"தமிழகத்தில், விலையில்லா சைக்கிள் வழங்க, நடப்பாண்டுக்கு, 196 கோடியே, 10
லட்ச ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது,'' என, தமிழக போக்குவரத்து துறை அமைச்சர்
செந்தில்பாலாஜி தெரிவித்தார். கரூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி,
சி.எஸ்.ஐ., ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, சி.எஸ்.ஐ., பெண்கள் மேல்நிலைப்
பள்ளிகளில், ப்ளஸ்1 வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள்
வழங்கும் விழா, மாவட்ட கலெக்டர் ஜெயந்தி தலைமையில் நடந்தது.விழாவில், தமிழக
போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, 480 மாணவ, மாணவிகளுக்கு இலவச
சைக்கிள்களை வழங்கி பேசியதாவது: தமிழக முதல்வர், பள்ளி மாணவ, மாணவிகளின்
நலனுக்காக தமிழக நிதிநிலை அறிக்கையில், முதல்முறையாக, 2012-13ம் ஆண்டுக்கு,
14 ஆயிரத்து, 552 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளார். இலவச
சைக்கிள் வழங்கும் திட்டத்துக்கு, 2011- 12ம் நிதியாண்டில், 179 கோடியே,
21 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, இரண்டு லட்சத்து, 77
ஆயிரத்து, 778 மாணவர்களுக்கும், மூன்று லட்சத்து, 44 ஆயிரத்து, 380
மாணவிகளுக்கும் விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது.நடப்பு நிதியாண்டில்,
விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டத்துக்கு, 196 கோடியே, பத்து லட்சம்
ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, இரண்டு லட்சத்து, 81 ஆயிரத்து, 861
மாணவர் களுக்கும், மூன்று லட்சத்து, 49 ஆயிரத்து, 418 மாணவியருக்கு இலவச
சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளது.கரூர் மாவட்டத்தில், முதல் வகுப்பு முதல்,
ப்ளஸ் 2 வகுப்பு வரை படிக்கும் ஒரு லட்சத்து, 27 ஆயிரத்து, 584 மாணவ,
மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்களும், ஆறாயிரத்து 363 மாணவ,
மாணவிகளுக்கு லேப்டாப்களும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், ப்ளஸ்1 வகுப்பு
பயிலும், 7,707 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட
உள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர்
முகமது ஜான், கரூர் நகராட்சி தலைவர் செல்வராஜ், துணைத்தலைவர் காளியப்பன்,
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயலட்சுமி, ஆர்.டி.ஓ., நெல்லைவேந்தன் உட்பட
பலர் பங்கேற்றனர்.