இந்திய மகளிர் கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்றது எப்படி?
உலகக் கோப்பையை வென்றது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி
பெண்கள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை 52 ரன்களில் வீழ்த்தி உலக சாம்பியன் ஆனது இந்திய அணி.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இரண்டு அணிகளுமே அரையிறுதியில் களமிறக்கிய அதே பிளேயிங் லெவனையே இந்தப் போட்டிக்கும் தேர்வு செய்தன. மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை.
தொடக்க வீராங்கனைகள் சிறப்பான ஆட்டம்
முதலில் ஆட்டத்தை மிகவும் நிதானமாகவே எதிர்கொண்டார் ஸ்மிரிதி மந்தனா. மரிசான் காப் வீசிய முதல் ஓவரை அவர் மெய்டன் ஆக்கினார். அதேசமயம் எதிர்த்திசையில் ஆடிய ஷஃபாலி வர்மா, 4 ரன்கள் அடித்துத்தான் ரன் கணக்கையே தொடங்கினார்.
முதல் 3 ஓவர்களில் இந்திய அணி 13 ரன்கள் எடுத்திருந்தது. நான்காவது ஓவரில் இருந்து இருவருமே அதிரடியைக் கையில் எடுத்தார்கள். அதனால் ஓவருக்கு குறைந்தபட்சம் ஒரு பௌண்டரியாவது அடிக்கப்பட்டது. இதன்மூலம் 6.3 ஓவர்களிலேயே 50 ரன்களைக் கடந்தது இந்தியா.
இருவரும் தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள் என்றாலும், அந்த ஆட்டத்தில் கவனமும் இருந்தது. அதனால் தென்னாப்பிரிக்க பந்து வீச்சாளர்களால் விக்கெட் எடுக்க முடியவில்லை. அந்த அணியின் கேப்டன் வோல்ஃபார்ட் 18வது ஓவரிலேயே ஆறாவது பௌலரைப் பயன்படுத்தவேண்டிய நிலை ஏற்பட்டது.
அப்படி ஆறாவது பௌலராக பந்துவீசிய டிரையான் தான் அந்த அணிக்கு முதல் விக்கெட்டை பெற்றுக் கொடுத்தார். அவர் பந்துவீச்சில் 43 ரன்கள் எடுத்திருந்த ஸ்மிரிதி மந்தனா கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
சதத்தைத் தவறவிட்ட ஷஃபாலி வர்மா
மறுபுறம் உறுதியோடு விளையாடிய ஷஃபாலி வர்மா அரைசதம் அடித்தார். ஒருநாள் போட்டிகளில் மூன்று ஆண்டுகள் கழித்து அவர் அடிக்கும் முதல் அரைதம் இது.
ஆரம்பம் முதலே நம்பிக்கையை வெளிப்படுத்திய அவர், ஸ்பின், வேகப்பந்துவீச்சு இரண்டையுமே நன்றாக எதிர்கொண்டார். வழக்கமாக நிறைய பந்துகளை தூக்கி அடிக்கும் ஷஃபாலி, இந்தப் போட்டியில் அப்படி ஆடாமல் நிறைய பந்துகளைத் தரையோடு அடித்தார். அதனால் சரியான வேகத்தில் அவரால் ரன் எடுக்க முடிந்தது, நீண்ட இன்னிங்ஸும் விளையாட முடிந்தது.
49 பந்துகளில் அரைசதம் கடந்த ஷஃபாலி, தன் ஆட்டத்தை மாற்றாமல் அப்படியே தொடர்ந்தார். நன்கு ஆடிக்கொண்டிருந்த அவர், எப்படியும் சதம் அடித்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 87 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அயபோங்கா ககா பந்துவீச்சில் மிட் ஆஃப் திசையில் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார்.
அவர் ஆட்டமிழந்த சில நேரத்திலேயே ஜெமிமா ரோட்ரிக்ஸும் அவுட் ஆனார். அவர் 37 பந்துகளில் 24 ரன்கள் எடுத்தார். அடுத்தடுத்து வீழ்ந்த விக்கெட்டுகள் இந்திய அணிக்குப் பின்னடைவாக அமைந்தது.
தீப்தியின் அதிரடி
அடுத்தடுத்த விக்கெட்டுகளுக்குப் பிறகு ஜோடி சேர்ந்த ஹர்மன்ப்ரீத் கவுர், தீப்தி ஷர்மா இருவரும் நிதானமாக ஒரு பார்ட்னர்ஷிப்பைக் கட்டமைக்கத் தொடங்கினார்கள்.
ஹர்மன்ப்ரீத் கௌர் மிகவும் பொறுமையாக ஆட்டத்தைக் கையாள, அரையிறுதியைப் போல் ஆரம்பம் முதலே அதிரடி காட்டினார் தீப்தி ஷர்மா. லெக் சைடில் அவர் பெரிய ஷாட்கள் அடித்ததால் ரன்ரேட் 5.6க்கும் குறையாமல் இருந்தது.
இந்த பார்ட்னர்ஷிப் 50 ரன்களைக் கடந்திருந்த நேரத்தில் மலாபா பந்துவீச்சில் போல்டானார் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர். அவர் 29 பந்துகளில் 20 ரன்கள் அடித்தார்.
ஹர்மன் அவுட் ஆகியிருந்தாலும், தீப்தி ஷர்மா முன்நின்று சிறப்பான ஆட்டத்தைத் தொடர்ந்தார். தொடர்ச்சியாக சிங்கிள், டபுள் என்று எடுத்துக்கொண்டே இருந்தவர், 53 பந்துகளில் அரைசதம் கடந்தார்.
கடைசி கட்டத்தில் ரிச்சா கோஷ் தன் பங்குக்கு அதிரடி காட்டினார். அவர் 24 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து 49வது ஓவரில் ககா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
இந்தியா 300 ரன்களை எட்ட கடைசி ஓவரில் 8 ரன்கள் தேவைப்பட்டிருந்த நிலையில் தீப்தி மற்றும் ராதா யாதவ் இருவராலும் 6 ரன்களே எடுக்க முடிந்தது. அதனால் இந்திய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 298 ரன்கள் எடுத்தது. தீப்தி ஷர்மா 58 ரன்கள் எடுத்தார்.
பந்துவீச்சிலும் கைகொடுத்த ஷஃபாலி
299 என்ற இலக்கை சேஸ் செய்த தென்னாப்பிரிக்க அணிக்கு கேப்டன் வோல்ஃபார்ட், பிரிட்ஸ் இருவரும் நிதானமான தொடக்கத்தைக் கொடுத்தனர். முதல் 5 ஓவர்களில் அவர்கள் 18 ரன்களே அடித்திருந்தனர். அதன்பிறகு அவர்களின் வேகம் சற்று கூடியது.
அடுத்த 4 ஓவர்களிலும் குறைந்தபட்சம் 1 பௌண்டரியாவது வர, 8.4 ஓவர்களில் 50 ரன்களைக் கடந்தது தென்னாப்பிரிக்கா.
முதல் விக்கெட்டைத் தேடிக்கொண்டிருந்த இந்திய அணிக்கு அமஞ்சோத் கவுர் செய்த ரன் அவுட் மூலம் அந்த தேடல் முடிவுக்கு வந்தது. மிட் ஆன் திசையில் இருந்து அவர் அடித்த டைரக்ட் ஹிட் மூலம் பிரிட்ஸ் (23 ரன்கள்) ஆட்டமிழந்தார்.
பிரிட்ஸ் அவுட்டான ஒருசில ஓவர்களிலேயே ஶ்ரீசரணியின் பந்துவீச்சில் பாஷ் டக் அவுட் ஆகி வெளியேறினார்.
மூன்றாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த வோல்ஃபார்ட், சுனே லீஸ் ஜோடி இந்திய பந்துவீச்சை சிறப்பாகக் கையாண்டது. இருவருமே அதிரடியாக ஆடி ரன் விகிதம் குறையாமலும் பார்த்துக்கொண்டனர்.
அந்த பார்ட்னர்ஷிப்பை உடைப்பதற்கான ஷஃபாலி வர்மாவை பந்துவீச அழைத்தார் ஹர்மன்ப்ரீத் கவுர். எதிர்பார்த்ததைப் போலவே இரண்டாவது பந்திலேயே சுனே லீஸின் விக்கெட்டை அவர் கைப்பற்றினார். ஆனால், ஷஃபாலியின் வேட்டை அதோடு நிற்கவில்லை. அடுத்த ஓவரின் முதல் பந்தில் அனுபவ வீராங்கனையான மரிசான் காப்பின் விக்கெட்டையும் வீழ்த்தி தென்னாப்பிரிக்காவுக்கு பின்னடைவை ஏற்படுத்தினார்.
வேகமாக ரன் எடுக்க தடுமாறிக்கொண்டிருந்த ஜாஃப்டாவை தீப்தி ஷர்மா வெளியேற்றினார்.
கேப்டன் வோல்ஃபார்ட் தனி ஆளாக போராடிக்கொண்டிருந்தார்.
போராடிய வோல்ஃபார்ட், ஆட்டத்தை மாற்றிய தீப்தி
ஒருபக்கம் விக்கெட்டுகள் வீழ்ந்துகொண்டே இருந்தாலும் தென்னாப்பிரிக்க கேப்டன் லாரா வோல்ஃபார்ட் தனியாகப் போராடினார். ரன் விகிதம் குறையாத வகையில் சீரான இடைவெளிகளில் பௌண்டரிகளை அடித்துக்கொண்டே இருந்தார்.
அவருக்கு சுனே லீஸுக்குப் பிறகு ஆனரி டெர்க்சன் (35 ரன்கள்) மட்டும் கொஞ்சம் ஆதரவு கொடுத்தார்.
தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வோல்ஃபார்ட், 96 பந்துகளில் சதமடித்தார். இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியிலும் அவர் சதமடித்திருந்தார். தீப்தி ஷர்மா பந்தை தூக்கி அடித்த அவர் அமஞ்சோத் கவுரிடம் கேட்சாகி ஆட்டமிழந்தார்.
மிகப் பெரிய விக்கெட்டை வீழ்த்திய தீப்தி அதே ஓவரில் இன்னொரு முக்கிய விக்கெட்டான டிரையானையும் வெளியேற்றினார்.
இந்தியா உலக சாம்பியன்
இந்திய அணியின் கை ஓரளவு ஓங்கியிருந்த நிலையில், 44வது ஓவரில் இந்திய அணி 2 கேட்களைத் தவறவிட்டது. குறிப்பாக நெடீன் டி கிளார்க் கேட்சை ஜெமிமா தவறவிட்டார்.
அடுத்த ஓவரிலேயே டி கிளார் பௌண்டரிகள் அடிக்க, 14 ரன்கள் எடுக்கப்பட்டது.
இருந்தாலும் 45வது ஓவரின் கடைசிப் பந்தில் ககா ரன் அவுட் ஆனார்.
ஏற்கெனவே லீக் சுற்றில் இந்திய அணியை கடைசி கட்டத்தில் வீழ்த்தியிருந்த டி கிளார்க் மறுபடியும் இந்திய அணிக்கு சவாலாகத் திகழ்ந்தார். இருந்தாலும் அவரையும் தீப்தி ஷர்மா வெளியேற்ற தென்னாப்பிரிக்காவின் இன்னிங்ஸ் 246 ரன்களுக்கு முடிவுக்கு வந்தது. தீப்தி ஷர்மா 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதன்மூலம் 52 ரன்களில் வெற்றி பெற்று இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.
இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கூறியது
ICC மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தென் ஆப்ரிக்காவை வென்ற இந்திய அணி புதிய உலக சாம்பியனாக உருவெடுத்துள்ளது.
இந்த வெற்றிக்கு ரசிகர்கள், பிசிசிஐ, தேர்வாளர்கள் மற்றும் அணியின் சக வீராங்கனைகளுக்கு இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் நன்றி தெரிவித்தார்.
"ரசிகர்களுக்கு நான் நன்றி கூறுகிறேன். எங்களை ஆதரித்ததற்கு நன்றி. இந்த வெற்றிக்கான பெருமை பிசிசிஐ, தேர்வாளர்கள் மற்றும் எங்களை ஆதரித்த அனைவருக்கும் சொந்தமானது" என்று அவர் கூறினார்.
இந்த போட்டியில், இந்திய அணி லீக் கட்டத்தில் தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் தோல்வியடைந்தது. 'இது மகளிர் உலகக் கோப்பை வரலாற்றில் மிகப்பெரிய மீள் வருகையாகும். ஏனென்றால் இந்தியா தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் தோல்வியடைந்தது. இதுபோன்ற ஒரு சந்தர்ப்பத்தில் நீங்கள் அணிக்கு என்ன சொன்னீர்கள்?' என்று கேட்டபோது, ஹர்மன்ப்ரீத், "எங்களுக்கு எங்கள் மீது நம்பிக்கை இருந்தது. நாங்கள் தொடர்ந்து மூன்று போட்டிகளில் தோற்றோம், ஆனால் இந்த அணிக்கு ஏதாவது சிறப்பு செய்யக்கூடிய திறன் உள்ளது என்பதை நாங்கள் அறிந்தோம். அணியின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் இதற்குப் பாராட்டுத் தெரிவிக்க வேண்டும்." என்றார்.
"அவர்கள் நேர்மறையாக இருந்தனர், அடுத்து வரவிருந்த போட்டிகளில் நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். அவர்கள் இரவும் பகலும் உழைத்தனர். இந்த அணி இந்த வெற்றிக்கு தகுதியானது." என்று அவர் மேலும் கூறினார்.
Actual Price: Rs. 3490
Offer Price : Rs. 949
Benefit : Rs. 2541
Amazon வலைதள முகவரி இணைப்பு:




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.