ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்கும் போது, சுழலில் சிக்கிய 13 வயது சிறுமி உயிரிழந்த நிலையில் மீட்பு
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பள்ளி மாணவி அடித்துச் செல்லப்பட்ட நிலையில் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே ஜருகு பகுதியைச் சேர்ந்த 13 வயது மாணவி அவிநிஷா, தர்மபுரியில் உள்ள தனியார் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வந்தார். விடுமுறையை முன்னிட்டு உறவினர்களுடன் ஒகேனக்கல் சுற்றுலா வந்த மாணவி, மெயின் அருவி அருகே காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது, திடீரென தண்ணீரின் வேகம் அதிகரித்தது.
இதனால் அந்த மாணவி நிலைதடுமாறி ஆழமான பகுதிக்கு அடித்துச் செல்லப்பட்டார்.
அங்கிருந்தவர்கள் மாணவியை காப்பாற்ற முயன்று முடியாமல் போனதால், உடனடியாக இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஒகேனக்கல் போலீசார் மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மாணவியை தீவிரமாக தேடத் தொடங்கினர்.
ஆற்றின் ஆழமான பகுதிகள் மற்றும் கரையோரங்களில் தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், முதல்நாள் மாணவி மீட்கப்படவில்லை.
இந்நிலையில் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்கும் போது, சுழலில் சிக்கி தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்ட 13 வயது சிறுமி, 10 கி.மீ தொலைவில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். 2வது நாளாக நடந்த தேடுதலில் உடலை தீயணைப்பு படையினர் கண்டெடுத்தனர்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.