50 தொகுதிகளின் வெற்றி தோல்வி நிர்ணயம் எங்கள் கையில் - ஆசிரியர் கூட்டணி எச்சரிக்கை
The victory or defeat of 50 seats is in our hands - Teachers' Federation warns
ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளர் அவர்கள் மானாமதுரையில் நடைபெற்ற பணி நிறைவு பாராட்டு விழாவில் செய்தியாளர்களை சந்தித்து அளித்த பேட்டி 16.03.2025 தினமலர் நாளிதழில் வெளிவந்துள்ளது.
50 தொகுதி தலையெழுத்து எங்கள் கையில் ஆசிரியர் கூட்டணி முதல்வருக்கு சவால்
தமிழகத்தில் 50 தொகுதிகளின் தலையெழுத்தை எங்களால் நிர்ணயிக்க முடியும் என்று தமிழக ஆசிரியர் கூட்டணி அகில இந்திய செயலாளர் அண்ணாமலை கூறினார்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் தலைமை ஆசிரியர் ஞானசேகரன் பணி நிறைவு விழாவில் தமிழக ஆசிரியர் கூட்டணி அகில இந்திய செயலாளர் அண்ணாமலை பேசியதாவது: 6. 25 லட்சம் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களையும் பழைய ஓய்வூதிய திட்டத்தில் மாற்றுவோம் என ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார்.
இது சத்தியம் என்று சொன்னார்.
இந்த பட்ஜெட்டிலாவது சொல்வார்கள் என்று எதிர்பார்த்தோம். ஆனால் குழு அமைத்துள்ளோம் என்று சொல்கின்றனர். குழு அமைப்பது என்பது ஒத்தி போடுவதற்காகத்தான் என கருணாநிதியே கூறியுள்ளார்.
இந்தியாவில் 6 மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவிலேயே முதலிடத்தில் இருக்கிறோம், கனடா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் நமது திட்டத்தை பின்பற்றி வருகிறார்கள் என முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார்.
வாக்குறுதியே சொல்லாத ஆறு மாநிலங்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வந்து விட்டார்கள். ஆனால் வாக்குறுதியை சத்தியமாக சொன்ன ஸ்டாலின் குழுவை அமைத்திருக்கிறேன் என்று சொல்கிறார். அந்தக் குழு விசாரணை முடிவதற்குள் ஆட்சி காலமும் முடிவுக்கு வந்துவிடும்.
நீங்கள் எப்படி மிசா, தடா, பொடா பார்த்தோம் என்று சொல்கிறீர்களோ, அதே போன்று நாங்களும் ஏராளமான அடக்குமுறைகளை பார்த்துள்ளோம். அரசு ஊழியர்களை மொத்தமாக பணி நீக்கிய பிறகு நடந்த தேர்தலில் 40 தொகுதிகளிலும் ஜெயலலிதா தோல்வி அடைந்தார்.
சக்தி மிக்க தலைவராக கருதப்படும் எம்.ஜி.ஆர்., ஆசிரியர்களை 40 நாள் சிறையில் வைத்ததற்காக அடுத்து வந்த உள்ளாட்சித் தேர்தலில் கடும் சரிவை சந்தித்தார்.
நீங்கள் ஆசிரியர்கள் அரசு ஊழியர்களுக்கு எதுவுமே செய்யவில்லை.
அப்புறம் எப்படி 200 தொகுதிகளில் வெற்றி பெறுவீர்கள் என்று கூட்டணி கட்சியினரே கேட்கின்றனர். தற்போதுள்ள பல முக்கிய தலைவர்கள் தபால் ஓட்டுகளால் தான் வெற்றி பெற்றனர்.
1.5 கோடி முதல் 2 கோடி வாக்காளர்கள் வரை எங்களது குடும்பத்தில் உள்ளனர். தமிழகத்தில் 50 தொகுதிகளின் தலை எழுத்தை எங்களால் நிர்ணயிக்க முடியும்.
இதை நாங்கள் சவாலாகவே சொல்கிறோம். இதை எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, பழனிசாமி ஆட்சிக்காலத்தில் நிரூபித்து காட்டி இருக்கிறோம் என்றார்.