>>>ஆங்கிலம், கணிதப் பாடங்களுக்கு ஆசிரியர் பற்றாக்குறை

ஆங்கிலம், கணிதம் ஆசிரியர்கள் இல்லாததால், அரசு பள்ளியில் படிக்கும், பிளஸ் 1 மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. ஆவடி சத்தியமூர்த்தி நகரில், அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. கடந்த ஆண்டுதான், இப்பள்ளி தரம் உயர்த்தப்பட்டது. "மேல்நிலை பாடப் பிரிவுகளுக்கு, ஒன்பது ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர்" என, அரசு அறிவித்தது. இப்பள்ளியில், நடப்பு கல்வியாண்டில், பிளஸ் 1 வகுப்பில் உள்ள மூன்று பிரிவுகளில், மொத்தம், 90 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இதில், கணித பிரிவில் மட்டும், 40 மாணவர்கள் படிக்கின்றனர். தற்போது, வேதியியல்,  இயற்பியல், உயிரியல், பொருளியல், வரலாறு பாடங்களுக்கான ஆசிரியர்கள் மட்டுமே பணியாற்றுகின்றனர். ஆனால், ஆய்வகங்கள் இல்லை. பெயரளவுக்கு, ஏழு கம்ப்யூட்டர்கள் உள்ளன. தமிழ், ஆங்கிலம், கணிதம், வணிகவியல் பாடங்களுக்கு, ஆசிரியர்கள் இல்லை. இதனால், இப்பாட வேளைகளில், மாணவர்கள், விளையாடி வருகின்றனர். பத்தாம் வகுப்பு தமிழ் ஆசிரியரே, பிளஸ் 1 வகுப்புக்கு பாடம் எடுக்கிறார். இதுதவிர, காலாண்டு தேர்வை, மொத்தமுள்ள, 90 மாணவர்கள், ஆங்கில பாடம் படிக்காமலும், கணித பிரிவில் உள்ள, 40 மாணவர்கள், கணித பாடம் படிக்காமலும் எழுதியுள்ளனர். சர்வ சிக்ஷா அபியான் திட்டத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள் மூலம், இந்த வினாத்தாள்களை திருத்தியதாக கூறப்படுகிறது. காலாண்டு தேர்வு முடிந்த பின்னும், ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. இது குறித்து, பள்ளி ஆசிரியர்களை கேட்டபோது, "நாங்கள் என்ன செய்வது?"என, கைவிரித்தனர். இதுகுறித்து, சமூக ஆர்வலர் பாலாஜி கூறுகையில், "போதிய ஆசிரியர்களை நியமிக்காமல், பள்ளியை மட்டும் தரம் உயர்த்தி எந்த பயனும் இல்லை. மாணவர்களின் நலன் கருதி, அரையாண்டு தேர்வுக்கு முன்பாவது, தேவையான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்” என்றார்.