>>>விண்ணப்பத்தை கொடுத்தால் "ரிசல்ட்'

"பத்தாம் வகுப்பு தனி தேர்வுக்கு, "ஆன்-லைன்' வழியாக விண்ணப்பித்த தேர்வர், மண்டல துணை இயக்குனர் அலுவலக்தில், விண்ணப்ப நகலை, உடனே சமர்ப்பிக்க வேண்டும். அப்போது தான், தேர்வு முடிவு வெளியிடப்படும்,'' என, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது: நாளை துவங்கும், பத்தாம் வகுப்பு தனி தேர்வுக்கு, "ஆன்-லைன்' வழியாக விண்ணப்பித்த தனி தேர்வர், பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை, உரிய நகல்களுடன், சம்பந்தபட்ட மண்டல துணை இயக்குனர் அலுவலகங்களில், சமர்ப்பிக்க வேண்டும் என, அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், பெரும்பாலான தேர்வர், விண்ணப்பங்களை, சமர்ப்பிக்கவில்லை. நாளை முதல், 26ம் தேதிக்குள், பதிவிறக்கம் செய்த விண்ணப்பங்களை சமர்ப்பித்தால் தான், தேர்வு முடிவு வெளியிடப்படும். "ஹால் டிக்கெட்'டில் புகைப்படம் இல்லாத மாணவர், இரு புகைப்படங்களை, தேர்வு மையத்திற்கு கொண்டு வந்து, ஒன்றை, ஹால் டிக்கெட்டிலும், மற்றொன்றை, பெயர் பட்டியலிலும் ஒட்ட வேண்டும். இவ்வாறு, வசுந்தரா தெரிவித்தார்.