>>>திறந்தநிலை பல்கலை துணைவேந்தர் தேர்வு செய்ய புதிய குழு

தமிழ்நாடு, திறந்தநிலைப் பல்கலைத் துணைவேந்தர் பதவிக்கு, மூன்று பேர் பெயரைப் பரிந்துரை செய்வதற்காக அமைக்கப்பட்ட தேர்வுக்குழு கலைக்கப்பட்டு, புதிய தேர்வுக்குழு அமைக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
திறந்தநிலைப் பல்கலைத் துணைவேந்தராக இருந்த கல்யாணியின் பதவிக்காலம் முடிந்ததற்குப் பின், புதிய துணைவேந்தரை நியமிப்பதற்காக, அன்னை தெரசா மகளிர் பல்கலையின் முன்னாள் துணைவேந்தர் ஆனந்தவல்லி தலைமையில், மூன்று பேர் அடங்கிய தேர்வுக்குழுவை அமைத்து, அரசு உத்தரவிட்டது.
இக்குழு, திறந்தநிலைப் பல்கலைத் துணைவேந்தர் பதவிக்கு, மூன்று பேர் பெயரை, கவர்னருக்கு பரிந்துரைத்தது. மூவரில் ஒருவராக, பேராசிரியர் குமரகுரு பெயர் இடம் பெற்றிருந்தது. நெல்லை மனோண்மணியம் சுந்தரனார் பல்கலைத் துணைவேந்தராக அவர் நியமிக்கப்பட்டார். எஞ்சிய, இருவர் பெயரைப் பரிசீலனை செய்து, புதிய துணைவேந்தரை நியமனம் செய்ய, கவர்னர் விரும்பாததால், புதிய தேர்வுக்குழுவை அமைக்க உத்தரவிட்டதாக, உயர்கல்வி வட்டாரம் தெரிவித்தது.
இதையடுத்து, புதிய தேர்வுக்குழு அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன. கவர்னர் சார்பில் ஒரு உறுப்பினர், தமிழக அரசு சார்பில் ஒரு உறுப்பினர் மற்றும் பல்கலை சிண்டிகேட் சார்பில் ஒரு உறுப்பினர் என, மூன்று பேரைக் கொண்ட தேர்வுக் குழு, இன்னும் ஒரு வாரத்திற்குள் அமைக்கப்படும்.
அக்குழு, துணைவேந்தர் பதவிக்காக, மூன்று பெயர் அடங்கிய பட்டியலை, ஒரு மாதத்திற்குள், கவர்னருக்கு பரிந்துரை செய்யும். அதன்பின், திறந்தநிலைப் பல்கலைக்கு புதிய துணைவேந்தர் நியமிக்கப்படுவார் என உயர்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.