>>>கல்வி வளர்ச்சிக்கு பிராந்திய மொழிகள் அவசியம்:விஞ்ஞானி பேச்சு

கல்வி வளர்ச்சியின் ஒரு பகுதியாக பிராந்திய மொழிகள் இருப்பது அவசியம். இந்தியாவின் தலைசிறந்த கல்வி நிலையங்களால் மட்டுமே சிறந்த கல்வியை அளிக்க முடியும் எனும் நிலையை மாற்றி, கலாசாரத்துடன் ஒருங்கிணைந்த கல்வியை இளைஞர்களுக்கு வழங்க வேண்டும்,'' என, விஞ்ஞானி ராஜன் பேசினார்.இந்தியத் தொழில் கூட்டமைப்பு சார்பில், "கல்வியில் தரம்' என்ற தலைப்பில், 10வது மண்டல மாநாடு துவக்க விழா நேற்று கோவையில் நடந்தது.

இந்தியத் தொழில் கூட்டமைப்பு கோவை மண்டலத் தலைவர் அசோக் பக்தவத்சலம் வரவேற்றார். தேசிய தரமதிப்புச் சான்று, கல்வி மற்றும் பயிற்சி கழக தலைவர் சந்திரசேகர் பேசியதாவது:இந்தியாவின் பொருளாதாரம் வளர்ந்து வரும் அதேவேளையில் 40 சதவீதம் பேர் படிப்பறிவு இல்லாமல் இருப்பது வருந்ததக்கது. ஐ.நா., குழு நடத்திய சமீபத்திய ஆய்வில், இந்தியாவில் 50 சதவிதத்துக்கும் குறைவான கிராமப்புறக் குழந்தைகளே பள்ளிக் செல்கின்றனர் என, தெரிய வந்துள்ளது. இது இந்தியக் கல்வி தரத்தை எடுத்துக்காட்டுவதாக உள்ளது. எதிர் வரும் 2025ம் ஆண்டில் அதிகளவு தகுதி வாய்ந்த மனித வளம் உள்ள நாடாக இந்தியா இருக்கும்.

கல்வித்துறையில் தனியார் மட்டுமே சிறந்த கல்வியை அளித்து வருகின்றனர். பொருளாதாரத்தில் தகுதி வாய்ந்தவர்களுக்கு மட்டுமே சிறந்த கல்வி கிடைக்கிறது. இன்ஜினியரிங் துறையில் 20 சதவீத மாணவர்கள் மட்டுமே வேலைவாய்ப்பு பெறுகின்றனர். ஆனால் அவர்களுக்கும் பயிற்சிகள் தேவைப்படுகிறது. கல்வியின் அடித்தளமாக இருப்பது ஆரம்பக் கல்வி. அடித்தளம் சரியாக அமையவில்லை என்றால் மொத்த கல்வியும் சரியாக அமையாது. இந்தியாவின் 48 சதவீதம் பள்ளிகளில் அடிப்டை வசதிகளே இருப்பதில்லை. ஆரம்பக் கல்வியை வலுப்படுத்த அரசு பள்ளிகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த அதற்கான தணிக்கை குழவை ஏற்படுத்தி ஆய்வு செய்ய வேண்டும். ஆசிரியர்களின் கற்பிக்கும் திறனையும் மேம்படுத்த வேண்டும். பள்ளிகளில் டிஜிட்டல் முறையில் பாடம் கற்பித்தால் மட்டுமே வளர்ந்த நாடுகளுடன் போட்டியிட முடியும். கல்வித் தரத்தில் போட்டியிடக்கூடிய நிறுவனங்களை உருவாக்கினால் மட்டுமே தரமான கல்வியை மாணவர்களுக்கு அளிக்க முடியும்.இவ்வாறு, அவர் பேசினார்.

தேசிய தரமதிப்புச் சான்று கழக தலைவர், ராஜன் பேசியதாவது:உலக அளவில் கல்வி வளர்ந்து வரும் நிலையில், இந்தியக் கல்வியின் தரம் கேள்விக்குறியாகவே உள்ளது. வளர்ந்து வரும் மக்கள்தொகைக்கு ஏற்ப கல்வி தரம் வளரவில்லை. தொழிற்சாலைகள் தரமான பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு அளித்து லாபம் ஈட்டுவதை நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகின்றன. ஆரம்பக் கல்வித் துறையின் மீது தொழிலகங்கள் கவனம் செலுத்த வேண்டும். இந்தியாவில் 15 சதவீதத்தினர் மட்டுமே சிறந்த உயர்கல்வியை பெறுகின்றனர்.

பிளஸ்2 வகுப்புக்குப் பிறகு சாதாரண உயர்கல்வி எட்டு சதவீதத்தினருக்கு கிடைக்கிறது. 70 சதவீதம் மாணவர்கள் எந்தவித மேல் படிப்பையும் மேற்கொள்வதில்லை. வளர்ந்து வரும் கல்வியில் சில பிரச்னைகள் உள்ளன. பிரச்னைகளை களைந்து மாணவர்களுக்கு சிறந்த கல்வியை அளிக்க வேண்டும். மாணவர்களின் திறமைகளை தொழிலகங்களின் தேவைக்கேற்ப மாறுபடுத்திக்காட்ட வேண்டும். கல்வி வளர்ச்சியின் ஒரு பகுதியாக இந்திய மொழிகள் இருப்பது அவசியம். இந்தியாவின் தலைசிறந்த கல்வி நிலையங்களால் மட்டுமே சிறந்த கல்வியை அளிக்க முடியும் எனும் நிலையை மாற்ற வேண்டும்.

கலாசாரத்துடன் ஒருங்கிணைந்த கல்வியை இளைஞர்களுக்கு வழங்க வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.இந்திய தொழில் கூட்டமைப்பு கோவை மண்டல துணைத் தலைவர் சுந்தரராமன், கல்வி ஒருங்கிணைப்பாளர் செந்தில் கணேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.