>>>மெழுகு பூச்சு தாள் ரசீதுகளால் பிரச்னை: குவிகின்றன புகார்கள்

தனியார் மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள் வழங்கும், மெழுகு பூச்சு விற்பனை ரசீதுகளில் உள்ள விவரங்கள், விரைவில் அழிந்து விடுவது குறித்த புகார்கள் அதிகரித்து வருகின்றன.

தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள், வாடிக்கையாளர்கள் தங்களிடம் வாங்கும் பொருட்களுக்கான விற்பனை ரசீதை, மெழுகு பூச்சு தாளில் (Wax Coated Paper) வழங்கி வருகின்றன. பல்பொருள் அங்காடி, வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை நிலையங்கள், ஏ.டி.எம்., மையத்தில் வழங்கப்படும் பரிமாற்ற விவர ரசீது, தொலைதூர மற்றும் மாநகர பேருந்துகளில் வழங்கப்படும் பயணசீட்டு உள்ளிட்டவை, மெழுகு பூச்சு தாளில் தான் வழங்கப்படுகின்றன. கையடக்க கம்ப்யூட்டரில் தரப்படும் ரசீது ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் இத் தாளை மாற்றி, சாதாரண வெள்ளைத் தாள் ஆக்குவது எனில், அதற்கு தொழில்நுட்ப முறைகள் அனைத்தையும் மாற்ற வேண்டும் என்று கூறப்படுகிறது. இவற்றில் பதியப்படும் விவரங்கள், ஒரு வாரம் அல்லது அதிகபட்சமாக, 10 நாட்களுக்குப் பின், மறைந்து, வெற்று வெள்ளைத் துண்டு சீட்டாகி விடுகின்றன. இதனால், சேவை தொடர்பான பிரச்னைகள் எழும்போது, அதுகுறித்து, வாடிக்கையாளர்கள், புகார் அளிப்பதில் சிக்கல் எழுகிறது. அதேசமயம் வீட்டு வரி போன்ற முக்கிய ரசீதுகள் தரும்போது, சில இடங்களில், தாங்கள் தரும் ரசீதுகளை லேசர் ஜெராக்ஸ் எடுத்து வைத்துக் கொள்ள அறிவுறுத்துகின்றனர். ஆனால், பலரும் தங்கள் வேலை முடிந்ததும், மறந்து விடுகின்றனர்.

இதுகுறித்து, தமிழ்நாடு முற்போக்கு நுகர்வோர் மைய ஒருங்கிணைப்பாளர் சடகோபன் கூறியதாவது: உத்தரவாதத்துடன் ஒரு பொருளை வாங்கும் வாடிக்கையாளருக்கு, விற்பனைக்கான ஆதாரம், ரசீது தான். மெழுகு பூச்சு தாளில் பதியப்பட்டு, விற்பனை ரசீது வழங்குவது, நுகர்வோர் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும்; இப்பிரச்னைக்கு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மத்திய உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையிடம், பலமுறை முறையிட்டும், எந்த பலனும் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தமிழக நுகர்வோர் பாதுகாப்பு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: இப்பிரச்னை குறித்து, இதுவரை அரசுக்கு எவ்வித புகாரும் வரவில்லை. பாதிக்கப்பட்டவர்களோ அல்லது புகார்களை பெற்றிருக்கும் நுகர்வோர் அமைப்புகளோ புகார் தெரிவித்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். அதே சமயம் தனியார் முன்னணி நிறுவனங்கள் சில, தங்கள் வாடிக்கையாளர்கள் அதிக அளவு பணம் தந்து வாங்கும் பொருட்களுக்கு அழியாத வகையில் உள்ள பூச்சு கொண்ட ரசீதை வழங்கும் நடைமுறைகளையும் கொண்டிருக்கின்றன. இப்பிரச்னை குறித்த புகார்கள் அதிகரிப்பதால், இதற்கு தீர்வு காண வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.