>>>"ஹால் டிக்கெட்' வழங்குவதில் கால தாமதம்: மாணவர் மயக்கம்; டி.பி.ஐ.,யில் பரபரப்பு

பிளஸ் 2 தனி தேர்வுக்கு, "தத்கால்' திட்டத்தில் விண்ணப்பித்த மாணவர்களுக்கு, தேர்வுத் துறை இயக்குனரக வளாகத்தில் நேற்று, "ஹால் டிக்கெட்' வழங்கப்பட்டது. உடனுக்குடன், "ஹால் டிக்கெட்' வழங்க ஏற்பாடு செய்யாததால், பல மணி நேரம் வெயிலில் காத்திருந்த மாணவ, மாணவியர் பலர், மயக்கம் போட்டு விழுந்தனர்.
குவிந்த மாணவர்கள்: அக்டோபர், 4ம் தேதி முதல், 16ம் தேதி வரை, பிளஸ் 2, தனி தேர்வு நடக்கிறது. 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர், இதில் பங்கேற்கின்றனர். "தத்கால்' திட்டத்தில் விண்ணப்பித்த மாணவ, மாணவியருக்கு, சென்னை, டி.பி.ஐ., வளாகத்தில் உள்ள தேர்வு துறை இயக்குனர் அலுவலகத்தில், நேற்றும், இன்றும், "ஹால் டிக்கெட்' வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டிருந்தது. மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து, 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர், நேற்று தேர்வுத்துறை அலுவலகத்திற்கு வந்தனர். "ஆன்-லைன்' வழியில் விண்ணப்பித்ததற்கான சான்றை காட்டி, "ஹால் டிக்கெட்' பெற, அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.
தேர்வுத்துறை மெத்தனம்: ஆனால், இவர்களுக்கு உடனுக்குடன், "ஹால் டிக்கெட்' வழங்க, தேர்வுத்துறை ஏற்பாடு செய்யவில்லை. ஒரே ஒரு, "கவுன்டரில்' மட்டும், "ஹால் டிக்கெட்' வழங்கப்பட்டதால், மாணவரும், பெற்றோரும், நீண்ட நேரம் வெயிலில் காத்திருந்தனர். கூட்டத்தை ஒழுங்குபடுத்தவோ, கூடுதல், "கவுன்டர்'கள் மூலம், "ஹால் டிக்கெட்' வழங்கவோ, தேர்வுத்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. ஒரே ஒரு பெண் போலீஸ் அதிகாரி மட்டும், மர நிழலில் உட்கார்ந்து கொண்டிருந்தார். திருப்போரூரைச் சேர்ந்த முத்துச்செல்வம் என்ற மாணவர், நீண்ட நேரம் வெயிலில் நின்றிருந்ததால், பிற்பகல் 2:00 மணிக்கு, மயக்கம் போட்டு சரிந்தார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே, அங்கிருந்தவர்கள், தண்ணீர் தெளித்து, "ஜூஸ்' வாங்கிக் கொடுத்தனர். வேலூர் மாவட்டம், வாணியம்பாடியில் இருந்து வந்த வள்ளி என்பவர் கூறுகையில், ""என் மகளுக்கு, "ஹால் டிக்கெட்' பெறுவதற்காக, காலையில் வந்தோம்; இதுவரை கிடைக்கவில்லை. ஒரு கட்டத்தில், என் மகளும், மயக்கம் போட்டு விழுந்து விட்டாள். ஒரு, "கவுன்டரில்' கூட, தொடர்ந்து, "ஹால் டிக்கெட்' வழங்கவில்லை,'' என்றார்.
அதிகாரி பதில்: தேர்வு துறை இணை இயக்குனர் ஆரோக்கியசாமி (மேல்நிலை) கூறுகையில், ""2,000 பேர், "தத்கால்' திட்டத்தில் விண்ணப்பித்தனர். நாளைக்கும், "ஹால் டிக்கெட்' வழங்குகிறோம். ஒரே நாளில், பாதிக்கும் மேற்பட்டோர் வந்து விட்டனர். அனைவருக்கும் விரைவில், "ஹால் டிக்கெட்' வழங்கப்படும்,'' என்றார்.