வேண்டாம் இனியொரு ஹிபகுஷா (Nijyuu Hibakusha) : சுட்டோமு யமகுச்சியின் கதை
நிஜ்யு ஹிபாகுஷா
(Nijyuu Hibakusha)
சுட்டோமு யமகுச்சியின் கதை
யமகுச்சி ஐப்பானில் உள்ள
நாகசாகியில் மார்ச் 16, 1916 அன்று நடுத்தர குடும்பத்தில் பிறந்தார்.
படிப்பில் கெட்டியான அவர்
நன்றாகப் படித்து டோக்யோவில் உள்ள பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டதாரியானார்.
இளம் வயதிலேயே நாட்டில் உள்ள மிகப்பெரும் தொழில் நிறுவனங்களில் ஒன்றான மிட்சுபுஷியில் கப்பல் கட்டும் பொறியாளரானார். தனது சொந்த ஊரில் இயங்கி வந்த மிட்சுபுஷி தொழிற்சாலையில் பொறியாளராகப் பணிபுரிந்து வந்தார்.
அவருக்குத் திருமணமாகி மனைவியும் ஒரு ஆண் குழந்தையும் இருந்தனர்.
உலகப் போர் சூழலில்,
மிட்சுபுஷி நிறுவனம் ஜப்பான் இம்பீரியல் ராணுவத்துக்குத் தேவையான கப்பல்கள், டோர்பிடோக்கள், தளவாடங்களை மும்முரமாகத் தயார் செய்து கொடுத்துக் கொண்டிருந்தது.
இந்நிலையில், இவருடன் சேர்ந்து இவருடன் பணியாற்றும் அகிரா இவனாகா, குனியோஷி சாட்டோ ஆகிய நண்பர்களுக்கு- 400 மைல்களுக்கு அப்பால் இருக்கும் ஹிரோஷிமா நகரில் உள்ள மிட்சுபுஷி கப்பல் தொழிற்சாலையில் மூன்று மாதங்கள் பணிபுரிய "மாற்றுப் பணி" வழங்கப்பட்டது.
மூன்று மாதங்கள் செவ்வனே தனது கடமைகளை முடித்த பின்
ஆகஸ்ட் 6,1945 அன்று காலை
ரயில் மூலம் மூவரும் நாகசாகி பயணத்திற்கு ஆயத்தமாகினர்.
இந்நிலையில் ரயில் நிலையத்தை நோக்கி நடந்து செல்லும் போது
தனது அலுவலக முத்திரையை மிட்சுபுஷி அலுவலகத்தில் மறந்து வைத்ததை உணர்ந்து மீண்டும் அலுவலகம் நோக்கி நடக்கிறார்.
நண்பர்கள் இருவரும் மிட்சுபுஷி கப்பல் கட்டும் இடத்துக்கு சென்று விட்டு ரயில் நிலையத்துக்கு வருவதாகக் கூறியிருந்தனர்.
இந்நிலையில் சரியாக காலை 7 மணியில் இருந்தே
இரண்டு பி29 அமெரிக்க போர் விமானங்கள் அவ்வப்போது ஹிரோஷிமா வான் எல்லைக்குள் வருவதும் போவதுமாக இருக்கவும்
ஏர் ரெய்டு சைரன்கள் ஒலிக்கவும்
பிறகு அமைதியாகவும் என்று இருந்தன.
கடந்த சில நாட்களாகவே இவ்வாறு
அமெரிக்க விமானங்கள் ஒத்திகை பார்த்து வந்தபடியால் புலி வருது கதை போல ஹிரோஷிமா மக்களும்
ஏர் ரைடு சைரன்களுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வில்லை.
சுட்டோமுவும் காலை 8 மணி போல் ஒலித்த சைரன்களுக்கு பெரிய முக்கியத்துவம் கொடுக்காமல் அலுவலகத்தில் தனது முத்திரையை எடுத்துக் கொண்டு வெளிய வரும் போதே
சூரியனை விஞ்சும் அளவு பெரிய ஒளிக் கீற்று அவரைத் தாக்கியது.
கூடவே பெரிய அதிர்வு அலை வர அவர் அருகில் இருந்த சாக்கடையில் இறங்கி முகத்தை மூடிக் கொள்ள முயன்றும் அந்த பலமான விசை அவரை அங்கிருந்து அருகில் உள்ள உருளைக்கிழங்கு நடவு செய்யப்பட்ட வயலுக்குள் வீசியது.
முகம் கை கால் உடல் என முழுவதும் தீக்காயங்களுடன் தனது நண்பர்களைத் தேடி ரயில் நிலையம் சென்றால் அங்கு இல்லை.
அருகில் இருந்த மிட்சுபுஷி தொழிற்சாலையில் இரு நண்பர்களும் உயிருடன் இருந்ததை அறிந்து மகிழ்ச்சி கொண்டார்.
மூவரும் அருகில் இருக்கும் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைபெற்றுக் கொண்டு
அன்றைய இரவு பங்கர்களுக்குள் அடைக்கலம் புகுந்தனர்.
அடுத்த நாள் காலை
ரயில் நிலையம் இயங்கிக் கொண்டிருந்ததைக் கண்டு ஆச்சரியப்பட்டனர்.
உடனடியாக ஆகஸ்ட் 7 ஆம் தேதி நாகசாகிக்கு வண்டியேறி
ஆகஸ்ட் 8 நாகசாகி அடைந்தார்.
அங்கு அவரது தாயால் கூட இவரை அடையாளம் காண முடியவில்லை.
முகம் முழுவதும் தீக்காயங்கள் ஏற்பட்டதால் ஏதோ பேய் பிசாசு தான் வருகிறது என்று நினைத்ததாக அவரது தாய் பதிவு செய்திருக்கிறார்.
ஆகஸ்ட் 8 அன்று அருகில் இருந்து மருத்துவமனைக்கு மனைவியுடன் சென்று சிகிச்சை பெற்றுக் கொண்டு அன்றைய நாள் முழுவதும் ஓய்வில் இருந்தார்.
ஆகஸ்ட் 9, என்ன நினைத்தாரோ தெரியவில்லை. உடனடியாக படுக்கையை விட்டு எழுந்து, நாகசாகியில் உள்ள தனது மிட்சுபுஷி அலுவலகத்துக்குச் சென்றார்.
அங்கு இவரது வருகையை அறிந்த
இயக்குனர் பணியாளர்கள் ஒன்றுகூடல் நிகழ்வைக் கூட்டி
ஹிரோஷிமாவில் என்ன நடந்தது என்று கேட்டார்.
ஹிரோஷிமாவில் நடந்ததை சுட்டோமு விவரித்ததை கேட்டதும்..
"எப்படி ஒரு குண்டைப் போட்டு ஒரு நகரையே உருக்குலைய வைக்க முடியும்? இதெல்லாம் நம்பும்படியாக இல்லை" என்று அந்த தொழிற்சாலை இயக்குநர் பேசிக் கொண்டிருக்கும் போது
மீண்டும் அதே பளிச்சென்ற மின்னல் கீற்று பாய்ந்தது.
இம்முறை ஐந்து அதிர்வு அலைகள்.
சுட்டோமுவுக்குத் தெரிந்து விட்டது.
இது ஹிரோஷிமாவில் தான் உணர்ந்த அதே விஷயம் என்று உடனே மேஜைக்கு கீழ் சென்று ஒழிந்து கொண்டார்.
இவ்வாறு ஹிரோஷிமா நாகசாகி ஆகிய இரண்டு நகரங்களிலும் அணுகுண்டு வெடித்த கிரவுண்ட் ஜீரோவுக்கு மிக அருகில் இருந்து வீச்சை வாங்கியவர் இவர்.
போர் ஓய்ந்த காலகட்டத்தில்
அணுகுண்டு தரும் துன்பத்துக்கு ஆளானவர்களை
"ஹிபகுஷா" என்று அழைக்கும் மரபு தோன்றியது.
அவர்களுக்கு முன்னுரிமை அட்டைகள் வழங்கப்பட்டு சிகிச்சையில் முன்னுரிமை, அவர்களின் இறுதிச் சடங்குகளுக்கு மானியம் ஆகியவை வழங்கப்பட்டன.
1957 இல் சுட்டோமுவும் ஹிபாகுஷாவாக அங்கீகரிக்கப்பட்டு முன்னுரிமை அட்டையைப் பெற்றார்.
ஆனாலும்,
போர் ஓய்ந்த ஜப்பானில் ஹிபாகுஷாக்கள்
சமூக வெறுப்புக்கும் அருவருப்புக்கும் உள்ளானது உண்மை.
அணுக் கதிர் வீச்சுக்கு உள்ளாகி கடும் காயங்களைக் கண்டவர்கள் தங்களின் வேலைவாய்ப்பை இழந்தனர்.
இத்தகையோருக்கு முறையான வேலைவாய்ப்பு , புணரமைப்பு போன்றவற்றில் பாதிப்பு ஏற்பட்டன.
கதிர் வீச்சுக்கு உள்ளான பெண்களுக்கு திருமணமாவதில் சிக்கல் தோன்றியது. குழந்தை பிறப்பு நடக்காது என்பது போன்ற மூடநம்பிக்கைகள் பரவின.
அவர்கள் இருக்கும் இடங்களில் கதிர் வீச்சு அபாயம் உண்டு என்ற மூடநம்பிக்கை செய்தி பரவியதால்
ஹிபகுஷாக்கள் பொதுவெளிகளில் அங்கம் வகிக்க இயலாமல் அருவருக்கப்பட்டனர். வீடு கிடைக்காமல் அலைக்கழிக்கப்பட்டனர்.
இதனால் மனரீதியான தாக்குதலுக்கு ஹிபகுஷாக்கள் உள்ளாக்கப்பட்டனர்
இதன் விளைவாக
தங்களுக்கு நேர்ந்த அணுகுண்டு சார்ந்த அனுபவங்களை சமூகத்தின் ஒதுக்குதலுக்கு பயந்து அஞ்சி வெளியே சொல்லாமல் பலர் வாழ்ந்து வந்தனர்.
சுட்டோமு யமகுச்சியும் தனது 90 வயது வரை
இது குறித்து வாய் திறக்காமல் அமைதி காத்தார்.
தனது வாழ்வின் இறுதி பத்தாண்டுகளில் தான் அணுகுண்டுக்கு எதிரான பிரச்சாரத்திற்கு வலு சேர்க்க தனது வரலாற்றை உலகுக்கு எடுத்துக் கூறினார்.
2009 ஆம் ஆண்டு
ஜப்பான் அரசாங்கம்
அவரை இரண்டு அணுகுண்டுகளின் தாக்கத்தை துயரத்தை சந்தித்தவர் என்று அங்கீகாரம் வழங்கியது.
அவருக்கு வழங்கப்பட்ட பெயரே
" நிஜ்யு ஹிபாகுஷா " அதாவது
இரண்டு முறை அணுகுண்டின் தாக்கத்தை துயரத்தை அனுபவித்தவர் என்று அர்த்தம்.
இவரைப் போன்று 165 பேர்
இரண்டு அணுகுண்டுகளின் தாக்கங்களை பெற்றிருந்தனர் என்று கூறப்பட்டாலும்
அவர்களுக்கு அத்தகைய அங்கீகாரம் கிடைப்பதற்கு முன்னமே இறந்து விட்டனர்.
போர் முடிந்த காலத்தில் ஆறு லட்சம் + ஹிபகுஷாக்கள் இருந்த சூழ்நிலையில்
தற்சமயத்தில் 2025இல் சுமார் ஒரு லட்சம் ஹிபகுஷாக்கள் வாழ்ந்து வருவதாக ஜப்பான் அரசு கூறுகிறது.
இவர்கள் அனைவரும் அணுகுண்டின் தாக்கத்தைப் பெறும் போது குழந்தைகளாகவும் சிறார் சிறுமியராகவும் இருந்தவர்கள்.
இப்போது 86+ வயதை அடைந்து வாழ்ந்து வருகின்றனர்.
ஹிபகுஷாக்கள் இணைந்து நடத்தும் தன்னார்வ தொண்டு அமைப்பான
"நிஹன் ஹிடாங்யோ" (NIDAN HIDANKYO) என்பது
அணு ஆயுதங்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்யும் அமைப்பாகும்.
இவர்கள் 1956 முதல் தொடர்ந்து அணு ஆயுதங்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அமைப்புக்கு 2024 ஆம் ஆண்டு உலக அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது மிகவும் பொருத்தமானதும் தகுதியானதுமாகும்.
இரண்டு முறை அணுகுண்டைத் தாங்கிய
சுட்டோமு அவர்களின் மனைவி மற்றும் மகன் இருவரும் புற்று நோய் வந்து இறந்தனர்.
சுட்டோமு அவர்களும்
வாழ்நாள் முழுவதும் வெள்ளை அணுக்கள் குறைபாடு, ஒரு பக்க காது கேளாமை, கண் புரை, தீக்காய வடுக்களுடன் வாழ்ந்து
தனது 93வது வயதில் 2010 ஆம் ஆண்டு இரைப்பைப் புற்று நோய் ஏற்பட்டு இறந்தார்.
அவரது தியாகம் போற்றப்படட்டும்.
ஹிபகுஷாக்கள் பற்றி அறிந்து கொள்ளும் அதே வேளையில்
நாம் போர் மற்றும் அணு ஆயுதங்களை எதிர்க்க வேண்டும்.
இனியும் உலகில் எங்கும் ஹிபகுஷாக்கள்
உருவாகாமல் நாம் தான் பார்த்துக் கொள்ள வேண்டும்.
வேண்டாம் இனியொரு ஹிபகுஷா
நன்றி
Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.