மனைவிக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்த வங்கி மேலாளர்


மனைவிக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்த வங்கி மேலாளர்


 மனைவி கர்ப்பமானது முதல் மருத்துவமனைக்கு கூட்டிச் செல்லாமல் இருந்த வங்கி மேலாளர்


நேற்று பிரசவம் நடப்பதை அறிந்த வட்டார மருத்துவ அலுவலர், செவிலியர்கள், வருவாய்த்துறையினர் வீட்டுக்குச் சென்ற நிலையில் கதவைப் பூட்டிக்கொண்டு வீடியோ கால் மூலமாக யாரிடமோ பேசிக் கொண்டே பிரசவம் பார்த்த சம்பவம்


தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரைச் சேர்ந்தவர் கஜேந்திரன் (வயது 32). இவர் திண்டுக்கல் மாவட்டம் கோபால்பட்டியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சத்யா (26). இவர்கள் கோபால்பட்டி எல்லை நகரில் வசித்து வருகின்றனர். சத்யா ஓசூரில் உள்ள கல்லூரியில் இளநிலை பேராசிரியராக பணிபுரிந்து வந்தார்.


கர்ப்பிணியாக இருந்த நிலையில் அங்குள்ள ஆஸ்பத்திரியில் அவ்வப்போது உடல் நலம் குறித்து மகப்பேறு டாக்டரிடம் பரிசோதனை செய்து வந்துள்ளார். ஆனால் அவரது கணவர் கஜேந்திரன் இயற்கை முறையில் மட்டுமே குழந்தை பிறக்க வேண்டும். ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு செல்லக்கூடாது என தெரிவித்துள்ளார்.


இதனால் 8 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையிலேயே மனைவியை வீட்டுக்கு வரவழைத்தார். கஜேந்திரன் இயற்கை முறை கருத்தரித்தல் குறித்து வாட்ஸ்அப் குழுவை உருவாக்கி அதில் உள்ள நண்பர்களிடம் கருத்துகளை கேட்டு வந்துள்ளார். குழுவில் உள்ளவர்கள் அந்த காலத்தில் 10 குழந்தைகள் கூட வீட்டிலேயே இயற்கை முறையில் பிறந்துள்ளது. ஆனால் ஆஸ்பத்திரிக்கு சென்றால் தாய் மற்றும் குழந்தையின் உடல் நிலை பாதிக்கப்படும் என்று கூறி வீட்டிலேயே பிரசவம் பார்ப்பது எப்படி என்பது குறித்து கஜேந்திரனுக்கு தெரிவித்துள்ளனர். இருந்தபோதும் சத்யாவின் பெற்றோர்கள் தனது மகளின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவ்வப்போது ஆஸ்பத்திரிக்கு சென்று வருமாறு கூறியுள்ளனர்.


அதன்படி ஆஸ்பத்திரிக்கு சென்று வந்தபோது சத்யாவுக்கு 20 அல்லது 21-ந்தேதி குழந்தை பிறக்கும் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.


இந்நிலையில் நேற்று சத்யாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த சுகாதாரத்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் ஆகியோர் அவரது வீட்டுக்கு வந்துள்ளனர். அப்போது தனது மனைவிக்கு தானே பிரசவம் பார்ப்பேன் என்றும், டாக்டர்கள் யாரும் வர வேண்டாம் என கஜேந்திரன் உறுதியாக கூறி விட்டார். கொசவபட்டி வட்டார மருத்துவ அலுவலர் ரெங்கசாமி, அரசு மருத்துவ அலுவலர் பிவின் ஆரோன், டாக்டர் சந்தானகுமார், செவிலியர்கள், சாணார்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன், கிராமநிர்வாக அதிகாரி சுப்புராஜ் மற்றும் போலீசார் அவர்கள் வீட்டுக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் யார் பேச்சையும் கஜேந்திரன் கேட்பதாக இல்லை.


தனது செல்போனில் வீடியோ கால் செய்து குழுவில் உள்ள அட்மின் தெரிவித்த கருத்தின்படி மனைவி சத்யாவுக்கு கணவர் கஜேந்திரன் பிரசவம் பார்த்தார். இவர்களுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த பிறகாவது தாய் மற்றும் குழந்தையின் நிலை குறித்து பரிசீலிப்பதற்காக வீட்டு முன்பு ஆம்புலன்ஸ் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. ஆனால் குழந்தை பிறந்த பிறகு கூட கஜேந்திரன் மருத்துவக்குழுவினரை பார்வையிட அனுமதிக்கவில்லை. குழந்தை பிறந்ததை வீடியோ மூலம் எடுத்து குழுவில் உள்ள உறுப்பினர்களுக்கு அனுப்பி கஜேந்திரன் பெருமிதம் கொண்டார்.


இதனிடையே சத்யாவின் தாய் எப்படியாவது தனது மருமகனை பிரசவம் பார்ப்பதில் இருந்து தடுத்து நிறுத்த வேண்டும் என்று சாணார்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க வந்தார். ஆனால் அதற்குள் குழந்தை பிறந்த விபரம் தெரியவரவே போலீசார் வழக்கு பதிவு செய்யவில்லை. மதியம் முதல் இரவு வரை யாரையும் அனுமதிக்காமல் கஜேந்திரன் வீட்டை பூட்டிக் கொண்டு குழுவில் உள்ள நபர்களிடமே பேசிக் கொண்டு இருந்தார்.


இன்று காலை அவரது வீட்டுக்கு சென்ற சுகாதாரக்குழுவினர் சத்யா மற்றும் அவரது குழந்தையை பார்வையிட்டு சோதனை செய்தனர். அப்போது இருவரும் நலமாக இருப்பதை அறிந்து நிம்மதி பெருமூச்சு விட்டனர். இச்சம்பவம் கோபால்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இது குறித்து திண்டுக்கல் மாவட்ட சுகாதாரக்குழு அதிகாரி டாக்டர் செல்வக்குமார் தெரிவிக்கையில், தமிழகம் முழுவதும் இயற்கை உணவுகள், இயற்கை வாழ்வியல் முறை, இயற்கை முறையில் பிரசவித்தல் குறித்த புத்தகங்கள் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இயற்கை முறையில் டாக்டர்கள் இல்லாமல் பிரசவம் பார்ப்பது குறித்த பரப்புரையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக வாட்ஸ்அப் குழுவை உருவாக்கி தமிழகம் முழுவதும் ஒருவித செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. இது மக்களிடையே அதிகரிக்கும் பட்சத்தில் விபரீத விளைவுகள் ஏற்படும். எனவே மாவட்ட கலெக்டருக்கு இது குறித்து தெரிவித்து அவரது பரிந்துரையின் பேரில் மக்களை தவறான முறையில் வழிநடத்தும் வாட்ஸ்அப் குழுவின் அட்மின் மற்றும் அதில் இடம்பெற்றுள்ளவர்கள் யார்? யார்? என்பது குறித்து விசாரணை நடத்தப்படும்.


இனி வரும் காலங்களில் இது போன்று நடைபெறாமல் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றார்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.