>>>அரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க ஒரு லட்சம் துண்டு பிரசுரம் வினியோகம்

"தமிழக அரசுக்கு, பல்வேறு வகைகளில் வரிகளை செலுத்தும் மக்கள், தங்கள் குழந்தைகளை, அரசு பள்ளிகளில் சேர்த்து, இலவச கல்வி பெற ஆர்வம் காட்ட வேண்டும்' என, ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தி உள்ளது. இதை வலியுறுத்தி, ஒரு லட்சம் துண்டுப் பிரசுரங்களை வினியோகிக்க முடிவு செய்திருக்கிறது.
பெற்றோர், இலவச கல்வி தரும் பள்ளிகளில், தங்கள் குழந்தைகளை சேர்க்க முன்வர வேண்டும். அனைத்து பள்ளிகளிலும், தரமான ஆசிரியர்கள் உள்ளனர். தமிழக அரசு, மாணவ, மாணவியருக்கு, இலவச கல்வி வழங்குவதுடன், பல்வேறு இலவச திட்டங்களையும் வழங்குகிறது.ஆண்டுக்கு, நான்கு ஜோடி இலவச சீருடை, நாள்தோறும், ஒரு முட்டையுடன், ஏழு வகை மதிய உணவு, வாழைப்பழம், இலவச பாடப் புத்தகங்கள், எழுது பொருட்கள், நோட்டுகள், சைக்கிள், "லேப்-டாப்' கம்ப்யூட்டர் என, பல்வேறு திட்டங்களை, தமிழக அரசு அளிக்கிறது. இதை, பெற்றோர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

பல்வேறு வரிகளை கட்டுகிற மக்கள், அதைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், தங்கள் குழந்தைகளை, இலவச கல்வி அளிக்கும் அரசு பள்ளிகளில் சேர்க்க வேண்டும்.இதை வலியுறுத்தி, இன்று மற்றும் நாளை, ஒரு லட்சம் துண்டுப் பிரசுரங்கள், மக்களுக்கு வழங்கப்படும்.இவ்வாறு, அறிக்கையில் கூறியுள்ளார்.மக்களுக்கு வழங்க அச்சிடப்பட்ட துண்டுப் பிரசுரத்தில், அரசு பள்ளிகளில், மாணவர்களை சேர்க்க வேண்டியதன் அவசியம் மற்றும் நன்மைகள், இரண்டு பக்கங்களில் பட்டியலிடப்பட்டு உள்ளன..