அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க, 10 ,12ம் வகுப்பில் தலா
பத்து மாணவர்களை தத்தெடுத்து, தினமும் அவர்களை கண்காணிக்க அரசு
உத்தரவிட்டுள்ளது. அரசு உயர்,மேல்நிலைப் பள்ளிகளில்
பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்புகளில், ஆண்டுதோறும் தேர்ச்சி விகிதம்
அதிகரிக்கவும், அனைவரும் இடைநிலை கல்வியை கடக்கவும், அரசு புதிய உத்தரவு
பிறப்பித்துள்ளது. இதன்படி, ஒவ்வொரு பள்ளியிலும், 10, 12ம் வகுப்பிற்கு
பாடம் நடத்தும் ஆசிரியர்கள், குறைந்தது தலா பத்து மாணவ, மாணவிகளை
தத்தெடுக்க வேண்டும். தங்களது கட்டுப்பாட்டிலுள்ள மாணவர்களிடம், தினமும் தங்களது பாடம் தவிர,
மற்ற ஆசிரியர்கள் நடத்தியவை, வீட்டு பாடங்களை கண்காணிக்க வேண்டும். அவர்களை
பொதுத் தேர்வில் அதிக மார்க் எடுக்க வைப்பதுடன், தேர்ச்சி விகித்தை
அதிகரிக்க செய்ய வேண்டும். மாணவர்கள் தேர்வில் தோல்வியை தழுவினாலும்,
பள்ளிக்கு சரியாக வராவிட்டாலும், சம்பந்தப்பட்ட ஆசிரியரே பொறுப்பு. இதற்கான
உத்தரவு, முதன்மை கல்வி அலுவலர்கள் மூலம் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆசிரியர் ஒருவர் கூறுகையில், "அரசு பள்ளிகளில் மாணவர்களை தத்தெடுப்பது,
ஆசிரியர்களுக்கு கூடுதல் சுமை. மாணவர்கள், ஆசிரியர் இடையே தகுந்த
ஒத்துழைப்பு தேவை. ஒழுக்கமில்லாத மாணவ, மாணவிகளை கண்டிக்கக்கூடாது என,
உத்தரவு இருக்கும் போது, ஒழுக்கமற்றவர்களை திருத்திக் கொண்டு வருவதில்
சிரமம் ஏற்படும். பெற்றோர்களும் ஒத்துழைக்க வேண்டும்" என்றார்.