"அனைத்து வகை பள்ளிகளிலும், ஆறு மாதங்களில், கழிப்பறை வசதி, குடிநீர் வசதி
உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகளை செய்து தர வேண்டும்' என, சமீபத்தில்,
சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இந்த உத்தரவை, தமிழகத்தில், ஆறு
மாதங்களுக்குள் நிறைவேற்ற முடியுமா என்பது, கேள்விக்குறியாக
உள்ளது.சுற்றுச்சூழல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு மையம் என்ற, தன்னார்வ
அமைப்பு, தொடர்ந்த வழக்கில், "அனைத்து வகை பள்ளிகளிலும், கழிப்பறை வசதி,
குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகளை, ஆறு மாதங்களில்
ஏற்படுத்திட, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என,
இம்மாதம், 3ம் தேதி, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. தமிழகத்தில்,
தற்போது, பள்ளிகளில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்த புள்ளி விவரங்கள்
சேகரிக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகள், நவம்பர் இறுதியிலோ அல்லது
டிசம்பர் முதல் வாரத்திலோ முடிவடையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இந்த கணக்கெடுப்பு தகவல்கள் கிடைத்தபிறகே, எத்தனை
பள்ளிகளில், அடிப்படை வசதிகள் உள்ளன; எத்தனை பள்ளிகளில், போதிய அளவிற்கு,
அடிப்படை வசதிகள் நிறைவேற்ற வேண்டியுள்ளது என்பதை தெரிந்துகொள்ள முடியும். இந்த
புள்ளி விவரங்கள் அடிப்படையில், தேவை உள்ள பள்ளிகளுக்கு, அடிப்படை வசதிகளை
நிறைவேற்ற, திட்டங்கள் தீட்டி, அரசின் அனுமதிபெற வேண்டும். அதன்பின்,
டெண்டர் விட்டு, பணிகளை நிறைவேற்ற, நடவடிக்கைஎடுக்க வேண்டும்.பட்ஜெட்
நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், புதிய திட்டங்கள் குறித்த
அறிவிப்புகள், கடைசி நேரத்தில் தனியாக வெளியாவதற்கு வாய்ப்புகள் இல்லை என,
துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.எனவே, புள்ளி விவரங்கள் அடிப்படையில், தீட்டப்படும் புதிய திட்டங்கள்
குறித்த அறிவிப்புகள், வரும் பட்ஜெட்டிலோ அல்லது பள்ளிக்கல்வி மானியக்
கோரிக்கையிலோ வெளியாகலாம். அதனால், ஆறு மாதங்களுக்குள், திட்டப்
பணிகளை முடிப்பதற்கு, நடைமுறையில் சாத்தியமில்லை என, கல்வித்துறை கை
விரிக்கிறது.இந்த ஆண்டு, அரசுப் பள்ளிகளில், 3,769 குடிநீர் வசதிகள், 4,373
மாணவர் கழிப்பறை வசதிகள், மாணவியருக்கென, 7,262 கழிப்பறை வசதிகள், 7,907
கூடுதல் வகுப்பறைகள், 3.81 லட்சம் மீட்டரில், பள்ளிகளுக்கு சுற்றுச்சுவர்
உள்ளிட்ட பல்வேறு அடிப்படை கட்டமைப்புதிட்டங்கள், 1,507 கோடி ரூபாய்
செலவில் நிறைவேற்றுவதற்கு திட்டமிடப்படது. இப்பணிகளில், 90
சதவீதத்திற்கும் அதிகமான திட்டங்கள் முடிக்கப்பட்டுள்ளதாக, கல்வித்துறை
வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த திட்டங்களை உள்ளடக்கிய பள்ளிகள் போக, மேலும்
அடிப்படை வசதிகள் தேவைப்படும் பள்ளிகள் எண்ணிக்கை, குறைவாகவே இருக்கும் என,
கல்வித்துறை எதிர்பார்க்கிறது.இந்தப் பள்ளிகளுக்கு, வரும் கல்வியாண்டில்,
தேவையான அளவிற்கு உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும் என, துறை
வட்டாரங்கள் தெரிவித்தன.