வித்தியாசமான அமெரிக்க அதிபர் தேர்தல் நடைமுறை - தேர்தல் எப்படி நடக்கிறது?
உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல், இம்மாதம் 5-ஆம் தேதி நடைபெறும் நிலையில், இதில் வித்தியாசமான முறை பின்பற்றப்படுகிறது. அது என்ன என்பதை இந்தத் தொகுப்பில் காணலாம்.
அமெரிக்காவில் அதிபரும், துணை அதிபரும் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. அதற்குப் பதிலாக, அவர்கள் “Electoral College” எனப்படும் செயல்முறை மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அமெரிக்காவின் மக்கள் தொகையைப் பொறுத்து ஒவ்வொரு மாகாணத்திற்கும் குறிப்பிட்ட பிரதிநிதிகள் வாக்குகள் இருக்கும். உதாரணமாக, கலிபோர்னியாவுக்கு 54 வாக்குகளும், டெக்சாஸ் மாகாணத்திற்கு 40 வாக்குகளும் உண்டு. 50 மாகாணங்கள் மற்றும் தலைநகரப் பகுதியான வாஷிங்டன் டி.சி. யை சேர்த்தால், மொத்தம் 538 Electoral College வாக்குகள் உள்ளன. இதில் 270 வாக்குகளுக்கு மேல் பெறும் வேட்பாளர் அதிபராவார். வாக்காளர்கள் மாகாண அளவில் கட்சிகளின் பிரதிநிதிகளைத் தான் தேர்ந்தெடுக்கிறார்கள். தேசிய அளவில் போட்டியிடும் வேட்பாளர்களை அல்ல.
அதாவது, எந்த அதிபர் வேட்பாளர் அதிக எண்ணிக்கையிலான மக்களின் வாக்குகளைப் பெறுகிறாரோ, அவருக்கு அந்த மாகாணத்தின் அனைத்து எலக்டோரல் காலேஜ் வாக்குகளும் வழங்கப்படும். உதாரணமாக, டெக்சாஸில் ஒரு வேட்பாளர் 50.1% வாக்குகளைப் பெற்றால், அவருக்கு அம்மாகாணத்தின் 40 வாக்குகளும் வழங்கப்படும்.
அதனால்தான், கடந்த 2016-ஆம் ஆண்டு ஹிலாரி கிளிண்டன் தேசிய அளவில் டிரம்பை விட 30 லட்சம் வாக்குகளை கூடுதலாகப் பெற்ற போதிலும், எலக்டோரல் காலேஜ் வாக்குகளை குறைவாகப் பெற்றதால் தோல்வியைத் தழுவினார்.
பெரும்பாலான மாகாணங்கள் ஜனநாயகக் கட்சி அல்லது குடியரசுக் கட்சி என இரு கட்சிகளில் ஏதேனும் ஒன்றுக்கு ஆதரவான நிலையிலேயே உள்ளன. எனவே, இழுபறி நிலவும் சில மாநிலங்களிலேயே கூடுதல் கவனம் உள்ளது. இந்த மாகாணங்கள் ‘swing states’ என அழைக்கப்படுகின்றன. இவையே பெரும்பாலும் வெற்றியைத் தீர்மானிக்கின்றன.
இந்த ஆண்டு அரிசோனா, ஜார்ஜியா, மிச்சிகன், நெவாடா, பென்சில்வேனியா, விஸ்கான்சின் மற்றும் வட கரோலினா ஆகியவை ‘swing states’-களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இம்மாகாணங்களில் கூடுதல் கவனம் செலுத்திக் கமலா ஹாரிசும் டிரம்பும் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.
எலக்டோரல் வாக்குகளை இரண்டு வேட்பாளர்களும் சமமாகப் பெற்றால் பிரதிநிதிகள் மற்றும் செனட் உறுப்பினர்களும் வாக்களித்து அதிபரைத் தேர்வு செய்வர். அமெரிக்க தேர்தல் வரலாற்றில் 1824-ஆம் ஆண்டு நான்கு அதிபர் வேட்பாளர்களான ஆண்ட்ரூ ஜாக்சன், ஜான் குயின்சி ஆடம்ஸ், ஹென்றி க்ளே மற்றும் வில்லியம் க்ராஃபோர்ட் ஆகியோர் சம வாக்குகளைப் பெற்றனர். இதனைத் தொடர்ந்து, பிரதிநிதிகள் சபையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் ஜான் குயின்சி ஆடம்ஸ் அதிக ஆதரவு பெற்று அதிபரானார்.