கன்னியாகுமரியில் ஒற்றை மாணவனுக்கு ஆண்டுக்கு 24 லட்சம் ரூபாய் செலவிடும் பள்ளிக்கல்வித்துறை
கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை தாலுகாவில் உள்ள இரத்தினபுரம் என்ற கிராமத்தில் ஒரு அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. ஐந்து வகுப்புகள் கொண்ட இப்பள்ளியில் ஒரே ஒரு மாணவர் மட்டும்தான் படிக்கிறார்.
அதைவிட ஆச்சரியம் அந்த ஒரு மாணவனுக்கு இரண்டு ஆசிரியர்கள் இருக்கிறார்கள் என்பது.
நான்காம் வகுப்பு படிக்கும் அந்த மாணவனுக்காக தமிழ்நாடு அரசின் முயற்சி அப்பகுதி மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இந்தப் பள்ளியில் இந்த ஒரே ஒரு மாணவனுக்காக ஒரு தலைமை ஆசிரியர், ஒரு ஆசிரியர் என இருவர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
அதுமட்டுமல்ல, இந்த மாணவனுக்கு விசாலமான வகுப்பறை, பெரிய கலையரங்கம் என அனைத்து வசதிகளும் உள்ளது.
மாதம் சுமார் ஒரு லட்ச ரூபாய் சம்பளம் பெறும் இந்த இரு ஆசிரியர்களும், ஒரு மாணவனின் வருகையை எதிர்நோக்கி அன்றாடம் பள்ளியில் காத்திருக்கின்றனர்.
ஆண்டுக்கு சுமார் 24 லட்ச ரூபாய் செலவில் இந்த மாணவனின் கல்விக்காக பள்ளியைத் திறந்து வைத்திருக்கும் தமிழ்நாடு பள்ளிக்கல்வி துறையின் இந்த நடவடிக்கை , இப் பகுதி மக்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு மாணவனுக்காக இவ்வளவு செலவு செய்து பள்ளியை நடத்த வேண்டுமா? என்று ஒரு சிலர் கேட்கையில், ஒரு குழந்தை என்றாலும், கல்விக்காக அரசு இவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பது பாராட்டுக்குரியது தானே என்கிறார்கள் மற்றொரு சாரார்.
சில ஆண்டுகளுக்கு முன் ஜப்பானில் ஒரு மாணவிக்காக மட்டுமே குறிப்பிட்ட ரயில் நிலையத்தில் நின்று செல்லும் தொடர்வண்டி குறித்த செய்தி ஆச்சரியத்தை ஏற்படுத்திய நிலையில், தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறையின் இந்த செயல்பாடும் கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.