கேரள பள்ளிக்கூட வகுப்பறைகளில் மாற்றத்தை ஏற்படுத்திய திரைப்படம்
The film that changed Kerala school classrooms
கேரள பள்ளிக்கூடங்களில் இனி கடைசி பெஞ்ச் கிடையாது - மாற்றத்தை ஏற்படுத்திய சினிமா படம்
படிப்பில் சிறந்து விளங்கும் மாணவர்கள் முன்வரிசையிலும், படிப்பில் பின்தங்கிய மாணவர்கள் கடைசி வரிசையிலும் அமர வைக்கப்பட்டு இருப்பார்கள்.
கடந்த 1994-ம் ஆண்டு மத்திய அரசு 6 மாநிலங்களில் ஆரம்ப கல்வி திட்டத்தின் கீழ் மாணவர்களின் இருக்கை முறை மாற்றத்தை அமல்படுத்த அறிவுறுத்தியது.
இயக்குனர் வினேஷ் விஸ்வநாத் இயக்கிய 'ஸ்தானார்த்தி ஸ்ரீகுட்டன்' திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இந்த படத்தில் கேரளாவில் கிராமப்புரத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன. பள்ளி தேர்தலை மையமாக கொண்டு இந்த படம் இயக்கப்பட்டு உள்ளது. மாணவர்கள் இடையேயான நட்புறவு, மகிழ்ச்சிகள், அவ்வப்போது ஏற்படும் மோதல்கள் ஆகியவை அழகாக படமாக்கப்பட்டு உள்ளன.
வழக்கமாக பள்ளிகளில் மாணவர்கள் பெஞ்சுகளில் வரிசை வரிசையாக உட்கார வைக்கப்படுவது வழக்கம். முதல் வரிசை, 2-ம் வரிசை, 3-ம் வரிசை என தொடர்ந்து பெஞ்சுகள் போடப்பட்டு இருக்கும். முதல் வரிசையை போல கடைசி வரிசையும் இருக்கும். படிப்பில் சிறந்து விளங்கும் மாணவர்கள் முன்வரிசையிலும், படிப்பில் பின்தங்கிய மாணவர்கள் கடைசி வரிசையிலும் அமர வைக்கப்பட்டு இருப்பார்கள்.
இத்தகைய வரிசை முறை என்பது மாணவர்கள் மத்தியில் வேறுபாடுகளை ஏற்படுத்துவது வழக்கமாகி விட்டது. அந்த வேறுபாடுகளை மாற்றும் நோக்கத்துடன் இந்த படத்தில் பள்ளி வகுப்பறையில் அரை வட்ட வடிவில் மாணவர்கள் இருக்கை அமைக்கப்பட்டு காட்சிகள் வைக்கப்பட்டு உள்ளது. அரைவட்ட வடிவில் இருக்கைகள் போடப்பட்ட வகுப்பறையில் ஆசிரியர் நடுவில் நின்று அனைத்து மாணவர்களையும் நேரடியாக பார்த்து பாடம் நடத்தும் கருத்து இந்த படத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த படம் வெளியான பிறகு மாணவர்களின் பெஞ்ச் இருக்கை அமைப்பு தொடர்பான காட்சிகளுக்கும், அது வலியுறுத்தும் கருத்துக்கும் வரவேற்பு கிடைத்தது. அந்த படத்தில் உள்ள காட்சிகளின்படி இதுவரை கேரளாவில் உள்ள 6 பள்ளிகளில் மாணவர்கள் பெஞ்ச் இருக்கை முறை அரைவட்ட வடிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. அதாவது இனி கடைசி பெஞ்ச் இல்லை என்கிற நிலை ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
இதுகுறித்து படத்தை இயக்கிய வினேஷ் விஸ்வநாத் கூறியதாவது:-
கேரளாவில் உள்ள பல பள்ளிகளால் எனது படத்தில் உள்ள வகுப்பறை பெஞ்ச் கட்டமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டு உள்ளது. 6 பள்ளிகள் ஏற்கனவே இதை அறிமுகப்படுத்தி உள்ளன. இன்ஸ்டாகிராம் வழியாக நாங்கள் அதை பற்றி அறிந்தோம். நான் திருவனந்தபுரத்தில் உள்ள அரசு பள்ளியில் தொடக்கப்பள்ளியில் படித்தபோது அப்படித்தான் அமர்ந்திருந்தேன். இந்த காட்சியை படத்தில் வைத்தபோது பள்ளிகளில் இந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நான் நினைக்கவில்லை. இந்த படத்தை வெளியிட பல வகையிலும் சிரமங்களை சந்தித்தோம். கிட்டத்தட்ட ஒரு வருட தாமதத்துக்கு பிறகு படத்தை வெளியிட்டு உள்ளோம். படத்துக்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்தன. ஆனால் தியேட்டர்களில் கொஞ்ச நாட்களே ஓடியது. பின்னர் 7 மாதங்கள் கழித்து ஓ.டி.டி.யில் வெளியிடப்பட்டு உள்ளது.
கொல்லம் மாவட்டத்தில் வலக்கம் ஆர்.வி.வி. மேல்நிலைப்பள்ளி முதன்முதலாக இத்தகைய பெஞ்ச் மாற்றத்தை அமல்படுத்தியது. இந்த பள்ளியை கேரள போக்குவரத்து துறை மந்திரி கணேஷ்குமார் நிர்வகிக்கிறார். அவர் நிறைய மலையாள படங்களில் நடித்துள்ளார்.
இந்த படம் வெளியாவதற்கு 7 மாதங்களுக்கு முன்பே அவருக்கு படத்தை போட்டு காட்டினோம். அவருக்கு அது மிகவும் பிடித்து இருந்தது. அவரது பள்ளியில் பெஞ்ச் முறையில் மாற்றம் செய்திருப்பது அவரது உறவினர் ஒருவர் மூலம் எனக்கு தெரியவந்தது. படம் வெளியானபோது அதை வெளிப்படுத்த முடியவில்லை. ஏனென்றால் படத்தின் கிளைமாக்ஸ் அதுதான். ஓ.டி.டி.யில் வெளியான பிறகே நாங்கள் அதை பிரபலப்படுத்தினோம்.
அதைத்தொடர்ந்து மேலும் 5 பள்ளிகள் இந்த மாற்றங்களை செய்துள்ளன. மேலும் பல பள்ளிகள் இருக்கை முறையில் மாற்றம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பள்ளியில் இத்தகைய இருக்கை முறை மாற்றம் என்பது புதியது அல்ல. கடந்த 1994-ம் ஆண்டு மத்திய அரசு 6 மாநிலங்களில் ஆரம்ப கல்வி திட்டத்தின் கீழ் மாணவர்களின் இருக்கை முறை மாற்றத்தை அமல்படுத்த அறிவுறுத்தியது. ஆனால் அப்போது பள்ளி நிர்வாகத்தினர் யாரும் அதை அமல்படுத்த முன்வரவில்லை. இப்போது திரைப்படம் ஏற்படுத்திய தாக்கம் காரணமாக, கேரளாவில் உள்ள பள்ளிகளில் இத்தகைய மாற்றம் அமலுக்கு வர தொடங்கியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.