>>>தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை துவங்க...

"சுயநிதி கலை - அறிவியல் கல்லூரிகளை துவங்குவது தொடர்பான விண்ணப்பங்களை ஆய்வு செய்வதற்கு, மாவட்ட வருவாய் அலுவலரின் ஆய்வறிக்கை போதுமானது" என, அரசு அறிவித்துள்ளது. வரும் கல்வியாண்டு முதல், இது அமலுக்கு வருகிறது.
அரசு நிதியுதவி பெறாத தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை துவங்க, அரசு அனுமதி கோரும்போது, இதுவரை மாவட்ட கலெக்டரே ஆய்வறிக்கை அனுப்புவது வழக்கம். புதிதாக துவங்கப்படும் கல்லூரிக்கான நிலத்தின் விவரம், அந்த நிலம் விவசாய நிலமாக இருந்தால், அதற்கு உரிய அனுமதி பெற்றிருத்தல்; அந்நிலத்தில் கட்டடங்கள் கட்ட, நகர ஊரகமைப்புத் துறையின் ஒப்புதல் பெறப்பட்டுள்ள விவரம் போன்றவை கலெக்டரால் ஆய்வு செய்யப்படும்.
மேலும், கல்லூரியில் ஆய்வக கழிவுகளை அப்புறப்படுத்த என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன; போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதியா; சுற்றுப்புறச்சூழல் மற்றும் சுற்றுப்புற சுகாதாரம் குறித்தும் கலெக்டர் ஆய்வு மேற்கொள்வார்.
இத்துடன், மாற்றுத்திறனாளிகளுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் உட்பட, கட்டட அமைப்பு உள்ளிட்ட பல்வேறு விவரங்களை ஆய்வு செய்து, ஆய்வறிக்கையை கலெக்டர் அரசுக்கு தாக்கல் செய்வார். கல்லூரி துவங்குவதற்கான விண்ணப்பங்கள், ஆய்வு செய்வதற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டிய சரிபார்ப்பு படிவம் வெளியிடப்பட்டு, 45 நாட்களுக்குள் ஆய்வறிக்கை மற்றும் பரிந்துரையை கலெக்டர் அரசுக்கு அனுப்ப வேண்டும் என, விதிமுறை இருந்தது.
தற்போது இந்த உத்தரவில், மாற்றம் ஏற்படுத்தி அரசு உத்தரவிட்டுள்ளது. ஆய்வறிக்கை அனுப்பும் அதிகாரத்தை கலெக்டர்களுக்கு பதிலாக, மாவட்ட வருவாய் அலுவலர்களுக்கு வழங்கி, அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக, அரசு வெளியிட்டுள்ள உத்தரவில், "இனி வரும் காலங்களில் (2013 - 14 கல்வியாண்டு முதல்) சுயநிதி கலை - அறிவியல் கல்லூரிகளை துவங்குவது தொடர்பான விண்ணப்பங்களை ஆய்வு செய்வதற்கு மாவட்ட வருவாய் அலுவலரின் ஆய்வறிக்கை மற்றும் பரிந்துரை போதுமானது. மாவட்ட வருவாய் அலுவலர் தனது ஆய்வறிக்கை மற்றும் பரிந்துரையை, 90 நாட்களில் அரசுக்கு அனுப்ப வேண்டும்" என, தெரிவிக்கப்பட்டுள்ளது.