பள்ளியில் திரைப்படம் - அதிகாரிகள் விசாரணை



பள்ளியில் திரைப்படம் - அதிகாரிகள் விசாரணை


நெல்லை : விக்கிரமசிங்கபுரத்தில் உள்ள பள்ளியில் திரைப்படம் திரையிட்ட சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை


மாணவர்களிடம் மன அழுத்தத்தை போக்க திரைப்படம் திரையிட்டதாக பள்ளி நிர்வாகம் சார்பில் விளக்கம் என தகவல்


அரசு உதவிபெறும் பள்ளி வளாகத்தில், தி கோட் மற்றும் வேட்டையன் படங்கள் திரையிடப்பட்டது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விசாரணை


திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரத்தில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் மாணவா்களிடம் பணம் வசூலித்து திரைப்படம் காண்பித்ததாக எழுந்தப் புகாரையடுத்து, அப்பள்ளியில் கல்வித் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தினா்.


விக்கிரமசிங்கபுரம், அம்பலவாணபுரத்தில் உள்ள அரசு உதவிபெறும் மகளிா் பள்ளியில் மாணவிகளிடம் ரூ. 25 கட்டணம் வசூலித்து சனிக்கிழமை (நவம்பர் 9) நடிகா் விஜய் நடித்த ‘கோட்’ திரைப்படம் காண்பிக்கப்பட்டதாக புகாா் எழுந்தது.


இத்தகவலறிந்த திருநெல்வேலி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சிவக்குமாா் இப்பள்ளியில் விசாரணை நடத்தியதில், அது உண்மையென தெரியவந்தது. இதையடுத்து மாணவா்களிடம் வசூலித்த பணத்தைத் திருப்பிக் கொடுக்க அவா் உத்தரவிட்டாா்.



இதுகுறித்து தலைமை ஆசிரியா் கூறுகையில், மாணவா்களின் விருப்பத்தின்படியே திரைப்படம் காண்பிக்கப்பட்டது; மாணவா்களை கட்டாயப்படுத்தவில்லை. எனினும், மாணவா்களிடம் பணம் திருப்பிக்கொடுக்கப்பட்டு விட்டது என்றாா்.


இதைபோல, அதே வளாகத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் ரூ.10 வசூலித்து ரஜினி நடித்த வேட்டையன் படம் திரையிடப்பட்டதாக வந்தப் புகாரையடுத்து அம்பாசமுத்திரம் வட்டாரக் கல்வி அலுவலா் ராணி அந்தப் பள்ளியில் விசாரணை நடத்தி, மாணவா்களிடம் வசூலித்த பணத்தை திருப்பிக் கொடுக்க அறிவுறுத்தினாா்.


படிப்பு தொடா்பான படமாக இருந்ததால் மாணவா்களுக்குத் திரையிடப்பட்டதாக பள்ளி நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.