>>>சர்வதேச மாணவர்கள் சங்கமிக்கும் என்.யு.எஸ்.

உலக வரைபடத்தில், கூர்மையான பென்சில் முனையைவிடச் சிறியதாகவே தோன்றும் ஒரு குட்டி நாடு தான் சிங்கப்பூர்.
ஆனால், திட்டமிட்ட உள்கட்டமைப்பு, சிறந்த பாதுகாப்பு, உயர்ந்த பொருளாதாரம், உலகத் தரமான வாழ்க்கைச் சூழல் ஆகியவற்றுடன் சுற்றுலா பயணிகள், தொழில் முதலீட்டாளர்களை மட்டுமின்றி சர்வதேச மாணவர்களையும் வசீகரிக்க முடிகிறது என்றால் ஆச்சரியமே...
சிங்கப்பூர், உயர் கல்வியிலும் சர்வதேச அளவில் உயர உறுதுணையாக இருப்பது என்.யு.எஸ்., என்கிற சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம். க்யூஎஸ் உலக பல்கலைக்கழக தரவரிசையில் 25வது இடத்தையும், டைம்ஸ் உயர்கல்வி உலக பல்கலைக்கழக தரவரிசையில் 29வது இடத்தையும் பிடித்துள்ள என்.யு.எஸ்., குட்டி நாட்டிற்குள் தனக்கென ஒரு குட்டி கல்வி நகரத்தையே உருவாக்கியுள்ளது.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம்
1905ம் ஆண்டு 23 மாணவர்களுடன் துவக்கப்பட்ட ஒரு மருத்துவக் கல்லூரி, இன்று மூன்று வளாகங்களில் 100 நாடுகளைச் சேர்ந்த 37 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவ, மாணவியரைக் கொண்டு ஒரு சர்வதேச பல்கலைக்கழகமாக மகத்தான வளர்ச்சி பெற்றுள்ளது என்.யு.எஸ். 

பல்கலைக்கழக வளாகங்கள்:
கென்ட் ரிட்ஜ்: பல்கலைக்கழகத்தின் பிரதான வளாகமான கென்ட் ரிட்ஜ் 1980ம் ஆண்டு நான்யாங் பல்கலைக்கழகத்துடனான இணைப்பு முதல் செயல்பட்டு வருகிறது. 150 ஏக்கர் பரப்பளவில் கல்வியாளர் மையங்கள், ஆராய்ச்சி மற்றும் பல்கலைக்கழக நிர்வாக அலுவலகங்கள் இடம்பெற்றுள்ளன. மாணவர்களுக்கான தங்குமிடங்கள், விளையாட்டு மைதானங்கள், பண்பாட்டு மையங்கள் ஆகியவையும் இவ்வளாகத்தில் குறிப்பிடத்தக்கவை. கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் துவக்கப்பட்ட ‘யுனிவர்சிட்டி டவுன்’ கென்ட் ரிட்ஜ் வளாகத்திற்கு மேலும் சிறப்பு சேர்க்கிறது.
புகிட் திமாக்: சட்டம், பப்ளிக் பாலிசி துறைகள் மற்றும் பல்வேறு ஆராய்ச்சி மையங்கள் இவ்வளாகத்தில் இயங்கி வருகின்றன. என்.யு.எஸ்., பல்கலைக்கழகமாக உருவெடுப்பதற்கு முன் பாரம்பரியமிக்க ரேபல்ஸ் கல்லூரி இங்குதான் செயல்பட்டது.
அவுட்ரம்: சிங்கப்பூரில் மருத்துவ கல்விக்கென்று புகழ்பெற்ற டியூக்-என்.யு.எஸ்., மருத்துவ கல்லூரி இவ்வளாகத்தின் சிறப்பு. நவீன வகுப்பறைகள், கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி மையங்களுடன் மருத்துவ கல்விக்கு ஒரு முன்னோடியாக திகழ்கிறது.
ஒவ்வொரு வளாகமும் தனித்துவமிக்க சிறப்புகளுடன் மாணவர்களை சர்வதேச சவால்களை எதிர்கொள்ளச் செய்யும் திறன்களை வளர்க்கும் உன்னத இடமாக திகழ்கிறது. சுதந்திரமான பாடத்திட்டம், ஆராய்ச்சியில் ஆர்வம் கொண்ட அனுபவமிக்க பேராசிரியர்கள், புத்தாக்க சிந்தனைகளை தூண்டும் ஆய்வு மையங்கள், தொழில்நிறுவனங்களுடன் போட்டியிடும் வகையில் தொழில்நுட்ப உபகரணங்களை உள்ளடக்கிய மேம்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பு வசதிகள் என உலகத் தரத்தில் உயர்ந்து நிற்கும் என்.யு.எஸ். பிரகாசமான எதிர்காலத்தை மாணவர்களுக்கு உருவாக்கிக் கொடுப்பதை முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது.
பேராசிரியர் புத்தகத்தை பார்த்து பாடம் நடத்தி, கரும்பலகையை நிரப்பிவிட்டு செல்லும் போக்கு இங்கு இல்லை. மாறாக, மாணவர்களின் சுயசிந்தனைக்கும், கருத்துக்கும் முக்கியத்துவம் அளித்து, விவாதித்து தீர்வு காணும் திறனுக்கு ஊக்கம் அளிக்கும் பணியை அதிகம் செய்கிறார்.  வகுப்பறைக்கு வெளியே மாணவ, மாணவியர் தங்களது கருத்துக்களை பரிமாறிக்கொள்ளும் வாய்ப்பையும் பல்கலைக்கழகம் வழங்குகிறது.

பல்கலைக்கழக சிறப்பம்சங்கள்:
*40 நாடுகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ‘ஸ்டூடண்ட் எக்ஸ்சேன்ஜ்’ திட்டத்திகிழ் 50 சதவீத இளநிலை மாணவர்களும், பிற சர்வதேச கல்வி திட்டங்களில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட மாணவர்களும் பங்குபெறுகின்றனர்.
* ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, சீனா, ஹாங்காங், தைவான், ஜப்பான், தென்கொரியா, கனடா, மெக்சிகோ, அமெரிக்கா, ஆஸ்திரியா, பெல்ஜியம், க்ரோசியா, டென்மார்க், ஸ்டோனியா, பின்லாந்து, பிரான்ஸ், லிதுனியா, நெதர்லாந்து, நார்வே, போலாந்து, ஜெர்மனி, ஹங்கேரி, அயர்லாந்து, இஸ்ரேல், ரொமானியா, தென் ஆப்ரிக்கா, ஸ்பெயின், ஸ்வீடன், சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து உட்பட 40க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள கல்விநிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
*உலகின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களுடன் இணைந்து டியூக்-என்.யு.எஸ்., யேல்-என்.யு.எஸ்., என்ற பெயரில் சர்வதேச தரத்தில் உயர்கல்வி வழங்குகிறது.
* வழக்கமான இளநிலை படிப்புகளுடன், ‘கன்கரண்ட் டிகிரி புரொகிராம்’, ‘டபுள் டிகிரி புரொகிராம்’, ‘டபுள் மேஜர் புரொகிராம்’,  ‘ஜாயின்ட் டிகிரி புரொகிராம்’ மற்றும் பகுதிநேர படிப்புகளும் வழங்கப்படுகின்றன.
*புதிய தலைமுறையினர் வருங்கால மாற்றத்திற்கு ஏற்ற தலைமை பண்புகளை பெற்று உலகை வழிநடத்தும் வகையில், 24/7 நேர கல்வி பயன்பாடுகளுடன், புதுமையான கல்வி கற்கும் அனுபவத்தை வழங்குகிறது என்.யு.எஸ்.,-ன் ‘யுனிவர்சிட்டி டவுன்’.  பல்கலைக்கழகத்தின் எந்த ஒரு பகுதிக்கும் செல்ல வளாகத்திற்குள் இலவச பஸ். நவீன உணவகங்கள், லேர்னிங் கப்வே, மல்ட்டி மீடியா மையங்கள் என அனைத்தும் பல்கலைக்கழக நகரத்தில் இடம் பெற்றுள்ளன.
*கல்வி வகுப்பறையில் மட்டுமே கற்கப்படும் விஷயமல்ல; புத்தாக்க சிந்தனைகளை உருவாக்கும் மற்றும் ஊக்குவிக்கும் வகையிலான சூழலை வளாகம் முழுவதும் ஏற்படுத்திக்கொடுப்பதும் ஒரு கல்வி நிறுவனத்தின் முக்கியப் பணி என்பதை உணர்ந்து நவீன வசதிகளுடன் மாணவ, மாணவியருக்கு வித்தியாசமான அனுபவத்தை வழங்குகிறது.
*என்.யு.எஸ்.எஸ்.யு., எனும் பல்கலைக்கழக மாணவர் அமைப்பில் 14 கிளப்களும், 11 குழுக்களும், உள்ள நிலையில், கலை மையத்தில் 23 வேறுபட்ட கலை குழுக்கள் இடம்பெற்றுள்ளன. மொத்தம் 69 மாணவர் குழுக்கள் உள்ளன. விளையாட்டில் ஆர்வம் உள்ள மாணவர்கள் 70 வேறுபட்ட விளையாட்டுகளில் விரும்பியதை தேர்வு செய்துகொள்ளலாம்.

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக இளநிலை அட்மிஷன் பிரிவு இயக்குனர் ராஜாராம், தினமலருக்கு அளித்த சிறப்பு பேட்டி:
உலகத்தரம் வாய்ந்த பல்கலைக்கழகமாக என்.யு.எஸ்., திகழ்வதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. தரமான கல்வி வழங்க வேண்டும் என்பதில் தீவிரமாக செயல்படும் பல்கலைக்கழகம், உணவு, உடை, சுற்றுச்சுழல் உட்பட அனைத்து விதத்திலும் சர்வதேச மாணவ, மாணவிகளுக்கு ஏதுவான வசதியை அளிக்கிறது.
‘எம்.ஐ.டி., ஜார்ஜியா பல்கலைக்கழகம் உட்பட 300க்கும் மேற்பட்ட சிறந்த கல்வி நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிற கல்வி நிறுவனங்களுடனான ஒப்பந்த நடைமுறைகளை மேற்கொள்ள பிரத்யேக பிரிவு இயங்கிவருகிறது.
பாடத்திட்டம்: துறை சார்ந்த தொழில்நிறுவனங்களில் வல்லுனர்களுடன் இணைந்து செயலாற்றும் வாய்ப்பும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுவதால், தொழில்நிறுவனங்களின் செயல்பாடு, நுணுக்கங்களை அறிந்துகொள்வதோடு அவற்றின் தேவையையும் நன்கு உணர்ந்துகொள்கின்றனர். சில சமயங்களில் தொழில்நிறுவனங்களுக்கு புது சிந்தனைகளை மாணவர்கள் வழங்குகின்றனர். இவ்வாறு தொழில் நிறுவனங்கள், மாணவர்கள் என இருதரப்பினரும் பயன்பெறும் வகையிலான வாய்ப்பை என்.யு.எஸ்., அமைத்துக்கொடுக்கிறது. இந்திய மாணவர்களுக்கு சிறப்பு உதவித்தொகையும் வழங்கப்படுகிறது.
பாடத்திட்டத்தை பொறுத்தவரை, விரும்பிய முறையில் கல்வி கற்க மாணவர்களுக்கு போதிய சுதந்திரம் அளிக்கப்படுகிறது. ‘ஓபன் புக்’ தேர்வும் அதில் குறிப்பிடத்தக்கது. சுய விருப்பத்தின் அடிப்படையில், மாணவர்கள் தாங்கள் விரும்பும் பாடப்பிரிவை தேர்ந்தெடித்து படிக்க முடியும். அதன்மூலம் ஒரு இன்ஜினியரிங் மாணவர் கலை அல்லது இசை சம்பந்தமான பாடப்பிரிவையும் படிக்க முடியும். இதனால்,  பிற துறை மாணவர்களுடன் கலந்துரையாடும் வாய்ப்பும் கிடைக்கிறது.
அனைத்து துறைகளிலும் ஆராய்ச்சியில் ஆர்வம் மிகுந்தவர்கள் இப்பல்கலைக்கழக பேராசிரியர்களாக நியமிக்கப்படுகின்றனர். இப்பல்கலைக்கழகத்தில் சேர சர்வதேச மாணவர்களிடம் அதிக போட்டி நிலவுவதால், அவர்களில் சிறந்த மாணவர்களை தேர்வு செய்ய சேர்க்கை விதிமுறைகளை என்.யு.எஸ்., பின்பற்றுகிறது. பொதுவாக 90 சதவீதத்திற்கும் அதிமான மதிப்பெண் பெற்றவர்களுக்கு இப்பல்கலையில் சேர்க்கை பெற வாய்ப்புள்ளது. சிறந்த மாணவர்களுக்கு பல்வேறு சலுகைகள் மற்றும் உதவித்தொகை வழங்கப்படுகின்றன. இவ்வாறு ராஜாராம் தெரிவித்தார்.
மாணவர் கருத்து:
“பாடத்திட்டம் நெகிழ்வுத் தன்மையுடன் இருப்பதால், மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான முறையில் கல்வி கற்க முடிகிறது. இரண்டாம் ஆண்டே பொறியியல் படித்தாலும் நான் இப்போதே ஆய்வில் ஈடுபடுகிறேன். இதுபோல் பிற மாணவர்கள் அவர்களுக்கு விரும்பிய பிரிவை தேர்வு செய்ய இக்கல்வித் திட்டம் அனுமதிக்கிறது. இதர திறன்களை வளர்க்கும் வகையில் பல்கலைக்கழகத்தில் செயல்படும் பல்வேறு கிளப்புகளில், விரும்பியவற்றில் சேரலாம். தங்களுக்குள்ள திறமையை வெளிக்கொணர இப்பல்கலைக்கழகம் உரிய வாய்ப்பு அளிக்கிறது. இப்பல்கலைக்கழகத்தில் சேர்க்கை பெறுவதற்கு முன் சில தயக்கங்கள் இருந்தாலும், தற்போது இப்பல்கலைக்கழகத்தை படிக்கும் தருணங்களை மகிழ்ச்சியானதாகவும், எனது தேர்வு மிகச் சரியானது என்றும் உணர்கிறேன்.” என்கிறார் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் இன்ஜினியரிங் பயிலும் தமிழக மாணவர் ஹரி கிருஷ்ணன்.
பாதுகாப்பு, சுகாதாரம், உள்கட்டமைப்பு வசதிகளுடன் பல்வேறு நாடுகளின் கலாச்சார, பண்பாடுகள் சங்கமிக்கும் இடமாக விளங்கும் கல்வி நிறுவனங்கள் சிறந்த கல்வியை போதித்து, இதர திறன்களை வளர்ப்பதுடன், மகிழ்ச்சியான அனுபவத்தையும், பிரகாசமான எதிர்காலத்தையும் வழங்கும்பட்சத்தில் எந்த கல்வி நிறுவனமும் என்.யு.எஸ் போன்று உலக மக்களின் பேராதரவை பெறும் என்பதில் சந்தேகமில்லை.

இந்திய மாணவர்களுக்கான சேர்க்கை முறை:
நாடுகளுக்கு நாடு கல்வி முறை வேறுபட்டிருக்கும் நிலையில், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் இளநிலை பட்டப்படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கான சேர்க்கை தகுதிகளை தனித்தனியே வகுத்துள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரை, எந்த வாரிய கல்வித்திட்டத்தில் 12ம் வகுப்பு படித்த மாணவரும், அல்லது படித்துக்கொண்டிருக்கும் மாணவரும் என்.யு.எஸ்.,ல் சேர்க்கை பெற விண்ணப்பிக்கலாம். அதனுடன் சில கூடுதல் தகுதிகளையும் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் வரையறுத்துள்ளது. 12ம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் மாணவர்கள், சேர்க்கை பெற விண்ணப்பிக்கும் ஆண்டிற்குள் 12ம் வகுப்பு தேர்ச்சி பெறுவது அவசியம். மருத்துவம், பல்மருத்துவம், சட்டம், நர்சிங் போன்ற படிப்புகளை பொறுத்தவரை, நிபந்தனைகளின் கீழ் தகுதியுள்ள மாணவர்களுக்கு பல்கலைக்கழகத்தால் ஜூன் மாதத்தில் ‘அப்டிடியூட்’ தேர்வு நடத்தப்படுகிறது.
மாநில வாரிய கல்வித் திட்டத்தின்கீழ் 12ம் வகுப்பு படித்த மாணவர்கள் ‘சேட்’ (Scholastic Assessment Test) தேர்வை அவசியம் எழுத வேண்டும். ‘ரிசனிங்’ மற்றும் பாடப்பிரிவுகளுக்கான தேர்வு மதிப்பெண்களின்படி சேர்க்கை வழங்கப்படும்.
ஆர்க்கிடெக்சர், மருத்துவம், பல்மருத்துவம், இன்டஸ்டிரியல் டிசைன், சட்டம், இசை, நர்சிங் ஆகிய படிப்புகளுக்கு விண்ணப்பித்தவர்களில் ‘சார்ட்லிஸ்டட்’ மாணவர்களுக்கான அடுத்தகட்ட கூடுதல் மற்றும் நேர்முகத் தேர்வு இ-மெயில் வாயிலாக அறிவிக்கப்படுகிறது.
ஆங்கில திறன்:
ஆங்கில மொழியிலேயே பெரும்பாலான பாடப்பிரிவுகள் வழங்கப்படுவதால் அங்கு பயில விரும்பும்  மாணவர்கள் உரிய ஆங்கில திறன் பெற்றிருக்க வேண்டும் என்பதில் பல்கலைக்கழகமும், சிங்கப்பூர் அரசும் உறுதியாக உள்ளது.
கல்விக் கட்டணம்:
இளநிலை படிப்புகளுக்கான கல்விக் கட்டணம் ஆண்டுக்கு ரூ.7 லட்சத்தில் இருந்து ரூ.19 லட்சம் வரை பாடப்பிரிவைப் பொறுத்து வேறுபடுகிறது. எனினும், சிறந்த மாணவர்களுக்கு பல்கலைக்கழகம் உதவித்தொகை வழங்குகிறது. இப்பல்கலைக்கழகத்தில் அட்மிஷன் பெறும் மாணவர்களுக்கு வங்கிகள் எளிதில் கல்விக் கடன் வழங்குகின்றன.
அட்மிஷன் ஆரம்பம்:
இப்பல்கலைக்கழகத்தில் இளநிலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை ஓவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதமே துவங்கிவிடுகிறது. இந்தியாவில் நடத்தப்படும் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளுக்கு முன்பே விண்ணப்பிக்க வேண்டிய தேதி நிறைவடைகிறது. தற்போது இந்தியாவில் எந்த கல்வி முறையிலும் 12ம் வகுப்பு படித்துகொண்டிருக்கும் மாணவ, மாணவியரும் என்.யு.எஸ்.-ல் அடுத்த கல்வியாண்டில் சேர விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: மார்ச் 13, 2013.
இது குறித்த விரிவான விவரங்களுக்கு: www.nus.edu.sg/oam/index.html
பல்கலைக்கழக இணையதளம்:  www.nus.edu.sg