"மொழி பெயர்ப்பின் மூலம் நாம் வேற்றுமையை போக்கவேண்டும்,'' என,
தமிழ்நாடு தேர்வாணைய குழு தலைவர் நடராஜ் பேசினார். நல்லி சின்னசாமி செட்டி
நிறுவனம், திசை எட்டு மொழியாக்க காலாண்டிதழ் ஆகியவை இணைந்து இந்த ஆண்டில்,
சிறந்த மொழியாக்கப் படைப்பாளிகள், 14 பேருக்கு விருது வழங்கியுள்ளன.
அதற்கான விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில், தமிழிலிருந்து
வங்காளிக்கும், வங்காளியிலிருந்து தமிழுக்கும் மொழி பெயர்த்த,
சு.கிருஷ்ணமூர்த்தி, ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும் தமிழிலிருந்து
ஆங்கிலத்திற்கும் மொழிபெயர்த்துள்ள ராஜரத்தனம் ஆகியோருக்கு வாழ்நாள்
சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. குறுந்தொகையை ஆங்கிலத்தில் மொழியாக்கம்
செய்த தட்சணாமூர்த்தி, சிவகுமார், ராமன்ராஜா, சின்னத்தம்பி முருகேசன்,
மகாதேவன், கிருட்டிணமூர்த்தி, பானுமதி, மாரியப்பன், பாலசுப்பிரமணியன்,
குளச்சல்.யூசுப், ஜெயஸ்ரீ, ஸ்டான்லி ஆகியோருக்கு விருதுகளை தொழிலதிபர்
நல்லி குப்புசாமி வழங்கினார். மேனகா காந்தி எழுதிய ஆங்கில நூலினை தமிழில்,
"மரங்களின் கதைகள்' என்ற தலைப்பில் சுப்ரபாலன் மொழிபெயர்த்துள்ளார்.
நிகழ்ச்சியின் போது இந்த நூலை நல்லி குப்புசாமி வெளியிட தமிழ்நாடு
தேர்வாணைய குழுத் தலைவர் நடராஜ் பெற்றுக்கொண்டார். அவர் பேசுகையில்,
""மொழியில் எப்போது வேற்றுமை வந்தது என்றால், மொழி தோன்றி பேசியபோதுதான்
வேற்றுமை வந்தது. இதை போக்க வேண்டுமென்றால் வேற்று மொழி நூல்களை தமிழில்
மொழிபெயர்ப்பதன் மூலம் ஒற்றுமையை ஏற்படுத்த முடியும். திசை எட்டும்
விழாவில், திசை எட்டும் எட்டி விட்டது. அதேபோல மற்ற நூல்கள் அங்கிருந்து
கொண்டு வந்ததைப்போல, இங்கு உள்ள நூல்களை மற்ற மொழிகளுக்கு கொண்டு
செல்லவேண்டும்,'' என்றார்.