>>>வெளிநாட்டு மருத்துவப் படிப்பு - சில ஆலோசனைகள்

வெளிநாட்டிற்கு சென்று மருத்துவப் படிப்பை மேற்கொள்வது பெரிய விஷயமல்ல என்றாலும், திரும்பவும் இந்தியா வந்து மருத்துவராக பணிபுரிவதற்காக எழுத வேண்டிய ஸ்கீரினிங் டெஸ்ட் பற்றி யோசிக்க வேண்டியது அவசியம். அந்த தேர்வானது மிகவும் கடினமானதாக இருக்கிறது என்பதே பலரின் கருத்து.
அத்தேர்வில் சிலர் தேர்ச்சி பெற்றாலும், பலரால், பல முயற்சிகளுக்குப் பின்னரும், தேர்ச்சிப் பெற முடியவில்லை என்பதே இன்றைய நிலையாக இருக்கிறது.
குறைந்த கட்டணம்
வெளிநாட்டிற்கு சென்று மருத்துவம் படிக்க, இந்திய மாணவர்கள் விரும்புவதற்கு முக்கிய காரணம் கட்டணம் குறைவு என்பதுதான். இந்தியாவில், அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்காத மாணவர்கள், இங்குள்ள தனியார் கல்லூரிகளில் வசூலிக்கப்படும் அதிக கட்டணத்தை தவிர்க்க, மருத்துவ இளநிலைப் படிப்பை முடிக்க, ரஷ்யா, சீனா மற்றும் ஜார்ஜியா போன்ற நாடுகளுக்கு சென்று விடுகின்றனர்.
இந்தியாவில் சில தனியார் மருத்துவக் கல்லூரிகளில், ரூ.1 கோடி வரை வசூலிக்கப்படுகிறது. மேலும், நல்ல மருத்துவக் கல்லூரிகளில் இடம்பெற நடத்தப்படும் நுழைவுத்தேர்வுகளில் பல மாணவர்களால் தேர்ச்சிப் பெற முடிவதில்லை. எனவே, அவர்களுக்கு வெளிநாட்டு மருத்துவப் படிப்பே ஒரே தீர்வாக உள்ளது. ஹங்கேரி, போலந்து, ரஷ்யா, ஜிம்பாப்வே போன்ற நாடுகளில், முழு மருத்துவப் படிப்பிற்கான செலவு, ரூ.20 லட்சத்திற்குள் முடிந்து விடுகிறது.
நுழைவுத்தேர்வு கிடையாது
பல வெளிநாட்டு மருத்துவக் கல்லூரிகள், மாணவர்களை, அவர்களின் 12ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையிலும், ஆங்கிலப் புலமை அடிப்படையிலும் சேர்த்துக் கொள்கின்றன. தனி நுழைவுத்தேர்வு நடத்தப்படுவதில்லை. சில இடங்களில், அறிவியல் பாடங்கள் மற்றும் ஆங்கிலத்தில் குறைந்தபட்சம் 65% மதிப்பெண்கள் பெற்றிருந்தாலே போதும் என்ற நிலை உள்ளது.
முந்துகிறது சீனா
கடந்த காலங்களில், இந்திய மாணவர்களுக்கான, மருத்துவப் படிப்பு இலக்குகளாக, ரஷ்யா மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளே இருந்தன, ஆனால் தற்போது, சீனாவை நோக்கிச் செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிரித்து வருகிறது.
சீனாவில், 1.76 மில்லியன் மாணவர்களுடன், 280 மருத்துவக் கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. கடந்த 2010ம் ஆண்டில், குறைந்தபட்சம் 8000 இந்திய மாணவர்கள் சீன மருத்துவக் கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ளார்கள் என்று ஒரு புள்ளிவிபரம் தெரிவிக்கிறது.
ஸ்கீரினிங் தேர்வு
வெளிநாட்டு மருத்துவப் படிப்பை முடித்து இந்தியாவிற்கு வரும் பட்டதாரிகள், இங்கு மருத்துவத் தொழிலை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கும் பொருட்டு நடத்தப்படும் நுழைவுத் தேர்வு வெளிநாட்டு மருத்துவப் பட்டதாரி தேர்வு(FMGE - Foreign Medical Graduate Examination) எனப்படும். கடந்த 2002ம் ஆண்டு இந்தத் தேர்வை இந்திய மருத்துவக் கவுன்சில் அறிமுகப்படுத்தியது. இதன்படி, ஏதேனும் ஒரு வெளிநாட்டில் மருத்துவப் படிப்பை முடித்து, இந்திய மருத்துவக் கவுன்சிலிலோ அல்லது ஏதேனும் ஒரு மாநில மருத்துவக் கவுன்சிலிலோ, தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ பதிவு செய்து கொள்ள விரும்பினால், அவர் மேற்கண்ட தேர்வை எழுதி தேர்ச்சிப் பெற வேண்டியது கட்டாயம்.
இதன்மூலம், சம்பந்தப்பட்டவரின் அறிவு மற்றும் திறமை சோதிக்கப்படும். இந்த நுழைவுத்தேர்வை ஒரு வெளிநாட்டுப் பட்டதாரி எழுத வேண்டுமெனில், அவர் படித்த மருத்துவக் கல்லூரி, சம்பந்தப்பட்ட நாட்டு அரசாங்கத்தின் அங்கீகாரம் பெற்றதாக இருக்க வேண்டும் மற்றும் உலக சுகாதார நிறுவனத்தின்(WHO) டைரக்டரியில் பட்டியலிடப்பட்டதாகவும் இருக்க வேண்டும்.
தேர்வில் தேர்ச்சிப்பெறல்
வருடத்திற்கு 2 முறை, டெல்லியில், தேசிய தேர்வு வாரியத்தால் இந்த தேர்வு நடத்தப்படுகிறது. ஆங்கிலத்தில் நடத்தப்படும் இத்தேர்வில், மொத்தம் 300 மதிப்பெண்கள். Pre and para-clinical பாடங்களுக்கு 100 மதிப்பெண்களும், Para clinical பாடங்களுக்கு 200 மதிப்பெண்களும் ஒதுக்கப்படும்.
ஒருவர் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே, இத்தேர்வில் தேர்ச்சிப்பெற முடியும். இத்தேர்வில் வெற்றிபெற்ற ஒருவர், MCI அல்லது மாநில மருத்துவக் கவுன்சில்களுக்கு, நிரந்தர அல்லது தற்காலிக பதிவிற்காக விண்ணப்பிக்கலாம்.
போலி பல்கலைகள் ஜாக்கிரதை
சரியான ஆய்வு அவசியம்: ஒரு வெளிநாட்டுப் பல்கலையில் சேரும் முன்பாக, அது அந்நாட்டு அரசின் அங்கீகாரம் பெற்றதா மற்றும் WHO பட்டியலில் இடம்பெற்றதா என்பதை நன்கு சோதிக்கவும். மேலும், சம்பந்தப்பட்ட நாட்டிலுள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டும் விசாரிக்கலாம்.
பழைய மாணவர்: நீங்கள் சென்று படிக்க விரும்பும் வெளிநாட்டு மருத்துவக் கல்வி நிறுவனத்தில் ஏற்கனவே படித்த பழைய மாணவரிடம் விசாரித்து, அக்கல்லூரியின் கல்வித் தரம், பாடத்திட்டம், ஆசிரியர் தகுதிகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் போன்றவைகளை அறிந்து கொள்ளலாம்.
போலி ஆலோசகர்கள்: வெளிநாட்டு மருத்துவக் கல்வியைப் பொறுத்தவரை, போலி கல்வி ஆலோசகர்களுக்கு பஞ்சமில்லை. அவர்கள் பணத்திற்காக உங்களை எங்கு வேண்டுமானாலும் தள்ளி விடலாம். சில நாடுகளில், ஒரே வளாகத்தில் 3 மருத்தவக் கல்லூரிகள் கூட இயங்கும். எனவே, முன்னெச்சரிக்கை என்பது உங்கள் பொறுப்பு.
பெரிய கல்வி நிறுவனங்கள்
உலகெங்கிலும் உள்ள பல்கலைகள், தங்களின் மருத்துவப் படிப்புகளில் சேர, வெளிநாட்டு மாணவர்களை அழைத்தாலும், ஹார்வர்டு, ஆக்ஸ்போர்டு மற்றும் கேம்ப்ரிட்ஜ் போன்ற புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் இடம்பிடிப்பது மிகவும் கடினம். அவற்றின் நடைமுறைகள் மற்றும் செயல்திட்டங்களை விரிவாக அறிந்துகொள்ளுதல் மிகவும் அவசியம். அத்தகைய கல்வி நிறுவனங்களில் இடம்பெற MCAT போன்ற நுழைவுத்தேர்வுகளை எழுத வேண்டும்.
MCAT
மருத்துவப் படிப்பில் சேர விரும்பும் ஒரு மாணவரின் சிக்கல் தீர்க்கும், நுட்ப சிந்தனை, எழுதும் திறன், அறிவியல் அறிவு மற்றும் மருத்துவப் படிப்பிற்கு ஏற்ற உளப்பாங்கு பெற்றிருக்கிறாரா என்பதை ஆய்வு செய்ய இத்தேர்வு நடத்தப்படுகிறது. ஏறக்குறைய, அமெரிக்காவின் அத்தனை மருத்துவக் கல்வி நிறுவனங்களும், வெளிநாட்டு மாணவர்களிடம் MCAT தேர்வு மதிப்பெண்களை எதிர்பார்க்கின்றன.
வெளிநாட்டுப் படிப்பு - இந்தியாவில் வேலை
வெளிநாட்டில் மருத்துவம் படித்த பலர், இந்தியாவில் வந்து பணிபுரிவதையே விரும்புகிறார்கள். இதற்கு 2 காரணங்கள் உள்ளன. இந்தியாவில் உள்ள அதிக மக்கள்தொகையால், பலவிதமான நோயாளிகளை கையாண்டு, அதன்மூலம் தங்களின் அறிவை வளர்த்துக் கொள்ளலாம் என்பது முதல் காரணம். வெளிநாட்டிலுள்ள மொழிப் பிரச்சினை மற்றும் குடியுரிமை சிக்கல்கள் போன்றவை இரண்டாவது காரணம்.
சிலர், வெளிநாட்டுக் குடியுரிமைக்காக, அங்குள்ளவர்களை மணந்துகொள்ளும் சம்பவங்களும் நிறைய உண்டு.