President Draupati Murmu orders appointing 5 additional judges as permanent judges in Madras High Court...


சென்னை  உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக இருந்த 5 பேரை நிரந்தர நீதிபதிகளாக நியமித்து  ஜனாதிபதி  திரெளபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.


சுப்ரீம் கோர்ட்  கொலீஜியத்தின் பரிந்துரையின் அடிப்படையில் தற்போது பல்வேறு மாநிலங்களில் உள்ள  ஐகோர்ட்டுக்கு நீதிபதிகள் மற்றும் தலைமை நீதிபதிகள் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டு வரப்படுகிறது. இந்நிலையில் சென்னை ஐகோர்ட்டில் இருக்கும் கூடுதல் நீதிபதிகள் ஐந்து பேரை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க  சுப்ரீம் கோர்ட்  கொலீஜியம் கடந்த 9-ம் தேதி பரிந்துரை செய்திருந்தது.


இந்நிலையில் மேற்கண்ட பரிந்துரையை ஏற்று ஐந்து கூடுதல் நீதிபதிகளை, நிரந்தர நீதிபதிகளாக நியமனம் செய்து  ஜனாதிபதி  திரெளபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். அதன்படி, சென்னை ஐகோர்ட்டில் கூடுதல் நீதிபதிகளாக இருக்கும் நீதிபதி விக்டோரியா கவுரி, நீதிபதி பி.பி.பாலாஜி, நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன், நீதிபதி ஆர்.கலைமதி மற்றும் நீதிபதி கே.ஜி.திலகவதி ஆகியோர்களை அந்த  ஐகோர்ட்டின் நிரந்தர நீதிபதிகளாக நியமனம் செய்யப்படுகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதேபோல அலகாபாத்  ஐகோர்ட் நீதிபதி ஷமீம் அகமது சென்னை ஐகோர்ட்டுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் சென்னை  ஐகோர்ட் நீதிபதிகள் எண்ணிக்கை 63 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் காலியிடங்களின் எண்ணிக்கை 12 ஆக குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.