உத்தரகாண்ட் சில்க்யாரா சுரங்க விபத்து : தொழிலாளர்களை மீட்பதில் தாமதம் ஏன்? (Uttarakhand Silkyara mine accident: Why the delay in rescuing workers?)



 உத்தரகாண்ட் சில்க்யாரா சுரங்க விபத்து : தொழிலாளர்களை மீட்பதில் தாமதம் ஏன்? (Uttarakhand Silkyara mine accident: Why the delay in rescuing workers?)


மீட்புப் பணிகளில் இன்று 16வது நாளாகத் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படைகள், தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.


ஆக்கர் இயந்திரத்தைக் கொண்டு துளையிடும் பணியில் தொடர்ந்து இடையூறு ஏற்பட்டுக்கொண்டே இருப்பதால், மாற்று வழியில் தொழிலாளர்களை மீட்பதில் தீவிரம்.


சுரங்கப்பாதை உள்ள மலையின் மேலே இருந்து கீழ்ப்பகுதி வரை செங்குத்தாகத் துளையிட்டு மீட்புப் பணியைத் தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது.


சுரங்கத் தொழிலாளர்களை மீட்பதற்கான காலக்கெடுவைக் குறிப்பிட அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.



உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்க இன்று தொடங்குகிறது கைகளால் துளையிடும் பணி...


கடந்த சனிக்கிழமை, 41 தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த ராட்சத உபகரணம் பழுதாகி உடைந்துவிட்டது.

உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காஷி மாவட்டத்தில் உள்ள சில்க்யாரா சுரங்கப்பாதை கடந்த நவம்பர் 12 ஆம் தேதி இடிந்து விழுந்ததையடுத்து, 41 தொழிலாளர்கள் அந்த சுரங்கபாதையில் சிக்கி கொண்டனர்.

அதனை தொடர்ந்து, 16 நாட்களுக்கும் மேலாக அவர்களை மீட்பதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. ஆனால், இன்னும் அவர்கள் மீட்கப்படவில்லை.

கடந்த சனிக்கிழமை, 41 தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த ராட்சத உபகரணம் பழுதாகி உடைந்துவிட்டது.

சில்க்யாரா சுரங்கப்பாதையின் இடிபாடுகளுக்குள் துளையிட்டுக் கொண்டிருந்தபோது, ஆகர் இயந்திரத்தின் பிளேடுகள் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டன.

ஏறக்குறைய 60 மீட்டர் இடிபாடுகளை உடைக்க, இந்த கனரக இயந்திரம் அமெரிக்காவிலிருந்து கொண்டு வரப்பட்டது.

இது உடைந்து விழுந்த நிலையில், அந்த இயந்திரத்தின் உடைந்த பாகங்கள் இன்று அகற்றப்பட்டன.


எப்போது முடியும் மீட்பு பணி?

இதனையடுத்து, இன்றிலிருந்து மீதம் உள்ள சுரங்க இடிபாடுகள் கைகளால் துளையிடப்பட இருக்கின்றன.

தொடர்ச்சியான பின்னடைவுகளுக்குப் பிறகு, சுரங்கப்பாதையின் சரிந்த பகுதிக்கு மேலே உள்ள மலையின் உச்சியில் இருந்து செங்குத்தாக துளையிடும் நடவடிக்கைகளும் நேற்று தொடங்கியது.

நேற்று ஒரு நாளைக்குள் மீட்புக் குழுவினர் வெற்றிகரமாக கிட்டத்தட்ட 20 மீட்டர்கள் துளையிட்டனர்.

தடைகள் ஏதும் ஏற்படாத பட்சத்தில், இந்த துளையிடும் பணி வரும் வியாழக்கிழமைக்குள் வெற்றிகரமாக முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பணிகள் முடிவடைந்ததும் 700-மிமீ அகலமுள்ள குழாய்கள் உள்ளே செலுத்தப்பட்டு, அதன் மூலம் தொழிலாளர்கள் மீட்கப்படுவார்கள்.

இதற்கிடையில், அமெரிக்க ஆகர் இயந்திரம் துளையிட்டு கொண்டிருந்த பகுதியில் அடுத்த 10-15 மீட்டர்களுக்கு கைகளால் துளையிடப்பட இருக்கிறது.


உத்தரகாசியில் கடந்த இரண்டு வாரங்களாக சில்க்யாரா-பர்கோட் சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இன்றுடன் மீட்பு பணிகள் 16வது நாளை தொட்டுள்ளது. நேற்று புதிய முயற்சியாக சுரங்கப்பாதையின் மேல் பகுதியில் இருந்து செங்குத்தாக துளையிடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. முதல் நாளில் சுமார் 20 மீட்டர் வரை துளையிடும் பணி நடைபெற்றுள்ளது. சில நாட்களுக்கு முன்பு தொழிலாளர்களை மீட்க போடப்பட்ட 5 திட்டங்களில் செங்குத்து துளையிடுதலும் ஒன்றாகும். சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள தொழிலாளர்களை சென்றடைய ஏற்கனவே 19.2 மீட்டர் துளை போடப்பட்ட நிலையில், இன்னும் 86 மீட்டர் செங்குத்து துளையிடும் பணி மீதம் இருக்கிறது. இந்த பணிகள் முழுமையடைய இன்னும் 4 நாட்களாவது ஆகும் என்று கூறப்படுகிறது. 


தொழிலாளர்கள் விரைவில் வெளியேற்றப்படுவார்கள் - அதிகாரிகள் தகவல்

தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம் லிமிடெட் (NHIDCL) நிர்வாக இயக்குனர் மஹ்மூத் அகமது கூறியதாவது, “சட்லஜ் ஹைட்ரோபவர் கார்ப்பரேஷன் தொடங்கியுள்ள செங்குத்து துளையிடும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. ஏதேனும் சிக்கல்கள் இல்லாமல் இப்படியே தொடர்ந்தால், வரும் வியாழன் வரை அதாவது இன்னும் நான்கு நாட்களில் முடித்துவிடலாம் என எதிர்பார்க்கலாம். 700 மிமீ குழாய்கள் துளையிட்டு 'எஸ்கேப் பாதை' உருவாக்கப்படுகிறது. இதிலிருந்து சிறிது தொலைவில், 70 மீட்டரை எட்டிய 200 மிமீ விட்டம் கொண்ட மெல்லிய குழாய்கள் பதிக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.  



துளையிடுவதில் ஏற்பட்ட சிக்கல்கள்: 

சுரங்கப்பாதையின் சில்க்யாரா முனையிலிருந்து அமெரிக்கன் ஆகர் இயந்திரம் மூலம் கிடைமட்டமாக துளையிடுவதில் மீண்டும் மீண்டும் சிக்கல்கள் ஏற்பட்டதால், தொழிலாளர்களை சென்றடைய செங்குத்து துளையிடல் என்னும் முறை தேர்வு செய்யப்பட்டது. சுரங்கப்பாதையில் 60 மீட்டர் பரப்பளவில் இடிபாடுகள் பரவியுள்ளன. இதனால் சுமார் 25 டன் எடை கொண்ட ஆகர் இயந்திரத்தின் பிளேடுகள் அந்த இடிபாடுகளில் சிக்கி கடந்த வெள்ளிக்கிழமை உடைந்தது. 


இதுகுறித்து மீட்பு பணிகளுக்கு உதவ நியமிக்கப்பட்டுள்ள நோடல் அதிகாரி நீரஜ் கைர்வால் கூறியதாவது: 

பிளாஸ்மா கட்டர் மற்றும் லேசர் கட்டர் மூலம் இடிபாடுகளில் சிக்கிய ஆகர் இயந்திரத்தின் பாகங்களை வெட்டி அகற்றும் பணி நடந்து வருகிறது. இரவு 7 மணி நிலவரப்படி 8.15 மீட்டர் தூரம் மட்டுமே ஆகர் இயந்திரம் வெளியே எடுக்க முடிந்தது. பிளாஸ்மா கட்டர் ஹைதராபாத்தில் இருந்து சில்க்யாராவுக்கு நேற்று காலை விமானம் மூலம் கொண்டு வரப்பட்டது.” என்று தெரிவித்தார்.


தொடரும் உயிரைக் காப்பாற்றும் போராட்டம்:

ஆகர் இயந்திரத்தின் பாகங்கள் முழுமையாக அகற்றப்பட்டவுடன், மீதியுள்ள 10-12 மீட்டர் இடிபாடுகளை மீட்புப் பணியாளர்கள் கையால் துளையிட்டு அகற்றுவார்கள். ஒரு குறுகிய இடத்திற்குள் இந்த கையால் நடத்தப்படும் உடைப்பு பணியில், ஆகர் இயந்திரத்தினால் ஏற்கனவே போடப்பட்ட துளைக்குள் சென்று கைகளால் துளையிடுவார். பின்னே செல்லும் மற்ற தொழிலாளர்கள் ஒரு கப்பி மூலம் குப்பைகளை வெளியே அனுப்புவர். ஆனால், இந்த கைகளால் துளையிடும் பணி அதிக நேரம் எடுக்கும் என தெரிகிறது. இதற்கிடையில், சுரங்கப்பாதையின் பார்கோட் முனையிலிருந்தும் தோண்டும் பணி நடைபெற்று வருவதாகவும், இதுவரை 10 மீட்டர் தோண்டும் பணி நடந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இக்கரையில் இருந்து மொத்தம் 483 மீட்டர் தோண்டும் பணி நடைபெற 40 நாட்கள் ஆகலாம் என்றும், இது மாற்று வழியாகவே இந்த தோண்டும் பணி நடைபெறுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டது.


முன்னதாக சுரங்க விபத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்கள், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பாக மீட்கப்படுவார்கள்; கிறிஸ்துமஸ்க்கு வீடு திரும்புவார்கள் என சர்வதேச சுரங்க மீட்பு நிபுணர் அர்னால்ட் கூறியுள்ளார். இது குறித்த முழுமையான தகவல்கள் :


உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி அருகே சில்க்யாரா என்ற பகுதியில் சுரங்கம் தோண்டும் பணி தொடங்கி நடைபெற்று வந்தது. கடந்த 12ம் தேதி வழக்கம்போல் தொழிலாளர்கள் சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபட்டனர். அப்போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சுரங்கத்தின் உள்ளே 41 தொழிலாளர்கள் சிக்கினர்.


இவர்களை மீட்பதற்கான பணி உடனடியாக தொடங்கியது. பேரிடர் மீட்பு படையினர், சுரங்க நிபுணர்கள், தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு மீட்பு பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. 41 தொழிலாளர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், ஆக்ஸிஜன் உள்ளிட்டவை குழாய்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. அதனை தொழிலாளர்கள் சாப்பிட்டு வருகின்றனர்.


இருப்பினும் அந்த சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்பது என்பது சுலபமான காரியமாக இல்லை. அங்குள்ள இடம் நிலச்சரிவுக்கு ஏற்ற வகையில் உள்ளது. இதனால் அதிர்வுகளால் மேலும் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது. அதோடு சுரங்கத்தின் மேல்புறத்தில் இருந்து செங்குத்தாக துளை போட்டு மீட்கும் பணியும் சவால் நிறைந்ததாக உள்ளது. மீட்பு பணிக்கான ஆகர் இயந்திரத்தின் மூலம் இந்த பணி நடந்து வந்த நிலையில் கான்கிரீட் கம்பிகள் இயந்திரத்தின் பிளேடுகளில் சிக்கியது. இதனால் இந்த மீட்பு பணியும் தடைப்பட்டது. அதன்பிறகு கான்கிரீட் கம்பிகள், பிளேடுகள் அகற்றப்பட்டு மீண்டும் மீட்புபணி தொடங்கி உள்ளது. மேலும் அங்கு நிலவும் தட்பவெப்ப நிலையும் மீட்பு பணியை தாமதப்படுகிறது.


இதனால் சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்கள் எப்போது பத்திரமாக மீட்கப்படுவார்கள் என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில்தான் சுரங்கபாதையில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணியில் சர்வதேச சுரங்கப்பாதை நிபுணர் அர்னால்ட் டிக்ஸ் ஆலோசகராக செயல்பட்டு வருகிறார். ஆஸ்திரேலியாவை சேர்ந்த இவர் சுரங்ப்பாதை மீட்பு பணிகளில் கைதேர்ந்தவர்.


இந்நிலையில் தான் அர்னால்ட் டிக்ஸ் தற்போதைய மீட்பு பணி குறித்தும், தொழிலாளர்கள் எப்போது மீட்கப்படுவார்கள் என்பது பற்றியும் கூறியுள்ளார். அதுபற்றி அவர் கூறியதாவது: ‛‛இது மலைப்பகுதியில் நடக்கும் மீட்பு பணி என்பதால் மிகவும் பிரச்சனையாக உள்ளது. இதில் அவசரப்படக்கூடாது. முக்கிய விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். இதனால் மீட்புப் பணி எப்போது முடியும் என்பதை கூறிவிட முடியாது. மீட்பு பணிக்கு குறிப்பிட்ட காலம் பிடிக்கும். இன்று முதல் ஒரு மாதம் கூட ஆகலாம். ஆனால் 41 பேரும் பத்திரமாக மீட்கப்படுவார்கள்.


கிறிஸ்துமஸ் பண்டிகைக்குள் வீடு திரும்புவார்கள் என நம்பலாம். இந்த மீட்பு பணியில் நாங்கள் ஒன்றை மட்டுமே கவனத்தில் வைத்துள்ளோம். அது என்னவென்றால் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட வேண்டும் என்பதுதான். மேலும் தொடக்கத்தில் இருந்தே இந்த பணி என்பது வேகமாக நடக்கும் என உறுதியளிக்கவில்லை. மாறாக இந்த பணி சவால் நிறைந்ததாகதான் இருக்கும் என கூறினேன். அது தொடர்கிறது. ஆனால் தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்படுவார்கள்’’ என்றார்.


தற்போது சுரங்க மீட்பு பணியில் ஈடுபட்டு வரும் இந்த அர்னால்ட் டிக்ஸ் ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர். இவர் மீட்பு பணியில் ஈடுபட தொடங்கிய நிலையில் வேகமெடுத்தது. ஆனால் தற்போது சுரங்கம் அமைந்துள்ள இடத்தில் மீட்பு பணிக்கு பல இடையூறுகள் உள்ளன. இதனால் மீட்பு பணி மெதுவாக நடந்து வருகிறது. இந்த அர்னால்ட் டிக்ஸ் சுரங்க மீட்பு பணிகளில் மிகவும் கைதேர்ந்தவர். இவர் பிரிட்டனில் பள்ளி கல்வியை முடித்தார். அதன்பிறகு ஆஸ்திரேலியாவில் புவியியல் என்ஜீனியரிங் கல்வி பயின்றார்.


இதையடுத்து 20 ஆண்டுகளுக்கும் மேலாக சுரங்க கட்டுமான தொழிலில் வல்லுனராக திகழ்கிறார். அதன் சர்வதேச சுரங்க கூட்டமைப்பின் தலைவராகவும் பொறுப்பு வகித்து வரும் இவர், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பல்வேறு சுரங்கப் பாதை திட்டங்களுக்கு  ஆலோசகராக செயல்பட்ட அனுபவம் கொண்டவர். இந்தியாவில் டெல்லி மெட்ரோ சுரங்க பாதைக்கும் இவர் ஆலோசனைகளை வழங்கியிருந்தார். ஐரோப்பிய நாடுகளில் பல்வேறு சுரங்கப்பாதை விபத்து மீட்புப் பணிகளுக்கு அவர் தலைமையேற்று இருக்கிறார். தற்போது உத்தராகண்ட் சுரங்கப்பாதை மீட்புப் பணியின் முக்கிய ஆலோசகராக அர்னால்டு டிக்ஸ் செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.