலைமுறைக்கு, ஒழுக்கத்துடன்‌ கல்வியை போதிக்க வேண்டிய ஆசிரியர்களை டேட்டா எண்ட்றி ஆபரேட்டர்‌ போல்‌ பயன்படுத்தலாமா? இந்த நிலை நீடித்தால்‌ மாணவ சமூகத்தில்‌ நல்ல மாற்றம்‌ எப்படி உருவாகும்‌?


கல்வித்துறைக்குத்‌ தேவையான தகவல்களை அனுப்ப பள்ளிகளில்‌ ஆசிரியர்‌ அல்லாத பணியாளர்கள்‌ இருக்கும்‌ நிலையில்‌ ஆசிரியர்களிடம்‌ இந்தப்‌ பணியை ஒப்படைத்திருப்பது சரியா? ஒருவேளை இவை கல்வித்துறையின்‌ தொலைநோக்கு சிந்தனையின்‌ வெளிப்பாடாக இருக்கலாம்‌ என நம்மை நாமே சமாதானப்படுத்தி கொள்ள வேண்டியதுதான்‌.


ஆனால்‌, மாணவர்களின்‌ ஒழுக்கத்தை மேம்படுத்த வேண்டிய ஆசிரியர்கள்‌ வேறு வழியின்றி அமைதி காத்து வருகிறார்களே? இதுகுறித்து சம்பந்தப்பட்டவர்கள்‌ சிந்தித்தால்‌ எதிர்கால இந்தியா வளமான இந்தியாவாக மலரும்‌. எனவே, ஆசிரியர்களை சற்று சுதந்திரமாக செயல்பட கல்வித்துறை அனுமதிக்க வேண்டும்‌.


நன்றி: தினமணி (18 - 03 - 2023)