>>>சமுதாய ரேடியோக்களில் கணிதம் தொடர்பான நிகழ்ச்சிகள்

சமுதாய ரேடியோக்களில், கணிதம் தொடர்பான நிகழ்ச்சிகளை ஒலிபரப்ப, ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தொடர்புக் குழு, அறிவியல் தொழில்நுட்ப துறைகள், சமுதாய ரேடியோ மூலம் கணிதத்தை பிரபலமாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.
மதுரை அருப்புக்கோட்டை ரோடு சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லூரியில், இதுதொடர்பான கருத்தரங்கில், தொழில்நுட்ப தொடர்புக்குழு விஞ்ஞானி உஜ்வாலா திர்கே, இதை அறிவித்தார்.
இந்த ஆண்டு கணித ஆண்டாக இருப்பதால், மத்திய அரசு, கான்பூர் ஐ.டி.ஐ., கோல்கட்டா, மும்பை பல்கலைகள், மதுரை சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லூரியில் இந்த சமுதாய ரேடியோ பயன்பாட்டு வாய்ப்புகளை செயல்படுத்த அழைப்பு விடுத்துள்ளது.
இந்த நிறுவனங்களில் சமுதாய ரேடியோ வசதியை ஏற்படுத்தியுள்ளன. இதன் மூலம் கணிதம் தொடர்பான விளையாட்டுக்கள், இசை நிகழ்ச்சிகள், நாடகம், வினாடிவினா, கதை சொல்லுதல், புதிர்கள் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இவை தினமும் 90க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை தயாரித்து அளிக்கும். இதன் தாக்கத்தை பொறுத்து, அவை மேலும் பல சமுதாய ரேடியோக்களுக்கு விரிவுபடுத்தப்படும்.
கல்லூரி தலைவர் டாக்டர் ஆர்.லட்சுமிபதி, தினசரி வாழ்க்கையில் கணிதத்தின் முக்கியத்துவம் குறித்து பேசியதுடன், "மேற்கண்ட நான்கு சமுதாய ரேடியோக்களும், கணித பயன்பாடு குறித்து நேயர்களுக்கு தெரிவிக்க வேண்டும்" என்றார்.
ஆசிய நாடுகளின் காமன்வெல்த் கல்வி ஊடக மைய முன்னாள் இயக்குனர் ஆர்.ஸ்ரீதர், 2 நாள் கருத்தரங்கின் ஆலோசகராக செயல்பட்டார். தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தொடர்பு குழுமம் "பெண்களுக்கான சத்துணவு மற்றும் ஊட்டச்சத்து அறிவியல்" தொடர்பான பயிற்சியை பரவலாக்கும் "மெகா" திட்டத்தில், ஈடுபட்டுள்ளது.
இதில் கவுகாத்தி, லக்னோ, வயநாடு, திருச்சி, திருச்செங்கோடு, பெங்களூரு, மீரட் நகரங்களின் சமுதாய ரேடியோ பொறுப்பாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.
அறிவியல் தொழில்நுட்பத் துறை, ஏற்கனவே இந்த நிகழ்ச்சியை, 30 சமுதாய ரேடியோக்கள் மூலம் துவக்கி விட்டது. இதன் மூலம் ஒவ்வொரு பகுதியிலும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள், தங்களை இதில் பதிவு செய்து கொள்வதன் மூலம், பத்து லட்சத்துக்கும் மேற்பட்டோரிடம் இப்பயிற்சி சென்றடையும் வாய்ப்புள்ளது.
விஞ்ஞானி உஜ்வாலா கூறுகையில், "12வது ஐந்தாண்டு திட்டத்தில், இத்திட்டத்திற்காக, அறிவியல் தொழில்நுட்பத் துறை, நூறு சமுதாய ரேடியோ நிலையங்களை உருவாக்கும் வாய்ப்பு உள்ளது" என்றார்.
மதுரையில், "சியாமளாவாணி", தனது பரீட்சார்த்த கணிதம் தொடர்பான ஒலிபரப்பு திட்டத்தை, விரைவில் துவக்க உள்ளது. இதுதவிர, இந்திய அளவிலான 150 சமுதாய ரேடியோக்களில், தமிழகம், புதுச்சேரியில் மட்டும் 27 சமுதாய ரேடியோக்கள் விரைவில் செயல்படும்.