கட்டாய கல்வி உரிமை சட்டம் குறித்து ஆசிரியர்கள், தலைமையாசிரியர்களுக்கு
இன்று முதல் செப்.29 வரை பயிற்சி வழங்கப்படவுள்ளது. தமிழ்நாடு ஆசிரியர்
கல்வி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில், கட்டாய கல்வி உரிமை சட்டம் குறித்து
ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. சட்டம், அரசாணைகள், மற்றும்
வழிகாட்டி விதிமுறைகள் சார்ந்த பயிற்சி வழங்கப்படவுள்ளது. இன்று
துவக்கப்பள்ளி தலைமையாசிரியர்கள், துவக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கும், நாளை நடுநிலைப்பள்ளிகள்,
உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், செப். 29 ல் உயர்
துவக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கும், பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. பயிற்சிகளை மாநில அளவில் பயிற்சி பெற்ற
ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள் பயிற்சி
வழங்குகின்றனர். தலைமையாசிரியர்களுக்கு கருத்தாளர்களாக, பயிற்சி பெற்ற
தலைமையாசிரியர்கள், பயிற்சி வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் கூறுகையில், "காலாண்டு, அரையாண்டு தேர்வு விடுமுறையில்,
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, சிறப்பு
பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. முழு ஆண்டுத்தேர்வு விடுமுறையில்
விடைத்தாள் திருத்தும் பணிகள் வந்துவிடுகிறது. ஆசிரியர்கள் விடுமுறை
தினங்களில் பயிற்சி வழங்க கூடாது,'' என்றனர். தமிழாசிரியர் கழக மாநில துணை
செயலர் இளங்கோவன் கூறுகையில், "ஆசிரியர்களுக்கு பயிற்சி அவசியம், விடுமுறை
தினங்களில் பயிற்சி வழங்க கூடாது. தலைமையாசிரியர்களுக்கு தேர்வு விடுமுறை
கிடையாது. 30 நாள் ஈட்டிய விடுப்பு உள்ளது. விடுமுறை தினங்களில்
பயிற்சிகள் நடத்தும் போது, மாற்று விடுப்பு வழங்க வேண்டும்,'' என்றார்.