ஆசிரியர் தகுதி தேர்வும், பாரத ஸ்டேட் வங்கி கிளார்க் பணியிடங்களுக்கான
தேர்வும் அக்., 14ல் நடப்பதால், தேர்வு மையங்கள் ஒதுக்குவதில் சிக்கல்
ஏற்பட்டுள்ளது. டி.இ.டி., தேர்வு அக்.,3ல் நடப்பதாக முதலில்
அறிவிக்கப்பட்டது. தற்போது பி.எட்., படிப்பு முடித்தவர்களுக்கும்
வாய்ப்பளித்து, இந்த தேர்வு அக்., 14க்கு தள்ளி வைக்கப்பட்டது. அதே நாளில்,
பாரத ஸ்டேட் வங்கி தேர்வும் நடக்கிறது. வங்கி தேர்வு முன்பே
அறிவிக்கப்பட்டு, அதற்காக பள்ளி, கல்லூரிகள் தேர்வு மையங்களுக்கு
ஒதுக்கப்பட்டன. இதற்கிடையில் தான், டி.இ.டி., தேர்வு தள்ளி வைக்கப்பட்டது.
இத்தேர்வுக்கு பள்ளி, கல்லூரிகளில் மையங்கள் ஒதுக்கும் பணியில்
ஈடுபட்டபோது, வங்கி தேர்வுக்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்டது தெரிந்து கல்வி
துறையினர் அதிர்ச்சியடைந்தனர். மதுரை கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது:
அனைத்து மாவட்டங்களிலும் இப்பிரச்னை உள்ளது. வங்கி தேர்வு மையங்கள்,
பெரும்பாலும் நகர் பகுதிகளில் தான் ஒதுக்கப்பட்டுள்ளன. டி.இ.டி.,
தேர்வுக்கு, கிராம பகுதி பள்ளி, கல்லூரிகளிலும் மையங்கள்
ஒதுக்கப்படும்.மதுரையில் மேலூர், உசிலம்பட்டி, திருமங்கலம் போன்ற
பகுதிகளிலும் மையங்கள் ஒதுக்கப்படும். நகர்களில் மட்டும் மையங்கள்
ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்,
என்றார்.