>>>"லேப்டாப்' பெறுவதில் மாணவர்கள் அவதி

அரசு இலவச லேப்டாப் பெற தேவையான பிளஸ் 2 "ஒரிஜினல்' மதிப்பெண் சான்றுகளை, உயர் கல்வி நிறுவனங்கள் வழங்க மறுப்பதால், மாணவர்கள் அவதிப்படுகின்றனர். 2011-2012 கல்வியாண்டில் பிளஸ் 2 தேர்வு எழுதியவர்கள் தற்போது பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட கல்லூரி படிப்புகளில் சேர்ந்துள்ளனர். தற்போது அவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படுகிறது. பிளஸ் 2 மதிப்பெண் சான்று வழங்கியபோது பின்புறம் "லேப்டாப் பெறவில்லை' என தலைமையாசிரியர்களால் முத்திரையிட்டு வழங்கப்பட்டது. உயர் கல்வியில் சேர்ந்த போது அச்சான்றுகளை கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் ஒப்படைத்தனர். தற்போது இலவச லேப்டாப் பெற தலைமையாசிரியர்களால் முத்திரையிடப்பட்ட அந்த மதிப்பெண் சான்று தேவைப்படுகிறது. இவற்றை பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் வழங்க மறுக்கின்றன. சில நிறுவனங்களில் தாமதப்படுத்துகின்றனர். அதற்குள் "லேப்டாப்' வழங்கப்பட்டு விடுகிறது. இதனால், தகுதி இருந்தும் "லேப்டாப்' கிடைக்காமல் மாணவர்கள் அவதிப்படுகின்றனர். சி.இ.ஓ., நாகராஜமுருகன் கூறியதாவது: உயர் கல்வி நிறுவனங்களில் மதிப்பெண் சான்று பெறுவதில் சிக்கல் உள்ள மாணவர்கள், அந்த நிறுவனத்தில் இருந்து படித்ததற்கான சான்று பெற்றுவந்தால் "லேப்டாப்' வழங்க தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தகுதியுள்ள அனைத்து மாணவர்களுக்கு "லேப்டாப்' கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.