>>>ஐகோர்ட் உத்தரவுப்படி 200 தனியார் பள்ளிகளுக்கு புதிய கட்டணம்

ஐகோர்ட் உத்தரவுப்படி, கட்டண நிர்ணயக் குழு, மீதமுள்ள, 200 தனியார் பள்ளிகளுக்கு, புதிய கட்டணத்தை நிர்ணயித்துள்ளது. மாவட்ட வாரியாக, புதிய கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ள பள்ளிகளின் பட்டியலும், கட்டண விவரங்களும், தமிழக அரசின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த, 400 தனியார் பள்ளிகள், புதிய கட்டணம் நிர்ணயிக்கக் கோரி, சென்னை, ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன.  இந்த வழக்கில், சம்பந்தபட்ட பள்ளிகளுக்கு, டிசம்பர் மாதத்திற்குள், புதிய கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும் என, சில மாதங்களுக்கு முன், ஐகோர்ட் உத்தரவிட்டது. அதன்படி, 400 பள்ளி நிர்வாகிகளுக்கும், கட்டண நிர்ணயக் குழு அழைப்பு விடுத்து, புதிய கட்டணம் நிர்ணயம் செய்வது தொடர்பாக, அவர்களிடம் கருத்து கேட்டது. இதன்பின், முதல் கட்டமாக, நவம்பரில், 200 பள்ளிகளுக்கான புதிய கட்டணத்தை, குழு வெளியிட்டது. இதைத் தொடர்ந்து, மீதமுள்ள, 200 பள்ளிகளுக்கான கட்டணத்தை, நேற்று வெளியிட்டது. மாவட்ட வாரியாக, புதிய கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ள பள்ளிகளின் பட்டியலும், கட்டண விவரங்களும், தமிழக அரசின் இணையதளத்தில் (www.tn.gov.in) வெளியிடப்பட்டுள்ளன. ஒவ்வொரு கல்வி ஆண்டுகளுக்கும், தனித்தனியே, வகுப்புகள் வாரியாக, கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. கட்டண பட்டியலில், 6, சி.பி.எஸ்.இ., பள்ளிகளும் இடம் பெற்றுள்ளன. திருவள்ளூர் மாவட்டத்தில், மூன்று பள்ளிகளுக்கும், தேனி, மதுரை, கரூர் ஆகிய மாவட்டங்களில், தலா ஒரு பள்ளிக்கும், புதிய கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.