ஆசிரியர் தகுதித் தேர்வு - உச்சநீதிமன்றத் தீர்ப்பு - ஆசிரியர் கூட்டணி அறிக்கை
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*
*மாநில மையம்*
*நாள்: 03.09.2025*
*******************
*TET வழக்கு!*
*உச்சநீதிமன்றத் தீர்ப்பு!*
*அடுத்த கட்ட நகர்வுகள் என்ன?*
********************
*பேரன்புமிக்க ஆசிரியப் பெருமக்களே! வணக்கம்.*
*ஆசிரியர் தகுதித் தேர்வு(TET) தொடர்பாக நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்பு 01.09.2025 அன்று வெளிவந்துள்ளது.அத்தீர்ப்பு வெளிவந்தவுடன் தமிழ்நாடு முழுவதும் ஆசிரியர்கள் மத்தியில் மட்டுமல்ல; பொதுமக்கள் மத்தியிலும் கூட ஒரு வகையான பதட்டமும், பரபரப்பும் தொற்றிக் கொண்டது. இப்படி ஒரு தீர்ப்பை யாரும் எதிர்பார்க்கவில்லை.இப்படி ஒரு வழக்கு நடந்ததை அறியாத பொதுமக்கள் கூட தற்போது பணியில் உள்ள,55 வயது நிறைவடையாத ஆசிரியர்கள் அனைவரும் தகுதித் தேர்வு எழுதித் தேர்ச்சி பெற்றால்தான் பணியில் தொடர முடியும் என்ற தீர்ப்பைக் கேட்டு ஆச்சரியத்தோடும், ஆதங்கத்தோடும் பேசிக் கொண்டதைக் காண முடிந்தது. அந்த அளவுக்கு இந்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு பொதுமக்கள் மத்தியில்கூட பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம்.*
*இந்தத் தீர்ப்பு ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களிலும் மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறி இருக்கிறது. தற்போது பணியில் உள்ள ஆசிரியர்கள் மத்தியில் மிகப்பெரிய மன உளைச்சலையும்,உளவியல் ரீதியான பாதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு இந்தியா முழுவதும் பொருந்தக் கூடியது. இந்தியா முழுவதும் உள்ள ஒன்றிய அரசின் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள்,28 மாநிலங்கள் மற்றும் 8 ஒன்றிய ஆட்சிப் பகுதிகளின் நிர்வாகத்தின் கீழ் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்கள் அனைவருக்கும் இத்தீர்ப்பு பொருந்தக் கூடியது. உதாரணமாக தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள், ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் என அனைவரும் தங்களது பணியைத் தொடர்வதற்கும், பதவி உயர்வில் செல்வதற்கும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இதில் போனால் போகிறதென்று 55 வயது நிரம்பிய ஆசிரியர்களுக்கு மட்டும் இதிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.இது போன்ற ஒரு தீர்ப்பைக் கடந்த காலங்களில் நாம் கேள்விப்பட்டதில்லை. பொதுவாக கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்- 2009 நடைமுறைக்கு வந்த பின்பு தான் ஆசிரியர் தகுதித் தேர்வு என்பது நடைமுறைக்கு வந்தது. அதன்பின்பு தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால்,கல்வி உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பு நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் அனைவரும் தகுதித்தேர்வு எழுத வேண்டும் என்பது கற்பனையிலும் நினைத்துப் பார்க்க முடியாத தீர்ப்பாக அமைந்துவிட்டது.முன் தேதியிட்டு அமல்படுத்தப்பட்டுள்ள இத்தீர்ப்பு இயற்கை நீதிக்கு முரணாக உள்ளது.*
*தமிழ்நாட்டைப் பொறுத்த அளவில் ஒருவர் ஆசிரியராக நியமனம் பெற பல்வேறு தடைகளைத் தாண்ட வேண்டியுள்ளது.முதலில் குறிப்பிட்ட கல்வித் தகுதியோடு ஆசிரியர் பயிற்சியில் தேர்ச்சி பெற வேண்டும். ஆசிரியர் பயிற்சியில் தேர்ச்சி பெற்ற ஒருவருக்கு அவர் ஆசிரியராக பணியாற்ற தகுதியானவர் என்று அரசே சான்றிதழ் வழங்குகிறது. இவ்வாறு சான்றிதழ் பெற்றவர்கள் ஒரு காலத்தில் வேலைவாய்ப்பக முன்னுரிமையின்படி ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர்.அது சமூக நீதியாக அமைந்திருந்தது.ஆனால், தற்போது ஆசிரியர் பயிற்சி பெற்ற ஒருவர் மீண்டும் ஒரு ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதித் தேர்ச்சி பெற வேண்டும். அவ்வாறு தேர்ச்சி பெற்றவர்களுக்கு 2012-2013 ஆம் ஆண்டுகளில் பணி நியமனம் வழங்கப்பட்டது. ஆனால், தற்போது ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஒருவர், ஆசிரியர் நியமனத்திற்கென்று மீண்டும் ஒரு தேர்வை எழுத வேண்டும். அதில் வெற்றி பெற்றரே ஆசிரியராகப் பணியில் சேர முடியும்.*
*ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று ஆசிரியர்களாக நியமனம் பெற்ற ஒரு சிலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் கொடுத்த வழக்கில் உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு,கல்வி உரிமைச் சட்டம் 2009ஐ பின்பற்றி தகுதித் தேர்வு தொடர்பாக 29.07.2011இல் NCTE வெளியிட்ட அறிவிக்கைக்கு முன்பு நியமனம் பெற்று,பதவி உயர்வு பெற்ற எவரும் தகுதி தேர்வு எழுதத் தேவையில்லை எனவும், அதற்குப் பின்பு நியமனம் பெற்றவர்கள் மற்றும் பதவி உயர்வு பெறுபவர்கள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் எனவும் தீர்ப்பு வழங்கியிருந்தது.*
*கல்வி உரிமைச் சட்டம் 2009ன் படி புதிதாக ஆசிரியராக நியமனம் பெறுவதற்கு மட்டுமே தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.பதவி உயர்வு பெற தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது இல்லை என்ற வாதத்தின் அடிப்படையில் தான் உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஒரு சிலரால் மேல்முறையீடு செய்யப்பட்டது. அவ்வாறு உடனடியாக உச்ச நீதிமன்றத்திற்குச் சென்றது தவறு என்ற கருத்தும் அன்றே சிலரால் எடுத்துக் கூறப்பட்டது. முடிந்தவரை உயர்நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு, மேல்முறையீட்டு மனு ஆகியவற்றைச் செய்திருக்க வேண்டும் என்பது சில மூத்த வழக்கறிஞர்களின் கருத்தாக இருந்தது. ஆனாலும் வழக்கு உச்ச நீதிமன்றத்திற்குச் சென்று விட்டதால் அந்த வழக்கில் தமிழ்நாடு அரசும் இணைய வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் உறுப்பினர்களான 100 ஆசிரியர்கள் சார்பிலும், டிட்டோஜாக் பேரமைப்பின் இணைப்புச் சங்கங்களின் உறுப்பினர்களான 100 ஆசிரியர்கள் சார்பிலும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர வேண்டிய நிலை ஏற்பட்டது. இவ்வாறு தனி நபர்களாலும் பல்வேறு சங்கங்களாலும் தொடரப்பட்ட 25க்கும் மேற்பட்ட வழக்குகளை ஒன்றாக இணைத்து விசாரணை செய்து 01.09.2025 அன்று வழங்கப்பட்ட தீர்ப்புத் தான் ஒட்டுமொத்த ஆசிரியர்களையும் நிலை குலைய வைத்த இந்த தீர்ப்பு.*
*இந்த வழக்கின் விசாரணையில் தமிழ்நாடு அரசு ஆசிரியர்களுக்கு ஆதரவாகவே வாதிட்டது.பதவி உயர்வுக்கு தகுதித் தேர்வு தேவையில்லை என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தது. ஆனால், ஒன்றிய அரசின் NCTE சார்பில் வாதாடிய வழக்கறிஞர்கள் ஆசிரியர் நியமனம்,பதவி உயர்வு ஆகிய இரண்டுக்கும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என வாதாடினார்கள் என்பதையும் இங்கே நாம் குறிப்பிட்டுக் கூற வேண்டும்.*
*உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் 55 வயதுக்கு உட்பட்ட, தற்போது பணியில் உள்ள ஆசிரியர்கள் அனைவரும் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் எனவும், அவ்வாறு தேர்ச்சி பெறவில்லை எனில் அவர்கள் பணியில் இருந்து நிரந்தரமாக விடுவிக்கப்பட வேண்டும் எனவும், அவர்கள் ஏற்கனவே ஆற்றிய பணிக் காலத்தைக் கணக்கிட்டு ஓய்வுக்காலப் பணப்பலன்களை வழங்க வேண்டும் எனவும் கூறியுள்ளது. இந்த வரிகள் மிகக் கடுமையானதாகப் பார்க்கப்படுகிறது.இதன் மூலம் ஆசிரியர்களின் பணி அனுபவம் முற்றிலுமாகப் புறந்தள்ளப்பட்டுள்ளது.எந்த ஒரு பணியிலும் அனுபவம் என்பது மிக மிக முக்கியமானது. அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் ஆற்றும் பணி மிகவும் நேர்த்தியாக இருக்கும். எனவே தான் பல தனியார் நிறுவனங்கள் பணி அனுபவத்திற்கே முன்னுரிமை அளிக்கின்றன. அதிலும் குறிப்பாக அனுபவம் வாய்ந்த ஆசிரியருடைய கற்பித்தல் என்பது, மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு மிகவும் பயன்படும். அனுபவம் வாய்ந்த ஒரு ஆசிரியர் மாணவர்களின் உளவியலைப் புரிந்து, அவர்களது கற்றல் நிலையை உணர்ந்து, தனது கற்பித்தல் திறனை பயன்படுத்துகிறார்.எனவே, அனுபவம் வாய்ந்த ஆசிரியருடைய கற்பித்தல் பணி என்பது சிறப்புக்குரியதாகப் பார்க்கப்படுகிறது.எனவே தான் தற்போதும் கூட தமிழ்நாட்டில் தலைமையாசிரியராகப் பதவி உயர்வு பெற குறைந்தது 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என்ற விதி நடைமுறையில் உள்ளது. ஆனால், தற்போது 30 ஆண்டுகளுக்கு மேல் பணி முடித்தவர்கள் கூட தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான் ஆசிரியராகவே தொடர முடியும் என்பது அவர்களது அளப்பரிய பணி அனுபவத்தை அலட்சியப்படுத்துவதாக உள்ளது. ஆசிரியர்களின் திறமையை அளவிட தகுதித் தேர்வு ஒன்றே அளவுகோல் என்று கூறுவது எவ்விதத்திலும் பொருத்தமானது அல்ல.*
*உச்ச நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து ஊடக விவாதங்களில் சிலர் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதுவதில் ஆசிரியர்களுக்கு என்ன சிரமம் இருக்கிறது? என்று கூட கேள்விகள் கேட்கிறார்கள். ஆசிரியர்களின் திறமையை எவரும் குறைத்து மதிப்பிட முடியாது. ஆசிரியர்கள் திறமையானவர்கள்; அறிவிச்சிறந்தவர்கள்.ஆனால், தேர்வு எழுதுவதற்கென்று ஒரு வயது இருக்கிறது. அந்த வயதைக் கடந்த ஆசிரியர்களைத் தேர்வு எழுதச் சொல்வது என்பது உளவியல் நெறிமுறைகளுக்கு மாறானது. உதாரணமாக தற்போது நீட் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மருத்துவ படிப்பில் சேர்க்கப்படுகிறார்கள்.இதற்கு முன்பு நீட் தேர்வு இல்லாத காலத்தில் 12ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவப் படிப்பில் சேர்ந்து தற்போது தலைசிறந்து விளங்கும் மருத்துவர்கள் இருக்கிறார்கள். இதில் அவர்களது பணி அனுபவம் என்பது முக்கியமானது. அப்படிப்பட்ட தலைசிறந்த மருத்துவர் தற்போது நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றால் தான் மருத்துவராக பணியாற்ற முடியும் என்று கூறினால் அது சரியாக இருக்குமா? 25 வயதில் இந்திய ஆட்சிப்பணித் தேர்வில் வெற்றி பெற்று 25,30 ஆண்டு காலமாக உயர் அலுவலராகப் பணியாற்றிக் கொண்டிருக்கும் ஒருவரை தற்போது தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று கூறினால் பொருத்தமாக இருக்குமா? இதேபோன்று நீதித்துறை உட்பட அனைத்து துறைகளிலும் தகுதித் தேர்வு என்று ஆரம்பித்தால் எத்தனை பேர் தேர்ச்சி பெறுவார்கள்? என்பதை நாம் எதார்த்தமாகச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.*
*அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றால் அவர்களைப் பணியை விட்டு நீக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பு மிகவும் ஆபத்தானது. இதே போன்ற தீர்ப்பு எதிர்காலத்தில் பிற துறைகளின் பணியாளர்களுக்கும் வராது என்று சொல்லி விட முடியாது. ஒரு சட்டமோ அல்லது அரசாணையோ அது பிறப்பிக்கப்பட்ட நாளிலிருந்து தான் நடைமுறைக்கு வரும்.இதுவரை அப்படித்தான் நடைமுறை இருந்துள்ளது. ஆனால்,ஒரு சட்டம் பிறப்பிக்கப்பட்ட தேதிக்கு 25 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே முன் தேதியிட்டு அது நடைமுறைக்கு வருகிறது என்று சொல்வது மிகவும் பொருத்தமற்றதாக உள்ளது. தமிழ்நாட்டில் இருந்து உருவான இந்த வழக்கு தற்போது உச்ச நீதிமன்றத் தீர்ப்பால் இந்தியா முழுமைக்குமான பிரச்சனையாக மாறியுள்ளது. ஆனால்,இந்தத் தீர்ப்பின் தாக்கம் மற்ற மாநிலங்களில் உள்ள ஆசிரியர்களால் இன்னும் பெரிய அளவில் உணரப்படவில்லை என்றே தெரிகிறது. அங்குள்ள மாநில அரசுகள் இந்தத் தீர்ப்பை அமல்படுத்தும் போது தான் அதன் பாதிப்பை அவர்கள் உணரக்கூடும். ஆனால், தமிழ்நாட்டில் தற்போது இது பற்றி எரிகிற பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.இந்தச் சூழலில் தமிழ்நாட்டு ஆசிரியர்களை பதட்டமும், பரபரப்பும் தொற்றிக் கொண்டுள்ளது.*
*தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் "உச்சநீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக தமிழ்நாடு அரசு ஆசிரியர்களுக்கு ஆதரவாக நிற்கும் என்றும், சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்" என்றும் தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.இன்றைய சூழலில் ஆறுதல் தரக்கூடியது. தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி உள்ளிட்ட டிட்டோஜாக் பேரமைப்பின் இணைப்புச் சங்கங்கள் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு தொடர்பாக தொடர்ந்து சட்ட ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன. இத்தீர்ப்பை எவ்வாறு சட்டப்பூர்வமாக அணுகுவது என்பதையும், மேல்முறையீடு, மறுசீராய்வு மனு தாக்கல் செய்வது உள்ளிட்ட சட்டப்பூர்வ நடவடிக்கைகள் தொடர்பாக மூத்த வழக்கறிஞர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றன. அதையும் தாண்டி தமிழ்நாடு அரசு ஆசிரியர்களின் பணிப் பாதுகாப்பை உறுதி செய்திட அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் டிட்டோஜாக் பேரமைப்பு தமிழ்நாடு அரசிடம் வலியுறுத்த உள்ளது.எனவே, ஆசிரியர்கள் பதட்டமான மனநிலையை முற்றிலும் தவிர்க்க வேண்டும். வழக்கம்போல் கற்பித்தல் பணியைச் சிறப்பாக ஆற்ற வேண்டும்.*
*நம்முடைய கணக்கீட்டின்படி உச்சநீதிமன்றத் தீர்ப்பை பின்பற்றி தகுதித் தேர்வு நடத்தப்பட்டால் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ஆசிரியர்களுக்கு மேல் தேர்வு எழுத வேண்டிய நிலை ஏற்படும். ஒருவேளை அவ்வாறு தேர்வு நடத்தப்பட்டால் பணியில் உள்ள ஆசிரியர்களுக்கென சிறப்புத் தகுதித் தேர்வு(Special TET)தான் நடத்தப்படும். அதற்குரிய அறிவிப்புகள், அதற்கான பாடத்திட்டங்கள், அதற்கான பயிற்சி ஆகியவற்றை தமிழ்நாடு அரசு வழங்கிட வேண்டும்; நிச்சயம் வழங்கிடும். இதற்குப் பல முன்னுதாரணங்கள் இருக்கின்றன. எனவே, ஆசிரியர்கள் பதட்டமோ, பரபரப்போ அடையத் தேவையில்லை. நிச்சயமாக ஓய்வு பெறும் வரை அனைவரும் ஆசிரியர்களாகப் பணியாற்றுவோம்.*
*அடுத்து நடைபெறவுள்ள TET தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டுமா? வேண்டாமா? என்ற தேவையில்லாதகுழப்பம் பல ஆசிரியர்களுக்கு உள்ளது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள TET தேர்வை எழுதுவதற்கு விருப்பமுள்ளவர்கள் எழுதலாம். அது அவர்களுடைய சொந்த விருப்பம். ஆனால், ஒருவேளை பணியில் உள்ளவர்களுக்குத் தகுதி தேர்வு நடத்தப்பட்டால் அது "சிறப்புத் தகுதித் தேர்வாக (Special TET) நடைபெறும். அதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அதை நாம் அரசிடம் நிச்சயமாக வலியுறுத்துவோம். அனைத்து ஆசிரியர்களுக்கும் பணி பாதுகாப்பு வழங்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது.*
*இந்நிலையில் அடுத்து நடைபெறும் தகுதித் தேர்வு எழுதுவது, அதற்கு முன் அனுமதி பெறுவது தொடர்பாக ஆர்வ மிகுதியில் சில சங்கப் பொறுப்பாளர்களும்,சில வட்டாரக்கல்வி அலுவலர்களும் பல்வேறு செய்திகளை தொடர்ச்சியாக வெளியிட்டு வருவது ஏற்புடையதாக இல்லை.*
*உச்ச நீதிமன்றத் தீர்ப்பு தொடர்பாக தமிழ்நாடு அரசு தற்போது சட்ட ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.அவ்வாறு சட்ட ஆலோசனை மேற்கொண்டு அடுத்த கட்ட நகர்வுகள் தொடர்பாக தமிழ்நாடு அரசு எவ்வித அறிவிப்பும் இதுவரை வெளியிடாத நிலையில் ஆர்வக்கோளாறில் சில சங்கப் பொறுப்பாளர்களே செயல்படுவது தவறானதாகும். சங்கத்தின் மாநில தலைமை பல்வேறு சட்ட நுணுக்கங்களை ஆராய்ந்து தெளிவான ஒரு அறிக்கை கொடுப்பதற்கு முன்பே கீழ் அமைப்புகளின் பொறுப்பாளர்கள் பிரச்சனையின் நுணுக்கத்தை, அதன் தீவிரத்தை உணராமல் பொதுவெளியில் கருத்துக்களை பகிர்வது என்பது எவ்விதத்திலும் சரியான நடவடிக்கை அல்ல.அது பதட்ட நிலையில் உள்ள ஆசிரியர்களை மேலும் குழப்பவே உதவும்.எனவே, ஆசிரியப் பெருமக்கள் எவ்வித மன உளைச்சலுக்கும் ஆளாகாமல் தெளிந்த உள்ளத்தோடும், மகிழ்ச்சியோடும் கல்விப் பணியை ஆற்ற வேண்டும்.உச்ச நீதிமன்றத் தீர்ப்பு விவகாரத்தில் தமிழ்நாடு அரசு ஒரு முடிவை எடுப்பதற்கு முன்னால் நாம் முந்திச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஆசிரியர் தகுதித் தேர்வு விஷயத்தில் தமிழ்நாடு அரசு நமக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் வாதிட்டது. எனவே, தற்போது நாம் தமிழ்நாடு அரசின் பின்னால் நிற்போம். அடுத்த கட்ட நடவடிக்கையை அரசு முடிவு செய்யும்.*
********************
*தோழமையுடன்*
*ச.மயில்*
*பொதுச் செயலாளர்* *தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.