RAC டிக்கெட்டை காத்திருப்புப் பட்டியலுக்கு மாற்றி ரத்து செய்த ரயில்வே : ரூ.25,000 இழப்பீடு வழங்க உத்தரவு



 ஆர்ஏசி டிக்கெட்டை காத்திருப்புப் பட்டியலுக்கு மாற்றி ரத்து செய்த ரயில்வே: ரூ.25,000 இழப்பீடு வழங்க உத்தரவு


ஆர்ஏசி 44 நிலையில் இருந்த டிக்கெட், காத்திருப்புப் பட்டியல் 1 ஆக மாற்றப்பட்டு ரத்து செய்யப்பட்டதால், பயணிக்கு ரூ.25,000 இழப்பீடு வழங்க மலப்புரம் மாவட்ட நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


மும்பையில் உள்ள கே.சி. சட்டக் கல்லூரியில் சட்டம் பயிலும் கேரளாவைச் சேர்ந்த யதுகிருஷ்ணன் சி., அவசரத் தேவைக்காக கேரளா செல்ல 16345 நேத்ராவதி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஐஆர்சிடிசி மூலம் முன்பதிவு செய்தார். லோக்மான்ய திலக் முனையத்தில் இருந்து காயம்குளம் சந்திப்பு வரை பயணம் செய்யத் திட்டமிட்டிருந்தார்.


தொடக்கத்தில் காத்திருப்புப் பட்டியல் 77 ஆக இருந்த அவரது டிக்கெட், பின்னர் ஆர்ஏசி 44 ஆக மாறியது. ஆனால், முன்பதிவுப் பட்டியல் தயாரிக்கப்பட்ட பிறகு, மீண்டும் காத்திருப்புப் பட்டியல் 1 ஆக மாற்றப்பட்டு, ரயில்வே நிர்வாகத்தால் தானாகவே ரத்து செய்யப்பட்டது.


முதல் டிக்கெட்டுக்கு ஜிஎஸ்டி உள்பட ரூ.1,819 கட்டணம் செலுத்தியிருந்தார். டிக்கெட் ரத்தானதைத் தொடர்ந்து, ரூ.65 கிளர்கேஜ் கட்டணம் பிடித்தம் செய்யப்பட்டு, ரூ.1,754 மட்டுமே திரும்ப வழங்கப்பட்டது. இதனால், செப்டம்பர் 9, 2024 அன்று அதே ரயிலில் பயணம் செய்ய புதிய நடப்பு டிக்கெட்டை ரூ.2,339 செலுத்தி வாங்கினார்.


தனது டிக்கெட்டைத் தானாக ரத்து செய்யவில்லை என்றும், டிக்கெட் நிலை மாற்றம் மற்றும் ரத்து குறித்து முன்னறிவிப்பு எதுவும் வரவில்லை என்றும் கூறி அவர் நுகர்வோர் ஆணையத்தை அணுகினார்.


> RAC டிக்கெட் ரத்தா? : 


 ரயில்வே தரப்பு விளக்கம்


செயல்பாட்டுத் தேவைக்காக ரயிலில் இருந்த 3ஏ பெட்டிக்குப் பதிலாக 3இ பெட்டி மாற்றப்பட்டதால், உறுதி செய்யப்பட்ட பயணிகளின் இருக்கைகள் மாற்றி அமைக்கப்பட்டதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்தது. RAC நிலை தற்காலிகமானது என்றும், அது உறுதியான இருக்கைக்கு உத்தரவாதம் அளிக்காது என்றும் வாதிட்டது.


இந்த விவகாரம் ரயில்வே உரிமை கோரல் தீர்ப்பாயத்தின் வரம்புக்குள் வருவதால், நுகர்வோர் ஆணையத்தின் அதிகார வரம்பையும் ரயில்வே கேள்விக்குள்ளாக்கியது.


இதற்கிடையே, இணையவழி முன்பதிவுத் தளத்தை மட்டுமே தாங்கள் வழங்குவதாகவும், இருக்கை ஒதுக்கீடு, முன்பதிவுப் பட்டியல் தயாரிப்பு, டிக்கெட் ரத்து ஆகியவை ரயில்வே கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் ஐஆர்சிடிசி விளக்கம் அளித்தது.


நுகர்வோர் ஆணையத்தின் உத்தரவு


பயணியின் டிக்கெட்டுகள், மின்னஞ்சல் கடிதப் போக்குவரத்துகள் மற்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட பதில்களை ஆணையம் ஆய்வு செய்தது.


ஆர்ஏசி 44 நிலையை காத்திருப்புப் பட்டியல் 1 ஆக மாற்ற அனுமதிக்கும் குறிப்பிட்ட ரயில்வே கொள்கை எதுவும் இல்லை என்பதைத் தகவல் அறியும் உரிமைச் சட்டப் பதில்கள் காட்டின. மேலும், பெட்டி மாற்றம் மற்றும் டிக்கெட் ரத்து அவசியமானதற்கான காரணங்களையும் ரயில்வே நிரூபிக்கவில்லை.


டிக்கெட் ரத்து குறித்து முன்னறிவிப்பு வழங்காதது, காரணமின்றி டிக்கெட் நிலையை மாற்றியது, தானாக ரத்து செய்தது மற்றும் கட்டணம் பிடித்தம் செய்தது ஆகியவை சேவைக் குறைபாடு மற்றும் நியாயமற்ற வர்த்தக நடைமுறை என ஆணையம் தீர்ப்பளித்தது.


இருக்கை ஒதுக்கீடு மற்றும் டிக்கெட் ரத்து செய்வதில் IRCTCக்கு நேரடிக் கட்டுப்பாடு இல்லை என்பதால், அந்த நிறுவனத்தை வழக்கிலிருந்து ஆணையம் விடுவித்தது.


மன உளைச்சல் மற்றும் உடல் ரீதியான சிரமங்களுக்கு ரூ.20,000 இழப்பீடும், வழக்குச் செலவாக ரூ.5,000-ம் சேர்த்து மொத்தம் ரூ.25,000-ஐ யதுகிருஷ்ணனுக்கு வழங்குமாறு மத்திய ரயில்வேயின் கூடுதல் பொது மேலாளருக்கு உத்தரவிடப்பட்டது.


தலைவர் மோகன்தாசன் கே. மற்றும் உறுப்பினர்கள் பிரீத்தி சிவராமன் சி., முகமது இஸ்மாயில் சி.வி. ஆகியோர் இந்த உத்தரவைப் பிறப்பித்தனர். 45 நாட்களுக்குள் இழப்பீட்டை வழங்க வேண்டும் என்றும், தவறினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாளிலிருந்து ஆண்டுக்கு 9 சதவீத வட்டி செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.