>>>பி.டி.ஏ., கட்டணம்: வகுப்புக்கு வெளியே நிறுத்தப்பட்ட மாணவர்கள்

அரசு மேல்நிலை பள்ளியில், பெற்றோர் - ஆசிரியர் கழகக் கட்டணம் செலுத்தாத மாணவர்கள், வகுப்புக்கு வெளியே நிறுத்தப்பட்டனர். நீலகிரி மாவட்டம், பந்தலூர் அரசு மேல்நிலை பள்ளியில், பெற்றோர் - ஆசிரியர் கழகம் (பி.டி.ஏ.,) சார்பில், ஆறு ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கு சம்பளம் வழங்குவதற்காகவும், தேர்வு வினாத்தாள் கட்டணமாகவும், மாணவர் ஒருவருக்கு, ஆண்டுக்கு, 265 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில், எட்டாம் வகுப்பு மலையாள பிரிவில், 14 மாணவியர் மற்றும் ஏழு மாணவர்கள், இந்த கட்டணத்தை செலுத்தவில்லை. நவ., 8ம் தேதிக்குள் கட்டணத்தை செலுத்த வேண்டும் என, பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், 21 மாணவர்களும் நேற்று வரை தொகையை செலுத்தவில்லை. இதையடுத்து, 21 மாணவர்களையும், நேற்று காலை வகுப்புக்குள் அனுமதிக்கவில்லை; வகுப்புக்கு வெளியே அவர்கள் நிறுத்தப்பட்டனர். தகவலறிந்த பெற்றோர், ஆசிரியர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்; கல்வித்துறை, வருவாய் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த கல்வித்துறை அதிகாரிகள், மாணவர்களை வகுப்புக்குள் அனுமதிக்க உத்தரவிட்டதை அடுத்து, பெற்றோர் திரும்பி சென்றனர். பள்ளி தலைமை ஆசிரியர் சாமுலேசன் கூறும் போது, "பி.டி.ஏ., சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, 265 ரூபாய் வசூலிக்கப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட சிலர், பள்ளிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில், கட்டணத்தை செலுத்தாமல் பிரச்னை செய்கின்றனர். பி.டி.ஏ., கூட்டம் நடத்தி, இதற்கு தீர்வு காணப்படும்" என்றார்.