>>>6,500 மாணவர்களுக்கு ஆங்கில பேச்சாற்றல் :நிதிஉதவி தந்து அரசு உதவி

பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் நல கல்லூரி விடுதிகளில், தங்கி படிக்கும் மாணவர்களின் ஆங்கில பேச்சாற்றலை மேம்படுத்தும் பயிற்சிகளுக்கு, இரண்டு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதனால், 6,500 மாணவ, மாணவியர் பயனடைவர். தமிழக அரசின் செய்திக்குறிப்பு: அரசு விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களில், பத்தாம் வகுப்பு பொது தேர்வில், அதிக மதிப்பெண் பெற்று, முதல் மூன்று இடங்களை பெறும், சிறுபான்மை மாணவர்களுக்கு வழங்கப்படும் பரிசுதொகை, 3,000, 2,000 மற்றும் 1,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. "பிளஸ் 2' வகுப்பில், அதிக மதிப்பெண் பெற்று, முதல் மூன்று இடங்களை பெறும், சிறுபான்மை மாணவர்களுக்கான உதவித்தொகையை, 6,000, 4,000 மற்றும் 2,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படுகிறது.. முஸ்லிம் சமுதாய மக்களின் வாழ்வை மேம்படுத்த வழங்கப்படும், 10 லட்சம் ரூபாய் மானிய தொகை, 20 லட்சம் ரூபாயாக உயர்கிறது. இதற்கு, மூன்று கோடி ரூபாய் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். நடப்பாண்டில், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல கல்லூரி விடுதிகளில், தங்கி படிக்கும் மாணவர்களுக்கு, 4,200 இரண்டடுக்கு இரும்பு கட்டில்கள் வழங்கப்படும். குளிர்பிரதேச பகுதியில் உள்ள, இரு பிற்படுத்தப்பட்டோர் நல கல்லூரி விடுதியில் படிக்கும், 100 மாணவர்களுக்கு, மரத்திலான இரண்டடுக்கு, 50 கட்டில்கள் வழங்கப்படும். இவைகளுக்கு, நான்கு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல கல்லூரி விடுதிகளில், தங்கி படிக்கும் மாணவர்களின் ஆங்கில பேச்சாற்றலை மேம்படுத்த, பயிற்சிகளை நடத்த, இரண்டு கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 160 விடுதிகளில் உள்ள, 6,550 மாணவர்கள் ஆங்கில பேச்சாற்றல் பயிற்சி பெற்று பயனடைவர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.