அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 1,591 முதுகலை பட்டதாரி ஆசிரியர்
பணியிடங்களைதோற்றுவிக்க, முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தமிழக அரசின்
செய்திக்குறிப்பு: அரசு மேல்நிலை பள்ளிகளில், 11 மற்றும், 12ம்
வகுப்புகளில் உள்ள, மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, 1,591 முதுகலை
பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்படும். இதற்காக, அரசுக்கு
ஆண்டுக்கு, 64 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும். தற்போதுள்ள, 4,393 பள்ளிகள்
மற்றும் புதிதாக துவக்கப்பட்ட, 544 பள்ளிகள் என, மொத்தம், 4,937
பள்ளிகளுக்கு, தலா ஒரு ஆய்வக உதவியாளர் வீதம், 4,937 ஆய்வக உதவியாளர்
பணியிடங்கள் உருவாக்கப்படும். இதில், 544 ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு,
முதல்வர் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளார். மீதமுள்ள, 4,393 ஆய்வக உதவியாளர்
பணியிடங்களை நிரப்பவும், 1,764 பள்ளிகளுக்கு, பள்ளி ஒன்றுக்கு, ஒரு இளநிலை
உதவியாளர் வீதம், பணியிடங்களை உருவாக்க உத்தரவிடப்பட்டிருக்கிறது.
இதற்காக, அரசுக்கு, 109 கோடி ரூபாய் செலவாகும். மேலும், 131
பள்ளிகளில், கூடுதல் வகுப்பறைகள், குடிநீர் வசதி, ஆய்வகம் போன்ற, அடிப்படை
கட்டமைப்பு வசதிகளுக்கு, 152.73 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தும்,
முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.