Disciplinary action against panchayat union middle school teacher engaged in political party work




அரசியல் கட்சிப் பணியில் ஈடுபட்ட ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை...



அரசியல் கட்சிப் பணியில் ஈடுபட்ட சேலம் அரியாம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர் சீதாராமன் மீது ஒழுங்கு நடவடிக்கை


சேலம் அருகே பள்ளிக்கு முறையாக செல்லாமல், அதிமுக கட்சி பணிகளில் ஈடுபட்டு எடப்பாடி பாராட்டு விழாவில் பேசிய அரசு பள்ளி ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரத்தை சேர்ந்தவர் தம்பையா என்கிற சீதாராமன் (45). இவர் தாரமங்கலம் ஒன்றியம் அரியாம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், ஆங்கில பட்டதாரி ஆசிரியராக உள்ளார். இவர் சரிவர பள்ளிக்கு வருவதில்லை என தொடர் புகார் உள்ளது. மேலும், அதிமுக கட்சி சார்ந்த பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. இதனிடையே, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு நேற்று முன்தினம் மேச்சேரியில் பாராட்டு விழா நடந்தது. இதில், காவிரி உபரி நீர் நடவடிக்கை குழு ஒருங்கிணைப்பாளர் தம்பையா என்ற பெயரில், அரசுப்பள்ளி ஆசிரியர் சீதாராமன் பேசினார். இதுகுறித்து மாவட்ட கல்வி அலுவலரிடம் புகார் அளிக்கப்பட்டது.


இதனையடுத்து தாரமங்கலம் மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) ராஜூ, ஆசிரியர் சீதாராமனிடம் நேரில் விசாரணை நடத்தினார். இதில், அவர் கட்சி பணிகளில் ஈடுபட்டு வந்தது உறுதியானது. இதனையடுத்து, அவர் மீது ஒழுங்கு நடவடிக்கைக்கு உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், ஆசிரியர் சீதாராமன் பள்ளி வேலை நேரத்தில் செல்போனில் பேசிக் கொண்டும், மடிக்கணினி பார்த்துக் கொண்டும், மாணவர்களுக்கு பாடம் எடுப்பதே இல்லை எனவும் சமீபத்தில் புகார் கடிதம் பெறப்பட்டது. விசாரித்ததில், அரசியல் சார்ந்த விவசாய சங்கத்தில் பொறுப்பாளராக இருப்பதை ஒப்புக்கொண்டார். இதன் அடிப்படையில் அவர் மீது தமிழ்நாடு குடிமுறைப் பணிகள் (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) விதிகள் 1955, விதி 17(பி)யின் கீழ் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.