பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீட்க உயிரையும் தியாகம் செய்யத் தயார் - CPS ஒழிப்பு இயக்கம்

 


பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீட்க உயிரையும் தியாகம் செய்யத் தயார் - CPS ஒழிப்பு இயக்கம் 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



CPS ஒழிப்பு இயக்கம்

மாநில மையம்

------------------------------------------------------------


பெறுநர்         நாள்: 10.01.2026

ஆசிரியர் அவர்கள்.


…………………………. நாளிதழ்/ஊடகம்


மதிப்பிற்குரிய ஐயா,


வணக்கம்.


எங்களது அமைப்பின் சார்பாக வழங்கப்படும் கீழ்காணும் பத்திரிக்கை செய்தியினை தங்களது நாளிதழ்/ஊடகத்தில் பிரசுரம்/ஒளிபரப்பு செய்ய வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.


-----------------------------------------------------------

      *_பத்திரிகை செய்தி_*

------------------------------------------------------------

CPS ஒழிப்பு இயக்கத்தின் மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர்கள் சு.ஜெயராஜராஜேஸ்வரன், பி.பிரெடெரிக் எங்கெல்ஸ் மற்றும் மு.செல்வக்குமார் ஆகியோர் கூட்டாக வெளியிட்ட பத்திரிகை செய்தி.


**************************************

பச்சை துரோகம் இழைத்துள்ள திமுக அரசு – அரசு ஊழியர், ஆசிரியர்களின் பணம் ரூபாய் ஒரு லட்சம் கோடி கபளீகரம் – CPS ஒழிப்பு இயக்கம் கடும் கண்டனம்

***************************************

திமுக-வின் 2021 சட்டமன்ற தேர்தல் வாக்குறுதி எண். 309-ல் புதிய ஓய்வூதியத் திட்டம் இரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமுல்படுத்தப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. தற்போது தேர்தல் வாக்குறுதிக்கு முற்றிலும் மாறாக அரசாணை வெளியிட்டு பங்களிப்பு ஓய்வூதியத்திட்டத்தையே மீண்டும் அறிவித்து துரோகம் இழைத்திருக்கிறது.


தமிழக அரசு. மாதம் தோறும் ஊழியர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்கின்ற ரூபாய் ஒரு லட்சம் கோடியை இந்த அரசாணை மூலம் கபளீகரம் செய்திருக்கிறது தமிழக அரசு.


ஓய்வு பெறும் போது ஊழியர்களிடம் பிடித்தம் செய்யும் தொகையை தரமறுத்திருக்கிறது இந்த அரசாணை எண்.7. இது அரசு ஊழியர், ஆசிரியர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பையும், கோபத்தையும் உருவாக்கி இருக்கிறது.


புதிய ஓய்வூதியத் திட்டத்தை ஒழிப்பேன் என வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்த திமுக அரசு, தனது தேர்தல் வாக்குறுதிக்கு நேர் எதிராக இந்த அறிவிப்பை செய்திருக்கிறது. அதுவும் 01.01.2026-க்கு முன்னர் பணியில் சேர்ந்தவர்களுக்கு இத்திட்டம் விருப்பத் தேர்வு எனவும், 01.01.2026-க்கு பின்னர் கட்டாயம் எனவும் தெரிவித்துள்ளது.


மேலும், தற்போது CPS திட்டத்தில் உள்ளவர்கள் தனது விருப்பத்தை ஓய்வு பெறுவதற்கு முன்னர் தெரிவித்தால் போதும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதன் மூலம் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் நிலைக்கு அரசு ஊழியர், ஆசிரியர்கள் வலுக்கட்டாயமாக தள்ளப்பட்டுள்ளனர்.


தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ள இந்த அரசாணை CPS-யை ஒழிக்க வேண்டும் என போராடி வரும் அரசு ஊழியர், ஆசிரியர்கள் வாயாலேயே CPS-யே எங்களுக்கு போதும் என சொல்ல வைக்கும் நடவடிக்கையாகவும், நியாயமான போராட்டங்களை முடக்க நினைக்கும் செயலாகவுமே நாங்கள் பார்க்கிறோம்.


உண்மையில் சொல்வதென்றால் அரசு ஊழியர், ஆசிரியர்களின் சேமிப்பான ரூபாய் ஒரு லட்சம் கோடியை கபளீகரம் செய்யப் போவதை உறுதி செய்துள்ளது இந்த அரசாணை. 


இது அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு ஆளும் திமுக அரசு இழைத்திருக்கும் பச்சை துரோகம். இந்த அரசாணை எண்.7 CPS திட்டத்தில் பணிபுரியும்  அரசு ஊழியர், ஆசிரியர் மத்தியில் நீரு பூத்த நெருப்பாக பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் இதற்கான விலையை, விளைவை ஆட்சியாளர்கள் எதிர்கொள்ள நேரிடும்.


எனவே, தனக்கு துதிபாடும் அமைப்புகளின் பெரும்பாலான தலைவர்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தில் நீடிக்கும் நிலையில் அவர்களின் ஆதரவு என்பது ஒட்டு மொத்த அரசு ஊழியர், ஆசிரியர்களின் ஆதரவு எனும் மாயையிலிருந்து மாண்புமிகு முதல்வர் அவர்கள் வெளிவந்து, அவர்களின் 2021 சட்ட மன்றத் தேர்தல் வாக்குறுதி எண்.309-ன்படி பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். 


அவ்வாறு காலதாமதம் ஏற்படும் சூழலில் வருகின்ற 03.02.2026 முதல் அரசு ஊழியர், ஆசிரியர்களை இணைத்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கோரி காலவரையற்ற வேலை நிறுத்தத்திற்குச் செல்ல உள்ளோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். 


இந்திய சுதந்திரப் போரில் நாட்டிற்காக தன் இன்னுயிரை ஈந்த தியாகிகள் திருப்பூர் குமரன், வாஞ்சிநாதன், குதிராம்போஸ்,  பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் போல், தமிழகத்தில்  1960-களின் துவக்கத்தில் மொழிப் போரில் தன் இன்னுயிரை ஈந்த தியாகிகள்  வைரமாலி சண்முகம், கோவை தண்டபாணி, மயிலாடுதுறை சாரங்கபாணி, மற்றும் அய்யம்பாளையம் வீரப்பன் ஆகியோரைப் போல், தமிழ் ஈழத்திற்காகத் தன் உயிரைத் தியாகம் செய்த முத்துக்குமாரைப் போல், நிரபராதியை விடுதலை செய் என்ற முழக்கத்தோடு தீக்குளித்து மாண்ட சகோதரி செங்கொடியைப் போல், சமீபத்தில் விவசாய வேளாண் சட்டத்திற்கு எதிராக களமாடி 800 உயிர்களை தியாகம் செய்த விவசாயப் போராளிகளைப் போல், தமிழக அரசு ஊழியர் ஆசிரியர்களின் எதிர்கால வாழ்வை இருட்டாக்கி, வாழ்நாள் சேமிப்பை கபளீகரம் செய்ய நினைக்கும் தமிழக அரசின் தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்திற்கான அரசாணையை இரத்து செய்து, எதிர்கால தலைமுறையின் சமூகபாதுகாப்புத் திட்டமான பழைய ஓய்வூதியத்தை மீட்டெடுக்க எங்கள் உயிரையும் தியாகம் செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம் என்பதையும் சுட்டிக்காட்ட விழைகிறோம்.


நன்மதிப்புகளுடன்


மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர்கள்

மாநில மையம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.