>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி, அடுத்த மாதம் ஜூலை 21ஆம் தேதி முதல் துவங்க உள்ளது.
அடுத்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாக வைத்து, புகைப்படத்துடன் கூடிய, வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கான அட்டவணையை, தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதன்படி, ஓட்டுச்சாவடி அலுவலர்கள், அடுத்த மாதம் 21ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 21 வரை, வீடு வீடாகச் சென்று, வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணியில் ஈடுபடுவர்.
ஆகஸ்ட் 22 முதல் செப்டம்பர 29 வரை, ஓட்டுச்சாவடிகளை திருத்தி அமைத்தல்; வாக்காளர் பட்டியல் மற்றும் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையில் உள்ள முரண்பாடுகளை நீக்குதல்; வாக்காளர் பட்டியலில் வாக்காளர்களின் படத்தின் தரத்தை மேம்படுத்துதல்;
ஓட்டுச்சாவடிகளின் எல்லைகளை மறு சீரமைத்து ஒப்புதல் பெறுதல், போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும்.
அக்டோபர் 17ஆம் தேதி, ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
அன்று முதல் நவம்பர் 30 வரை, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற, விண்ணப்பம் அளிக்கலாம். அடுத்த ஆண்டு ஜனவரி 5ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
அலுவலக வேலை நாட்களில், ஓட்டுச்சாவடி அலுவலர், வாக்காளர் பதிவு அதிகாரி, உதவி வாக்காளர் பதிவு அதிகாரி அலுவலகங்களில், விண்ணப்பம் அளிக்கலாம். சிறப்பு முகாம் நாட்களில், முகாமுக்கு சென்று விண்ணப்பம் அளிக்கலாம்.
பெயர் சேர்த்தலுக்கான விண்ணப்பத்துடன், வசிப்பிட முகவரி, வயது ஆகியவற்றுக்கான சான்றுகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.