அன்று ‘நீட்’ தேர்வில் தோல்வி ; இன்று ரூ.72 லட்சம் சம்பளத்தில் வேலை : ஒரு சாதனை நிகழ்வு

 


அன்று ‘நீட்’ தேர்வில் தோல்வி ; இன்று ரூ.72 லட்சம் சம்பளத்தில் வேலை : ஒரு சாதனை நிகழ்வு


கர்நாடக மாநிலம் மங்களூருவை சேர்ந்தவர் மாணவி ரிதுபர்ணா (20). இவர் மங்களூருவை அடுத்துள்ள அடியாரில் உள்ள சயாத்ரி பொறியியல் மற்றும் மேலாண்மை கல்லூரியில் ரோபாட்டிக்ஸ் ஆட்டோமேஷன் பொறியியல் பிரிவில் இறுதி ஆண்டு பயின்று வருகிறார். 


இவருக்கு ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூ.72.2 லட்சம் சம்பளத்தில் வேலை கிடைத்துள்ளது.


இதுகுறித்து ரிதுபர்ணா கூறுகையில், “எனக்கு பள்ளி நாட்களில் இருந்து மருத்துவராக வேண்டும் என்பது கனவாக இருந்தது. இதற்காக 12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்று, நீட் நுழைவுத் தேர்வு எழுதினேன். ஆனால் எதிர்பாராத விதமாக அந்த தேர்வில் என்னால் வெற்றி பெற முடியவில்லை.


இதனால் எனது கனவுகள் கலைந்து போனதாக மனமுடைந்து போனேன். எனது பெற்றோரும் நண்பர்களும் என்னை தேற்றி, பொறியியல் படிக்குமாறு கூறினர். இதனால் சயாத்ரி கல்லூரியில் ரோபாட்டிக்ஸ் ஆட்டோமேஷன் பிரிவில் சேர்ந்தேன்.


எனது கல்லூரி பேராசிரியர்கள், மூத்த மாணவர்கள் ஒருங்கிணைத்த அனைத்துவிதமான புதுமையான திட்டங்களிலும் ஆர்வத்தோடு பங்கேற்றேன்.


குறிப்பாக ரோபோ இயந்திர வடிவமைப்பு, ஆட்டோமேஷன் பயன்பாடு, இயந்திர வடிவமைப்பு ஆகியவற்றில் எனக்கு அதிக ஈடுபாடு ஏற்பட்டது. 


கல்லூரி நண்பர்களுடன் இணைந்து பாக்கு மரங்களுக்கு பூச்சிக்கொல்லி தெளிக்கும் கருவி, பாக்கு அறுவடை மற்றும் தரம் பிரிக்கும் ரோபோ ஆகியவற்றை வடிவமைத்தேன்...


எங்களின் இந்த முயற்சிக்கு கோவாவில் நடந்த ரோபோட்டிக்ஸ் சர்வதேச மாநாட்டில் பதக்கம் கிடைத்தது.


இதன் மூலம் சிங்கப்பூர், ஜப்பான், சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளை சேர்ந்த ரோபோட்டிக்ஸ் நிபுணர்களின் அறிமுகம் கிடைத்தது. மேலும் இங்கிலாந்தில் உள்ள ரோல்ஸ் ராய்ஸில் ஜெட் இன்ஜின் தயாரிப்பு நிறுவனத்தில் இன்டர்ன்ஷிப் ஆக ஓராண்டு பணியாற்றும் வாய்ப்பும் கிடைத்தது. இதற்காக எனக்கு ஆண்டுக்கு ரூ.39.58 லட்சம் சம்பளம் வழங்கப்பட்டது.


அந்த பயிற்சி காலத்தில் எனது முழு கவனத்தையும் செலுத்தி கடினமாக‌ உழைத்தேன். 


ஜெட் விமானத்தின் இன்ஜின் தயாரிக்கும் பிரிவில் எனது பரிந்துரைகள் பெரிதும் ஏற்கப்பட்டன. 


இதன் காரணமாக கடந்த மாதத்தில் எனக்கு ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூ.72.2 லட்சம் சம்பளம் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.


அதற்கான பணி நியமன கடிதத்தை பெற்றதும் என் பெற்றோரிடமும், கல்லூரி நிர்வாகத்திடம் காட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினேன்.


இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் பரவி, ஏராளமானோர் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர்.


கர்நாடக சட்டப்பேரவைத் தலைவர், மங்களூருவை சேர்ந்த எம்பி, எம்எல்ஏக்கள், கல்லூரி பேராசிரியர்கள் என ஏராளமானோர் என்னை நேரில் சந்தித்து பாராட்டினர்.


என்னைப் பொறுத்தவரை, தோல்விகளை கண்டு அச்சப்படாமல் இளைஞர்கள் புதிய துறைகளில் உற்சாகத்துடன் போராடினால், நிச்சயம் இமாலய வெற்றி கிடைக்கும். 


நான் எனது மருத்துவர் கனவு சிதைந்த போதும், துவளாமல் வேறு துறையில் ஆர்வமோடு இயங்கினேன். இப்போது இளம் பொறியாளராக, படிப்பை முடிக்கும் முன்பாகவே ரூ.72 லட்சம் சம்பளத்துக்கு வேலை செய்கிறேன். இதன் மூலம் எனது பெற்றோரின் ஆசைகளை நிறைவேற்றுவேன்.” என்றார்.


20 வயதிலேயே சாதித்த ரிதுபர்ணாவை சமூக வலைதளங்களில் ஏராளமான இளைஞர்களும், கல்வியாளர்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.