இடைநின்ற 605 மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்த்து அசத்திய மாவட்ட ஆட்சித்தலைவர்...



இடைநின்ற 605 மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்த்து அசத்திய மாவட்ட ஆட்சித்தலைவர்...


திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அரசு  பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இடை நின்ற சுமார் 1898  மாணவர்களை கண்டறிந்து,   இவர்களில் 600 மாணவர்களை   மீண்டும் கல்வி தொடர வழி வகை செய்துள்ளார்  மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன்.


திருப்பத்தூர் மாவட்டத்தில் 993 அரசு பள்ளிகள் இயங்கி வருகின்றன. இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வந்த நிலையில் இவர்களில் 1,898 மாணவ, மாணவிகள் பள்ளிகளில் இருந்து பல்வேறு காரணங்களால் இடை நின்றது கல்வித்துறையின் கணக்கெடுப்பில் தெரிய வந்திருக்கிறது.


இதனையடுத்து, இடைநின்ற மாணவர்களையும் அவர்களது பெற்றோர்களையும் அணுகி, அவர்கள் இடைநின்றதற்கான சமூக காரணிகளை ஆராய்ந்து, இடைநின்ற மாணவர்களை மீண்டும் கல்வி தொடர்வதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு கல்வித்துறை அதிகாரிகளின் வழியே உத்தரவிட்டிருக்கிறார், மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன்.


ஏழை மாணவியின் வீடு தேடி வந்து கதவை தட்டிய கலெக்டர்..!


வெறும் உத்தரவோடு நில்லாமல், பள்ளி கல்வித்துறை அலுவலர்கள், ஆசிரியர்கள் , வருவாய் துறை அதிகாரிகளையும் ஒருங்கிணைத்து அவர்களுடன் ஆலோசனை கூட்டத்தையும் நடத்தியிருக்கிறார்.


இதனைத்தொடர்ந்து, களத்தில் இறங்கிய அந்தந்த ஏரியாவின் பள்ளி தலைமை ஆசிரியர்கள் தலைமையிலான ஆசிரியர்கள், சம்பந்தபட்ட மாணவர்களின் வீடு தேடி சென்று பேசியிருக்கின்றனர். இதன் நேரடி பலனாக முதற்கட்டமாக 176 பெண் பிள்ளைகளும்; 226 ஆண் பிள்ளைகளுமாக ஆக மொத்தம்  402 மாணவர்களை ஒரே நாளில் மீண்டும் பள்ளியில் சேர்த்து அசத்தியுள்ளனர்.


இதோடு நில்லாமல், நாட்றம்பள்ளி அடுத்த தாசரியப்பனூர் அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் மாதனூர் ஒன்றியம் , ஆம்பூர் கன்கார்டியா அரசு நிதியுதவி பெரும் மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றில் இடைநின்ற மாணவர்களின் பட்டியலை கையில் எடுத்துக்கொண்டு அவர்களது வீடு தேடி கதவை தட்டியிருக்கிறார் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன். இதன்படி, 53 மாணவ – மாணவிகளை மீண்டும் பள்ளியில் சேர்ப்பித்திருக்கிறார், அவர்.


மாணவி ஒருவரின் மருத்துவ செலவை ஏற்றதோடு, மாணவர்கள் சிலரை தனது காரிலேயே பள்ளிவரை கூட்டிச்சென்று இறக்கிவிட்டிருக்கிறார். அம்மாணவர்களுக்குத் தேவையான கற்றல்சார்ந்த உபகரணங்களையும் தனது சொந்த செலவில் வாங்கி கொடுத்திருக்கிறார்.


“கல்வி ஒன்று தான் உங்களை கரை சேர்க்கும். கல்வி ஒன்று மட்டுமே தங்கள் குடும்ப பொருளாதார சூழ்நிலையை உயர்த்தும். கல்வி கற்றவர்கள் சமுதாயத்தில் உயர்ந்த நிலையை அடைவார்கள். கல்வியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு தினந்தோறும் பள்ளிக்கு சென்று  நீங்கள் சிறந்த எதிர்காலத்தை பெறுவதற்கு முனைய வேண்டும் என்று விழிப்புணர்வூட்டி  முதல்வரின் முன்னெடுப்பினால் பள்ளி செல்லும்  குழந்தைகளுக்கு வழங்கப்படும் அனைத்து நலத்திட்டங்களையும் பெற்று நீங்கள் வாழ்க்கையில் உயர வேண்டும்”  எனவும் அவர்களிடையே விழிப்புணர்வு உரையாற்றியிருக்கிறார் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன்.


இது குறித்து, மாவட்ட ஆட்சியரை தொடர்புகொண்டு பேசியபோது, “பள்ளிகளில் இருந்து இடைநின்ற மாணவிகளை கண்டறிந்து மீண்டும் பள்ளிக்கு வர செய்யும்போது குழந்தைத் திருமணங்கள் தடுக்கப்படுகின்றன. இளம் வயது தாய்மார்களின் மரணங்கள் தடுக்கப்படுகின்றன. திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும்  சுமார் ஆயிரம் மாணவர்களை மீண்டும் பள்ளிக்குக்கு கொண்டுவர பள்ளி கல்வித்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது வரை சுமார் 605   மாணவ, மாணவிகள் மீண்டும் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்” என்கிறார், பூரிப்போடு...